தந்தை, மகன் தற்கொலை | ஆளுநரும், மத்திய அரசும் பொறுப்பேற்க வேண்டும் - ரவிக்குமார் எம்பி

By அ.முன்னடியான்

புதுச்சேரி: நீட் தேர்வு காரணமாக தந்தை, மகன் தற்கொலைக்கு தமிழக ஆளுநரும், மத்திய அரசும் பொறுப்பேற்க வேண்டுமென ரவிக்குமார் எம்பி தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் தொகுதி எம்பியும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளருமான ரவிக்குமார், அக்கட்சியின் நிர்வாகிகளோடு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை நேற்று சட்டப்பேரவையில் சந்தித்து மனு ஒன்றை அளித்தார்.

அந்த மனுவில், இதர பிற்படுத்தப்பட்ட சாதியினர் இடஒதுக்கீடு பெறுவதற்கு கடந்த 2001-ம் ஆண்டு வரையறை செய்தது போல், புதுச்சேரியில் வாழும் அனைத்து பட்டியல் சாதியினருக்கும் 2001-ம் ஆண்டு வரையறை செய்து இட ஒதுக்கீடு வழங்க புதுச்சேரி அரசு அரசாணை வெளியிட வேண்டும். இதர பிரிவினருக்கு இட ஒதுக்கீட்டில் பின்பற்றப்படும் நடைமுறையை, பட்டியலின சமூகத்தினருக்கும் பின்பற்ற வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

பின்னர் ரவிக்குமார் எம்பி செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய அரசும், தமிழக ஆளுநரும் நீட் தேர்வு தொடர்பாக மேற்கொண்டுள்ள மக்கள் விரோத நிலைப்பாட்டின் காரணமாக தமிழகத்தில் மகன் மற்றும் தந்தை ஆகிய இரண்டு உயிர்கள் பறிபோய் உள்ளது. இதற்கு ஆளுநரும், மத்திய அரசும்தான் பொறுப்பேற்க வேண்டும். செல்வந்தர்களுக்கான பயிற்சியாகவே நீட் பயிற்சி உள்ளது. நீட் தேர்வு விவகாரத்தில் மேலும் உயிர்கள் பறிபோகாமல் இருக்க வேண்டுமானால் மத்திய அரசு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.

ஆளுநர்களை நியமனம் செய்யும் போது அந்தந்த மாநில முதல்வரை கலந்து ஆலோசித்து செய்ய வேண்டுமென பாஜக தங்களுடைய நிலைப்பாட்டை கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்ல எழுத்துப்பூர்வமாகவும் சர்க்காரிய ஆணையத்தில் மனு கொடுத்துள்ளது.
தற்போது பாஜகவிடம் அத்தகைய நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளதா என்பதை விளக்க வேண்டும். ஆகவே முதல்வரை கலந்து ஆலோசித்து வேறு ஆளுநரை மத்திய அரசு நியமிக்க வேண்டும். என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE