புதுச்சேரி | கையால் மனிதக் கழிவுகளை அகற்றுவதை முற்றிலும் தடுக்க 3 கமிட்டிகள் அமைப்பு

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: கையால் மனிதக் கழிவுகளை அகற்றுவதை முற்றிலும் தடுக்க, புதுச்சேரியில் புதிதாக 3 கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பணியில் ஈடுபட்டோருக்கான மறு வாழ்வு திட்டங்களும் முழுமையாக நடை முறைப்படுத்தப்பட உள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதியன்று, கையால் மனிதக் கழிவுகளை அகற்றும் பணி நாடு முழுவதும் தடை செய்யப்பட்டது. எனவே யாரும், எந்த நிறுவனமும், கழிவுகளைகையால் அகற்றுவதற்கு தூய்மை பணியாளர்களை ஈடுபடுத்தக் கூடாது.

இதை மீறுபவர்களுக்கு 2013 சட்டத்தின் 8-வது பிரிவின்படி 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூ. 1 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். இருப்பினும் மனிதக் கழிவுகளை கையால் அள்ளுவது இன்னும் தொடர்ந்து வருகிறது. இவ்வாறு வேலை செய்யும் போது, கழிவு நீர் தொட்டிகளில் விழுந்து, உயிரிழப்புகள் நடப்பதும் நிகழ் கின்றன.

புதுச்சேரி மாநிலத்தில் இதை முற்றிலும் ஒழிக்க, தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக அரசு உயர் அதிகாரிகள் கூறியதாவது: கையால் கழிவுகளை அகற்றுவதை தடுத்து கண்காணிக்க முதல்வர் ரங்கசாமி தலைமையில் 18 பேர் கொண்ட உயர்மட்ட மாநில கண்காணிப்பு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, கீழ்நிலைகளில் கண்காணிக்க அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் மாவட்ட கண்காணிப்பு கமிட்டியும், துணை ஆட்சியர்கள் தலைமையில் கோட்ட அளவிலான கண்காணிப்பு கமிட்டியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வழக்கமாக நகராட்சி,கொம்யூன் பஞ்சாயத்துகள் கைகளால் கழிவுகளை அகற்றுவது தொடர்பாக அறிவுறுத்தல் செய்வதுதான் நடக்கும். நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து சட்டத்தின் கீழ் அபராதம் மட்டுமே விதிக்க முடியும். ஆனால், தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த 3 கமிட்டிகள் செயல் திட்டங்களைத் தீட்டி, கைகளால் கழிவுகளை அகற்றும் பணிகளை முற்றிலும் தடுக்க உள்ளது. அத்துடன் இத்தொழிலில் ஈடுபடும் நபர்களைக் கண்டறிந்து அவர்கள் மறுவாழ்வுக்கான திட்டங்களும் தீட்டப்பட உள்ளன" என்று குறிப்பிட்டனர்.

மறுவாழ்வுக்கான திட்டங்கள் தொடர்பாக விசாரித்தபோது, "கழிவுகளை கையால் அகற்றும் தூய்மை பணியாளர்களின் சுய வேலை வாய்ப்பு திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்துகிறது. தூய்மை பணியாளர்களின் மறுவாழ் வுக்காக உதவிகளும் அளிக்கப்படுகின்றன. அதன்படி, குடும்பத்தில் உள்ள ஒரு தூய்மை பணியாளருக்கு ரூ.40 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்படுகிறது. தூய்மை தொழிலாளர்கள் மற்றும் அவர்களைச் சேர்ந்தவர்களின் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு 2 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம்உதவி அளிக்கப்படுகிறது.

சுகாதாரம் தொடர்பான சுய வேலைவாய்ப்பு திட்டங்களில் கடன் பெறுவோருக்கு ரூ.5 லட்சம் வரை மூலதன மானியம் அளிக்கப்படுகிறது. கழிவுகளைகையால் அகற்றும் தூய்மை பணியாளர்களின் குடும்பங் களுக்கு, ‘ஆயுஷ்மான் பாரத்’,‘பிரதமரின் ஜன் ஆரோக்யா’ திட்டங்களின் கீழ் மருத்துவக் காப்பீடு அளிக்கப்படுகிறது. இந்த திட்டங்களை முழுவீச்சில் இக்கமிட்டிகள் விரைவில் நடைமுறைப்படுத்தவுள்ளன" என்று தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE