நீட் தேர்வு இல்லாதிருந்தாலும் தற்கொலை செய்துகொண்ட மாணவருக்கு இடம் கிடைத்திருக்க வாய்ப்பே இல்லை: நாராயணன் திருப்பதி 

By செய்திப்பிரிவு

சென்னை: "நீட் தேர்வே இருந்திருக்கவில்லையென்றால் கூட முன்று வருடங்களுக்கு முன்பு 424 மதிப்பெண்கள், அதிலும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பெற்ற மாணவன் ஜெகதீஸ்வரனுக்கு உறுதியாக அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்திருக்க வாய்ப்பே இல்லை" என்று பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.

சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த ஜெகதீசன் என்ற மாணவர் மூன்று முறை நீட் தேர்வு எழுதியும் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காமல் விரக்தியில் தற்கொலை செய்து கொண்டது வருத்தமளிக்கிறது. சைதன்யா பள்ளியில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 500க்கு 424 மதிப்பெண் பெற்றார். நீட் தேர்வில் முதல் மற்றும் 2-வது முயற்சியில் 100 மதிப்பெண்களுக்கு குறைவாகவே பெற்றதாகவும், மூன்றாவது முயற்சியில், 300 மதிப்பெண்களுக்கு குறைவாகவே எடுத்ததாகவும் மாணவனின் தந்தை கூறியது குறிப்பிடத்தக்கது.

அரசு கல்லூரியில் இடம் கிடைக்காததால் தற்கொலை செய்து கொண்டதாக மாணவனின் தந்தை நேற்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. நீட் தேர்வு இல்லாதிருந்தாலும், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 424 மதிப்பெண்களுக்கு எந்த ஒரு அரசுக் கல்லூரியிலும் அனுமதி கிடைத்திருக்காது என்பதும், மாநில பாடத்திட்டத்தில் படித்திருந்தாலும் கூட கவுன்சிலிங்கில் இடம் கிடைத்திருக்காது என்பதும் மறுக்க முடியாத உண்மை.

அதேபோல நீட் தேர்வில் முதல் இரண்டு முயற்சிகளில் 100 மதிப்பெண்களுக்கு குறைவாகவும், மூன்றாவது முயற்சியில் 300 மதிப்பெண்களுக்கு குறைவாகவும் எடுத்துள்ளார். அரசு மருத்துவக் கல்லூரிகளில் நீட் தேர்வுக்கான இந்த ஆண்டுக்கான கட் ஆஃப் மதிப்பெண்கள் பின்வருமாறு, OC-606, BC-560, MBC-532, SC-452, SCA-383, BCM-542, ST-355, ஆகவே, அவர் எந்த சமூகத்தை சேர்ந்தவராக இருந்திருந்தாலும் நீட் தேர்வு இருந்திருந்தாலும், இல்லாதிருந்தாலும் மருத்துவ படிப்புக்கு அரசு கல்லூரிகளில் அனுமதி கிடைப்பதற்கான வாய்ப்பே இல்லை.

நீட் தேர்வே இருந்திருக்கவில்லையென்றால் கூட முன்று வருடங்களுக்கு முன்பு 424, அதிலும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பெற்ற அந்த மாணவன் உறுதியாக அரசு கல்லூரியில் இணைந்திருக்க வாய்ப்பே இல்லை. நீட் தேர்வு என்ற திட்டம் இருந்ததாலேயே அவருக்கு மேலும் மூன்று ஆண்டுகள் மருத்துவப் படிப்பு படிக்க முயற்சி செய்வதற்கு வாய்ப்பு கிடைத்தது. ஒருவேளை, அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தால் நீட் தேர்வின் மூலம் மட்டுமே அந்த வாய்ப்பு கிடைத்திருக்கும்.

ஆனால், நேற்றிலிருந்து திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் மற்றும் தமிழக ஊடகங்கள், ஏதோ நீட் தேர்வினால்தான் அந்த மாணவன் தற்கொலை செய்து கொண்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவது முறையல்ல. திமுக போன்ற கட்சிகள் இதுபோன்ற மலிவு அரசியலை செய்வதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், தமிழக ஊடகங்கள் தொடர்ந்து பதட்டத்தை ஏற்படுத்துவது அதிர்ச்சியளிக்கிறது.

தற்கொலை செய்துகொண்ட இருவரின் இழப்பும் தாங்க முடியாததுதான், வருத்தம்தான் என்றாலும் சில அரசியல்வாதிகளும் ஒரு சில ஊடகங்களும் உண்மை நிலையினை உலகுக்கு சொல்லாமல், உணர்ச்சிகளை தூண்டிவிட்டு பதட்டத்தை உருவாக்குவது பொறுப்பற்ற செயல். நீட் தேர்வு என்ற ஒன்று இல்லாமலே இருந்திருந்தால்கூட, 5000 இடங்களை மட்டுமே கொண்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் 500க்கு 424 என்ற மதிப்பெண்ணுக்கு அதிலும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில், மூன்று வருடங்களுக்கு முன்னர் அரசு மருத்துவக் கல்லூரியில் பயின்றிருக்க முடியாது என்பதே நிதர்சனமான உண்மை.

இரு உயிர்களை இழந்துள்ளது ஈடு செய்ய முடியாததுதான். ஆனால், அரசியல் ஆதாயத்துக்காக மரணங்களில் அரசியல் செய்வதை கைவிட்டு, தனியார் மருத்துவக் கல்லூரிகளின் நலன் கருதி செயல்படும் மலிவு அரசியலை கைவிட்டு, உண்மைக்குப் புறம்பான தகவல்களை பதிவு செய்வது நியாயமற்ற, பொறுப்பற்ற அராஜக செயல்" என்று அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE