தமிழகம் முழுவதும் இன்று கிராம சபை கூட்டம்

By செய்திப்பிரிவு

சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள 12,525 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் இன்று நடைபெறுகிறது. ஆண்டுதோறும் குடியரசு தினம் (ஜன.26), தொழிலாளர்கள் தினம் (மே 1), சுதந்திர தினம் (ஆக.15), காந்தி ஜெயந்தி (அக்.2), உலக நீர் தினம் (மார்ச் 23), உள்ளாட்சிகள் தினம் (நவ.1) ஆகிய 6 நாட்களிலும் தமிழகம் முழுவதும் உள்ள 12,525 கிராம ஊராட்சிகளிலும் ஊராட்சி தலைவர்கள், செயலாளர்கள் தலைமையில் கிராமசபை கூட்டம் நடத்தப்பட வேண்டும். இந்த கிராமசபை கூட்டங்களில் பொதுமக்கள் பங்கேற்பதும் அவசியம் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள 12,525 கிராம ஊராட்சிகளிலும் இன்று கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. முக்கிய ஆேலாசனைகள் இக்கூட்டத்தில், கிராம ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம், கிராம ஊராட்சி தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்வது, கிராம வளர்ச்சி திட்டம், அனைத்து கிராம மறுமலர்ச்சி திட்டம், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதிதிட்டம், பிரதமரின் ஊரக குடியிருப்பு திட்டம், அனைவருக்கும் வீடு திட்ட கணக்கெடுப்பு, பிரதமரின் கிராம சாலை திட்டம், தூய்மை பாரத இயக்கம், திடக்கழிவு மேலாண்மை நடவடிக்கைகள், நெகிழி கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு, ஜல் ஜீவன்இயக்கம், மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், வறுமை குறைப்புதிட்டம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட வேண்டும்.

தமிழகத்தில் பருவமழை தொடங்க உள்ளதால், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தொற்றுநோய் பரவாமல் கட்டுப்படுத்துவது தொடர்பாகவும் இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. மேலும், கிராமங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி தொடர்பான தகவல்களை மக்களுக்கு தெரிவிக்கும் விதமாக, விளம்பர தட்டிகளில் நோட்டீஸ் ஒட்ட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE