நீட் விலக்கு மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் வழங்குக: குடியரசுத் தலைவருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

By செய்திப்பிரிவு

சென்னை: ‘தமிழக சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பிய நீட் விலக்கு மசோதா, தமிழக மக்களின் ஒட்டுமொத்த கருத்தின் பிரதிபலிப்பு. அதனைச் செயல்படுத்துவதில் ஏற்படும் ஒவ்வொரு நாள் தாமதமும், தகுதியான மாணவர்களுக்கு மருத்துவ சேர்க்கை கிடைப்பதில் பாதிப்புகளை ஏற்படுத்துவதோடு மட்டுமல்ல, சமுதாயத்தில் விலைமதிப்பற்ற மனித உயிரிழப்புகள் ஏற்படுவதற்குக் காரணமாக அமைகிறது, எனவே நீட் விலக்கு மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்’ என்று கோரி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்நாடு இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை சட்டமுன்வடிவு, 2021-க்கு ஒப்புதல் அளிப்பதில் தாமதம் ஏற்படுவதால் ஏற்படும் துரதிருஷ்டவசமான விளைவுகள் குறித்து குடியரசுத் தலைவரின் கவனத்துக்குக் கொண்டுவந்து, நீட் தேர்வு விலக்கு தொடர்பான மசோதாவுக்கு விரைவில் ஒப்புதல் வழங்கிடக் கோரி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (ஆக.14) கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், ‘மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை (NEET) தமிழக அரசு தொடர்ந்து எதிர்த்து வருகிறது. நீட் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலான மருத்துவச் சேர்க்கை, நகர்ப்புற மாணவர்களுக்கும், அதிக கட்டணம் செலுத்தி பயிற்சி பெறக்கூடிய மாணவர்களுக்குமே சாதகமாக உள்ளது. அடிப்படையிலேயே ஏழை எளிய மாணவர்களுக்கு எதிரானதாக இந்தத் தேர்வு முறை உள்ளது. நீட் போன்ற நுழைவுத் தேர்வின் அடிப்படையில் சேர்க்கை நடைபெறுவதை விட, பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே சேர்க்கை நடைபெற வேண்டுமென்றும், நுழைவுத் தேர்வு முறை மாணவர்களுக்குத் தேவையற்ற கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என்பது தமிழகத்தின் கருத்தாக உள்ளது.

நீட் அடிப்படையிலான மாணவர் சேர்க்கை செயல்முறை, ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு நீட் தேர்வினால் ஏற்படும் பாதகமான விளைவுகள் ஆகியவை குறித்து ஆராய்ந்திட, உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, அக்குழு விரிவான ஆய்வை மேற்கொண்டு, தீர்வுகள் குறித்த தனது பரிந்துரைகளைச் சமர்ப்பித்தது. இந்தக் குழுவின் அறிக்கை மற்றும் பல்வேறு விவாதங்களின் அடிப்படையில், தமிழ்நாடு இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை சட்டமுன்வடிவு, 2021' (சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 43/2021), தமிழக சட்டமன்றத்தில் 13-9-2021 அன்று நிறைவேற்றப்பட்டு, 18-9-2021 அன்று தமிழக ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.

ஆளுநரால் ஐந்து மாத காலத்துக்குப் பிறகு இச்சட்டமுன்வடிவு திருப்பி அனுப்பப்பட்டது. 8-2-2022 அன்று தமிழக சட்டமன்றத்தில் மீண்டும் இச்சட்டமுன்வடிவு அறிமுகப்படுத்தப்பட்டு, மறுபரிசீலனைக்குப் பிறகு மீண்டும் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறுவதற்கு ஏதுவாக ஆளுநருக்கு மீண்டும் அனுப்பப்பட்டது. தமிழக ஆளுநர், இந்த மசோதாவை ஒன்றிய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி, தற்போது நிலுவையில் உள்ளது.

தமிழக சட்டமன்றப் பேரவை நிறைவேற்றி அனுப்பிய சட்டமுன்வடிவு தொடர்பாக, ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் 21-6-2022 அன்று கோரியிருந்த விளக்கங்கள், ஒன்றிய உயர்கல்வி அமைச்சகம் 26.08.2022, 15.05.2023 ஆகிய தேதிகளில் கோரியிருந்த விளக்கங்கள், ஒன்றிய ஆயுஷ் அமைச்சகம் 13.01.2023 அன்று கோரியிருந்த விளக்கங்கள், ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் மூலம் பெறப்பட்டது.

ஒன்றிய அமைச்சகங்கள் கோரியிருந்த அனைத்து விவரங்களையும் தமிழக அரசு விரைவாக வழங்கியது. ஆனால், தமிழக சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பிய சட்டமுன்வடிவுக்கு இதுவரை ஒப்புதல் அளிக்கப்படாததால், நீட் அடிப்படையிலான மாணவர் சேர்க்கை முறையைப் பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் மனதில் மிகுந்த கவலையையும், மன அழுத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வின் மூலம் சேர்க்கை கிடைக்காத விரக்தியில் மாணவர்களும், சில நிகழ்வுகளில் அவர்களது பெற்றோர்களும் தற்கொலை செய்து கொள்ளும் பல்வேறு சோகமான சம்பவங்கள் நடந்துள்ளன.

அண்மையில்கூட, நீட் தேர்வில் தோல்வியடைந்த மன உளைச்சலில், சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த மாணவர் ஒருவரும், அவரது தந்தையும் தற்கொலை செய்து கொண்டனர். தமிழகத்தில் நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து, பிளஸ் 2 மதிப்பெண்கள் மூலம் மருத்துவ மாணவர் சேர்க்கை நடந்திருந்தால், இதுபோன்ற சோக நிகழ்வுகளை நிச்சயம் தவிர்த்திருக்க முடியும்.

தமிழக சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பிய நீட் விலக்கு மசோதா, தமிழக மக்களின் ஒட்டுமொத்த கருத்தின் பிரதிபலிப்பு. அதனைச் செயல்படுத்துவதில் ஏற்படும் ஒவ்வொரு நாள் தாமதமும், தகுதியான மாணவர்களுக்கு மருத்துவ சேர்க்கை கிடைப்பதில் பாதிப்புகளை ஏற்படுத்துவதோடு மட்டுமல்ல, சமுதாயத்தில் விலைமதிப்பற்ற மனித உயிரிழப்புகள் ஏற்படுவதற்குக் காரணமாக அமைகிறது. இந்த விவகாரத்தில் குடியரசுத் தலைவர் அவர்கள் உடனடியாகத் தலையிட்டு, தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட நீட் தொடர்பான மசோதாவுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும்’ என்று முதல்வர் அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, “நீட் விவகாரத்தில் தமிழக மாணவர்களின் எதிர்காலத்தைச் சிதைக்கும் வகையில் பேசி வரும் ஆளுநர் ஆர்.என்.ரவியைக் வன்மையாகக் கண்டிக்கும் அடையாளமாக ஆகஸ்ட் 15 அன்று, ஆளுநர் மாளிகையில், அவர் ஏற்பாடு செய்திருக்கும் தேநீர் விருந்தினைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்” என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன் விவரம்: நீட் பிரச்சினை | “ஆளுநர் மாளிகை தேநீர் விருந்தை புறக்கணிக்கிறோம்” - முதல்வர் ஸ்டாலின் அதிரடி

முன்னதாக, சென்னையில் நீட் தேர்வு தோல்வி காரணமாக கடந்த சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்ட மாணவர் ஜெகதீஸ்வரனின் தந்தை செல்வசேகர் இன்று அதிகாலை தற்கொலை செய்து கொண்டார். அது குறித்த இரங்கல் செய்தியில், பெற்றோருக்கும் மாணவர்களுக்கும் முதல்வர் ஸ்டாலின் பகிர்ந்த செய்தி > எந்தச் சூழலிலும் உயிரை மாய்த்துக் கொள்ளும் சிந்தனை வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின் அறிவுரை

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்