சென்னை, காஞ்சிபுரத்தில் பரவலாக கனமழை: பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை - ஆட்சியர்கள் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை, காஞ்சிபுரத்தில் நேற்றிரவு தொடங்கி தற்போதுவரை பரவலாக மழை பெய்து வருகிறது. இருப்பினும் இந்த இரு மாவட்டங்களிலும் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று காலை வெளியிட்ட அறிவிப்பில், தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்திருந்தது.

முன்னதாக சென்னையில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை விடிய விடிய இடி மின்னலுடன் கனமழை பெய்தது. கனமழை காரணமாக நகரின் பல்வேறு சாலைகளில் தண்ணீர் தேங்கியது. இதனால், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். கிண்டி - கத்திப்பாரா மேம்பாலத்தின் கீழ் சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீர் இன்று காலை மின் மோட்டார் கொண்டு அகற்றப்பட்டது. இதனால் அப்பகுதியில் தற்போது போக்குவரத்து சீரானது. பூந்தமல்லியில் குடியிருப்புப் பகுதிகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது.

இன்று காலை 8 மணி நிலவரப்படி சென்னை அம்பத்தூரில் அதிகபட்சமாக 11 செ.மீ மழை பதிவானது. பூந்தமல்லி, முகலிவாக்கம், வலசரவாக்கம், மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளில் 10 செ.மீ ஆலந்தூரில் 9 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

தொடர் மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பலத்த காற்றுடன் மழை பெய்ததால் துபாய், ஷார்ஜாவிலிருந்து சென்னை வந்த விமானங்கள் தரையிறங்க முடியாமல் பெங்களூருவுக்கு திருப்பிவிடப்பட்டன.

இந்நிலையில் இன்று காலையிலும் லேசான தூரலுடன் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனிடையே, சென்னை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுமா என்று மாணவர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு கிளம்பியது. இந்நிலையில், சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில் இன்று (ஆக.14) பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் என்று அந்தந்த மாவட்டங்களின் ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

ஆக.19 வரை மழை:தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல் நாளை முதல் வரும் 19 ஆம் தேதி வர ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE