சதுரகிரி மலைப்பாதையில் பழங்குடியினர் கடைகள் வைக்க அனுமதி இல்லை - புலிகள் காப்பக துணை இயக்குனர் திட்டவட்டம்

By செய்திப்பிரிவு

ஸ்ரீவில்லிபுத்தூர்: சதுரகிரி மலைப்பாதையில் கடைகள் வைப்பதற்கு அனுமதிக்க முடியாது என பழங்குடியினர் உடனான பேச்சுவார்த்தையில் புலிகள் காப்பகத் துணை இயக்குனர் திலீப் குமார் திட்டவட்டமாக தெரிவித்தார். பழங்குடியினரின் வாழ்வாதாரத்திற்காக குடும்பத்தில் ஒருவருக்கு சூழல் மேம்பாட்டுக் குழுவில் பணி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

சதுரகிரி மலை அடிவாரமான தாணிப்பாறை ராம்கோ நகர் பழங்குடியின மக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 9-ம் தேதி முதல் வனப்பகுதியில் குடியேறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை குடியிருப்பு பகுதிகளுக்கு திரும்ப அழைத்து வருவதற்கான அமைதிப் பேச்சுவார்த்தை கடந்த 12-ம் தேதி சிவகாசி கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்றது. அதில் உடன்பாடு ஏற்படாததால் நேற்று ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் ராம்கோ நகர், அத்தி கோயில், செண்பகத்தோப்பு, வள்ளியம்மாள் நகர், அய்யனார் கோயில், ஜெயந்த் நகர் ஆகிய 6 பழங்குடியினர் கிராமங்களில் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இதில் வன உரிமைச் சட்டம் 2006 அனுமதித்துள்ள 11 வகையான பொருட்களை விற்பனை செய்வதை தடை செய்யக்கூடாது. சதுரகிரி மலைப்பாதையில் தண்ணீர், மூலிகை பானம், பூஜை பொருட்கள் விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும். மலை மாடுகளை வனப்பகுதியில் மேய்ச்சலுக்கு அனுமதிக்க வேண்டும். மயானத்திற்கு செல்ல சாலை அமைக்க அனுமதிக்க வேண்டும்.

அய்யனார் கோயில் குடியிருப்பில் பழைய வீடுகளை இடித்து புதிய வீடு கட்டுவதற்கும், 14 குடும்பங்களுக்கு பட்டா வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெயந்தி நகர் குடியிருப்பு செல்ல சாலை அமைக்க அனுமதிக்க வேண்டும். வனப்பகுதிக்கு சென்று வர அடையாள அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட ஒன்பது வகையான கோரிக்கைகள் பழங்குடியின மக்கள் சார்பில் முன் வைக்கப்பட்டது. இதில் உடன்பாடு எட்டப்படாததால் போராட்டம் தொடரும் என பழங்குடி இன மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் திலீப் குமாரிடம் கேட்டபோது, "மலைப்பாதையில் கடைகள் வைப்பதால் சுற்றுச்சூழல் மாசுபட்டு காட்டுத்தீ பரவும் அபாயம் ஏற்படுகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு சென்று வரும்போது காட்டு தீ பரவினால் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் மலைப்பாதையில் கடைகள் வைக்க யாருக்கும் அனுமதி இல்லை. பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்திற்காக சூழல் மேம்பாட்டு குழுவில் குடும்பத்தில் ஒருவருக்கு தற்காலிக அடிப்படையில் பணி வழங்கப்படும்.

மேலும் சதுரகிரி கோயில் மற்றும் அடிவாரத்தில் கடைகள் அமைக்க டெண்டர் விடும்போது, பழங்குடியினருக்கு முன்னுரிமை வழங்க அறநிலையத்துறை மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுக்கப்படும். பழங்குடியினருக்கு அடையாள அட்டை வழங்க சட்டத்தில் வழிவகை இல்லை. வன உரிமை சட்டம் அனுமதித்த 11 வகையான பொருட்களை சேகரிப்பதற்கு பழங்குடியினருக்கு எந்த தடையும் விதிக்கவில்லை. பழங்குடியின மக்கள் குடியிருப்புகளுக்கு திரும்ப வேண்டும்" என்றார்.

முன்னதாக, முன்னாள் எம்எல்ஏக்கள் பொன்னுபாண்டியன், ராமசாமி தலைமையில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் மலைப்பாதையில் கடைகள் வைக்க அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE