21 காவல் அதிகாரிகளுக்கு குடியரசு தலைவர் பதக்கம் - புலனாய்வு, தீயணைப்பு அதிகாரிகள், ஊர்காவல் படையினருக்கும் கவுரவம்

By செய்திப்பிரிவு

சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழக காவல் துறையைச் சேர்ந்த 21 பேருக்கு குடியரசுத் தலைவர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக டிஜிபி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்திய அளவில் தனிச் சிறப்புடன் பணியாற்றும் காவல் அதிகாரிகளுக்கு ஆண்டுக்கு இருமுறை குடியரசுத் தலைவர் பதக்கம் வழங்கப்படுகிறது. போலீஸாரின் செயல்பாடுகள், சாதனைகள் மற்றும் நன்மதிப்பு அடிப்படையில் பதக்கம் வழங்கப்படுகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான குடியரசுத் தலைவரின் தகைசால் பணிக்கான பதக்கம் தமிழ்நாடு காவல் துறையைச் சேர்ந்த இரு காவல் அதிகாரிகளுக்கு வழங்கப்படுகிறது. தாம்பரம் காவல் ஆணையர் அ.அமல்ராஜ், மேற்கு மண்டல ஐ.ஜி. க.பவானீஸ்வரிக்கு இந்த பதக்கங்கள் வழங்கப்படுகின்றன.

மேலும், குடியரசுத் தலைவரின் பாராட்டத்தக்க பணிக்கான பதக்கங்கள், தமிழ்நாடு காவல் துறையைச் சேர்ந்த 19 பேருக்கு வழங்கப்படுகின்றன. அவர்களது விவரம் :

சென்னை காவல் நுண்ணறிவுப் பிரிவு துணை ஆணையர் செ.அரவிந்தன், தருமபுரி மாவட்ட எஸ்.பி. ந.ஸ்டீபன் ஜேசுபாதம், ராமநாதபுரம் எஸ்.பி. பெ.தங்கதுரை, சென்னை மத்தியக் குற்றப் பிரிவு உதவி ஆணையர் சி.அனந்தராமன், கள்ளக்குறிச்சி மாவட்ட நில அபகரிப்பு தடுப்புப் சிறப்பு பிரிவு டிஎஸ்பி நா.பாலசுப்பிரமணியன், தனிப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை டிஎஸ்பி ஹ.கிருஷ்ணமூர்த்தி.

பெரம்பலூர் மாவட்ட தலைமையக கூடுதல் கண்காணிப்பாளர் த.மதியழகன், தஞ்சாவூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு டிஎஸ்பி ஜெ.ராஜு, சென்னை நுண்ணறிவுப் பிரிவு காவல் உதவி ஆணையர் ச.சங்கரலிங்கம், திருச்சி மாநகர திட்டமிட்டக் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் எ.இளங்கோவன் ஜென்னிங்ஸ், திருநெல்வேலி குற்றப் புலனாய்வுத் துறை சிறப்பு நுண்ணறிவு காவல் ஆய்வாளர் மா.ரவீந்திரன், சென்னை மேற்கு மண்டல மதுரவாயல் காவல் ஆய்வாளர் ஆ.சிவஆனந்த், சென்னை தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியக காவல் ஆய்வாளர் த.திருமலைக்கொழுந்து.

திருப்பூர் மாவட்டதனிப் பிரிவு காவல் ஆய்வாளர் செ.முத்துமாலை, கோவை உளவுப் பிரிவு காவல் ஆய்வாளர் மு.புகழ்மாறன், சென்னை தனிப் பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை காவல் உதவி ஆய்வாளர் தி.மாரியப்பன், சென்னை தலைமைச் செயலக குடியிருப்புக் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ரா.கமலக்கண்ணன், தமிழ்நாடு அதிதீவிரப்படை காவல் உதவி ஆய்வாளர் சு.தனபாலன், சென்னை தனிப்பிரிவுக் குற்றப் புலனாய்வு துறை காவல் உதவி ஆய்வாளர் சி.செண்பகவல்லி ஆகியோர் குடியரசுத் தலைவரின் பாராட்டத்தக்கப் பணிக்கான பதக்கம் பெற தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, மத்திய உள்துறை அமைச்சகத்தின் 2023-ம் ஆண்டுக்கான சிறந்த புலனாய்வு அதிகாரி விருதுக்கு தமிழக காவல் துறையை சேர்ந்த துணை ஆணையர் பொன்கார்த்திக் குமார், உதவி ஆணையர் விக்டர் எஸ்.ஜான், ஆய்வாளர்கள் கே.ரம்யா, ரவிகுமார், விஜயா, வனிதா, சரஸ்வதி, கோபாலகிருஷ்ணன் ஆகிய 8 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், தீயணைப்பு சேவை பதக்கத்துக்கு, தீயணைப்புத் துறை உதவி மாவட்ட அதிகாரி செல்லமுத்து முருகேசன், நிலைய அதிகாரி பரமசிவம்பிள்ளை இசக்கி, லீடிங் தீயணைப்பு வீரர் அழகர்சாமி தர்மராஜ், தீயணைப்பு வீரர்கள் சங்கரெட்டி கோவிந்தராஜ், கோ பினர் மனமோகன் ஆகிய 5 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

குடியரசு தலைவரின் ஊர்காவல் படையினருக்கான பதக்கத்துக்கு, தமிழகத்தைச் சேர்ந்த தனவேலு டீகாராம், எஸ்.மலைச்சாமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE