மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு ஆளுநர் துணைபுரிகிறார் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு

By அ.கோபால கிருஷ்ணன்

விருதுநகர்: மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு ஆளுநர் துணைபுரிந்துகொண்டிருக்கிறார் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றம் சாட்டினார்.

விருதுநகர் மாவட்டம் செங்குன்றாபுரத்தில் நேற்று நடைபெற்ற பல்வேறு மருத்துவமனை கட்டிடங்கள் திறப்பு விழாவில் பங்கேற்றபோது அவர் அளித்த பேட்டியில், "மத்திய அரசால் தமிழக அரசு மருத்துமனைகளுக்கு வழங்கப்பட்ட லக்சயா சான்றிதழ் 6 ஆண்டுகளுக்கு 34ம், கடந்த ஒரே ஆண்டில் 43ம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மத்திய அரசு சான்றிதழ் பெற்றுள்ள மொத்த எண்ணிக்க 77. கடந்த ஓராண்டில் மட்டும் 43 சான்றிதழ்கள் பெற்றுள்ளோம்.

தேசிய தரத்திற்கான சான்றிதழைப் பொறுத்தவரை 2013ம் ஆண்டு முதல் மத்திய அரசால் தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ள ஒட்டுமொத்த சான்றிதழ்களின் எண்ணிக்கை 478. கடந்த ஆண்டு மட்டும் 239 சான்றிதழ்களைப் பெற்றுள்ளோம். 50 சதவிகித சான்றிதழ்கள் ஒரே ஆண்டில் கிடைக்கப் பெற்றுள்ளது. அதிமுக ஆட்சிக்கும் திமுக ஆட்சிக்குமான வித்தியாசம் இதுதான். மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் விருதுநகர் மாவட்டத்தில் 100 சதவிகிதம் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

நேற்றுமுன்தினம் தொடங்கிய 19 வகையான துணை மருத்துவ படிப்புகளில் 2,826 இடங்களுக்கான கலந்தாய்வு வரும் 22 தேதி நிறைவடையும். மருத்துவ உயர்படிப்பான எம்.டி., எம்.எஸ்., மற்றும் எம்.டி.எஸ் கலந்தாய்வு கடந்த 7ம் தேதி தொடங்கி நேற்று மாலை 3 மணியுடன் நிறைவடைந்துள்ளது" என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசுகையில், "நாங்குநேரி பள்ளி மாணவனுக்கும் அவனது தங்கைக்கும் சிறப்பான சிகிச்சையும் மனநல ஆலோசனையும் வழங்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு உயர்சிகிச்சை அளிக்க முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளதால் சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் 3 பேர் தற்போது சிகிச்சை அளித்து வருகின்றனர். சிகிச்சை முழுமையடையும் வரை அவர்கள் அங்கேயே இருந்து சிகிச்சை அளிப்பார்கள்.

நீட் தேர்வில் தோல்வியடைந்த சென்னை மாணவன் மற்றும் அவரது தந்தை இறப்பு பெரும் மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது. மாணவர்களுக்கு மனநல சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருகிறது. நீட் தேர்வு மட்டுமே வாழ்க்கை இல்லை. உயிரிழந்த மாணவன் வீட்டிற்கு முதல்வரும் நானும் நேரில் சென்று அஞ்சலி செலுத்த உள்ளோம். நீட் தேர்வுக்கு ஒட்டுமொத்த விலக்கு வேண்டும் என்பது தமிழக மக்களின் கோரிக்கை. அந்த உணர்வை பிரதிபளிக்கும் வகையில்தான் சட்டசபையில் நீட் தேர்வுக்கு எதிரான மசோதா நிறைவேற்றப்பட்டது.

ஆனால், அந்த மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வந்தார். அதன் பின்னர்தான், சட்டரீதியாக முதல்வர் மீண்டும் ஒருமுறை மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பினார். வேறு வழியில்லாமல் அந்த மசோதாவை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார். குடியரசுத் தலைவர் அதை உடனடியாக உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பினார். பின்னர், அங்கிருந்து ஆயுஷ் அமைச்சகத்திற்கும், உயர்கல்வி அமைச்சகத்திற்கும், தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறைக்கும் அனுப்பினார்கள். இதுதொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் கலந்துபேசி அதற்கான விளக்கங்களை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளோம்.

பெறப்பட்ட விளக்கங்களை உள்துறை அமைச்சகம் குடியரசுத் தலைவருக்கு அனுப்புவார்கள். அதன்பின், நீட் தேர்வுக்கு விலக்கு அளிப்பதா இல்லையா என்ற முடிவை குடியரசுத் தலைவர் எடுப்பார். குடியரசுத் தலைவர் விலக்கு அளிக்கிறேன் என்று அறிவிக்க வேண்டும். அதுதான் எல்லோருடைய விருப்பமும். அவ்வாறு குடியரசுத் தலைவர் அறிவித்தால் இதில் ஆளுநருக்கு எவ்வித பங்கும் கிடையாது. ஆளுநரின் பேச்சு ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது.

ஆளுநர் என்பவர் நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு தருபவராகவும், நல்ல திட்டங்களுக்கு துணைபுரிவோராகவும் இருக்க வேண்டும். ஆனால், மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு ஆளுநர் துணைபுரிந்துகொண்டிருக்கிறார். இதற்குத் தீர்வு குடியரசுத் தலைவரிடமிருந்து பெறப்படும் விலக்கு அல்லது ஆட்சி மாற்றம் இவைகள்தான் தீர்வாக இருக்கும் என்று தமிழக முதல்வர் கருதுகிறார். நிச்சயம் நல்ல தீர்வு கிடைக்கும்" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE