“அதிமுகவுக்கு எதிராகவும், திமுகவுக்கு விசுவாசமாகவும் இருக்கிறார் திருநாவுக்கரசு” - செல்லூர் ராஜூ

By ஒய். ஆண்டனி செல்வராஜ்

மதுரை: ''திருநாவுக்கரசு மனசாட்சியை அடமானம் வைத்துவிட்டு, விலாசம் கொடுத்த அதிமுகவுக்கு எதிராகவும், திமுகவுக்கு விசுவாசமாகவும் இருக்கிறார்'' என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ காட்டமாக தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலையம் அருகில் வலையங்குளத்தில் வரும் 20-ம் தேதி அதிமுக மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டுக்கு அதிமுக தொண்டர்கள் மட்டுமில்லாது பொதுமக்களையும் அதிமுகவினர் அழைத்து வருகிறார்கள். இந்த மாநாட்டை பிரபலப்படுத்த வாகனப் பிரச்சாரம், சைக்கிள் பேரணி போன்ற பல்வேறு ஏற்பாடுகளை அதிமுகவினர் செய்து வருகின்றனர். மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் மதுரை முனிச்சாலை பகுதியில் இருக்கக் கூடிய ஓபுலா படித்துறையிலிருந்து அதிமுக மாநாடு இருசக்கர வாகன பேரணி நடந்தது. இந்தப் பேரணியை முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ இன்று தொடங்கி வைத்தார். இரு சக்கர வாகனங்களில் சென்ற கட்சியினருடன் செல்லூர் கே.ராஜூ தன்னுடைய காரில் பயணித்தார்.

இந்த இரு சக்கர வாகன பேரணியானது மதுரை முனிச்சாலை சாலை வழியாக அண்ணாநகர் வழியாக வந்து இறுதியாக கே.கே.நகர் ரவுண்டானில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சிலை அருகே நிறைவு பெற்றது. எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகியோர் சிலைகளுக்கு செல்லூர் கே.ராஜூ மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

செல்லூர் கே.ராஜூ பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: ''1980-ம் ஆண்டில் எம்ஜிஆர் ஆட்சி கலைக்கப்பட்ட பிறகு எம்ஜிஆர் அவ்வளவுதான், இனி அரசியலிலும் ஜொலிக்க முடியாது, சினிமாவுக்கும் போக முடியாது என்றனர். அடுத்த தேர்தலில் மத்தியில் ஆளும் இந்திரா காங்கிரஸுடன் கருணாநிதி கூட்டணியிட்டு போட்டியிட்டார். இனிமேல் எம்ஜிஆருக்கு அரசியல் எதிர்காலமே இல்லை என்றனர். அனைத்து கருத்து கணிப்புகளையும் பொய்யாக்கி, மீண்டும் எம்ஜிஆர் ஆட்சியைப் பிடித்தார். இதுதான் எழுச்சி வரலாறு. அதுபோன்ற வரலாற்றை மதுரை அதிமுக மாநாடு படைக்க உள்ளது. இந்த மாநாட்டுக்குப் பிறகு திமுக ஒரு தேய்பிறையாகத்தான் இருக்கும். திமுக ஆட்சி மிக விரைவில் மக்களால் தூக்கி எறியப்படும் என்கின்ற நிலை ஏற்படும்.

திருநாவுக்கரசர் வருகின்ற மக்களவைத் தேர்தலில் மீண்டும் திருச்சி தொகுதியில் போட்டியிட வேண்டும், அதற்கு திமுகவின் ஆதரவு வேண்டும் என்பதற்காக தன்னுடைய மனசாட்சியை அடமானம் வைத்துவிட்டு பேசுகிறார். சட்டசபையில் ஜெயலலிதா தாக்கப்பட்ட விவகாரத்தில் மனசாட்சிக்கு விரோதமாக பதில் சொல்லியிருக்கிறார். பாஞ்சாலி சபதம் போல் அன்றைக்கு சட்டசபையில் திமுக அமைச்சர்கள் ஜெயலலிதாவுடைய சேலையை பிடித்து இழுத்து தலைமுடியை பிடித்து தாக்கிய காட்சிகள் நடந்தன. அன்று நடந்த சட்டசபை நிகழ்வுகளை அன்று அவையில் அமர்ந்திருந்த கே.பழனிசாமி தோலுரித்து காட்டி இருக்கிறார். அவருடைய நல்ல எண்ணம்தான் அவரை இன்று அவர் அதிமுகவினுடைய பொதுச் செயலாளராக ஆக்கி இருக்கிறது.

அறந்தாங்கியில் இருக்கக்கூடிய திருநாவுக்கரசு யாருக்கு அன்று தெரியும்? அவருக்கு விலாசம் கொடுத்தது அதிமுகதான். அன்றைக்கு பொதுச் செயலாளராக இருந்த எம்ஜிஆர், அவருக்கு அமைச்சராகவும், அமர்த்தி அழகு பார்த்தவர். தன் நேரடி பார்வையில் இருந்த இளைஞர் அணிக்கு மாநில செயலாளர் பதவியும் கொடுத்தார். அவருக்கு பிறகு ஜெயலலிதா, என்னதான் திருநாவுக்கரசுவுடன் கருத்து மாறுபாடு இருந்தாலும் மீண்டும் அவரை அழைத்து மரியாதை கொடுத்தார். ஆனால், இன்று திருநாவுக்கரசு, அதிமுக தொண்டர்களுக்கும், எம்ஜிஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் ஒரு மிகப் பெரிய துரோகத்தை ஏற்படுத்தி விட்டு திமுகவுக்கு விசுவாசமாக இருக்கிறார். உண்மையில் அவர் மனசாட்சி பிரகாரம் சொல்லவில்லை. மனசாட்சியை அடகு வைத்து வருகின்ற மக்களவைத் தேர்தலில் திமுக தொண்டர்கள் அவருக்கு வேலை பார்க்க வேண்டும், அதனுடைய தலைவர்களுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்பதற்காகதான் அவர் பேசி இருக்கிறார்'' என்று அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE