கோவை: கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தின் கீழ் 906 குளங்களில் சோதனை ஓட்டப் பணி நிறைவு பெற்றுள்ளதாகவும், மீதமுள்ள 139 குளங்களில் சோதனை ஓட்டம் இம்மாத இறுதிக்குள் முடிக்கப்படும் எனவும் நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் போதிய மழை பெய்யாததால், நிலத்தடி நீர்மட்டம் ஆயிரம் அடிக்கும் கீழே சென்றது. இதனால் போதிய நீராதாரமின்றி பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் தரிசாக மாறின. இதற்கு தீர்வாக பவானி ஆற்றின் உபரி நீரை பயன்படுத்தி, கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் உள்ள 1,045 குளம், குட்டைகளை நிரப்ப ரூ.1,657 கோடி மதிப்பில் அத்திக்கடவு - அவிநாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டப்பணி, கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழக அரசின் நீர்வளத்துறையினரால் தொடங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து கடந்த 2021-ம் ஆண்டு இத்திட்டப்பணிக்காக ரூ.90 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டது. மொத்தம் ரூ.1,747 கோடி மதிப்பில் திட்டப் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்தது. இத்திட்டத்தின் கீழ் 945 கிலோ மீட்டர் தூரத்துக்கு பிரதான குழாய்களும், கிளைக் குழாய்களும் பதிக்கப்பட்டுள்ளன. இதில் 1,045 குளம், குட்டைகளுக்கு ஆண்டுக்கு 1.5 டிஎம்சி தண்ணீர் நிரப்பப்பட உள்ளது.
இத்திட்டத்துக்காக நீரேற்று நிலையங்களில் வெள்ளோட்டமும் விடப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் முதல் குழாய்களின் வழியாக குளங்களுக்கு சோதனை அடிப்படையில் தண்ணீர் திறந்து விடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சோதனையின்போது பகிர்மானக் குழாய்களில் கசிவு ஏதேனும் உள்ளதா, குளங்களுக்கு நீர் சரியான முறையில் செல்கிறதா, அடைப்புகள் உள்ளனவா என்பன குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இது தொடர்பாக நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது: இத்திட்டத்தில் மொத்தம் 6 நீரேற்று நிலையங்கள் உள்ளன. கடந்த மார்ச் மாதம் ஈரோடு மாவட்டம் காலிங்கராயன் அணைக்கட்டில் தொடங்கி 4 நீரேற்று நிலையங்களைக் கடந்து, ஈரோடு மாவட்டம் வரப்பாளையம், அந்தியூர் ஒன்றியத்தில் எம்மாம் பூண்டியில் உள்ள 5-வது நீரேற்று நிலையத்தில் இருந்து கோவை மாவட்டம் அன்னூரில் அமைந்துள்ள 6-வது நீரேற்று நிலையத்துக்கு நீர் வந்து சேர்ந்தது.
இத்திட்டத்தின் கீழ் 1,045 குளம், குட்டைகளுக்கு நீர் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது. அதன்படி, அனைத்து குளங்களுக்கும் குழாய்கள் பதிக்கப்பட்டு, சோதனை அடிப்படையில் தண்ணீர் விடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதில் 3-வது மற்றும் 4-வது நீரேற்று நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் 61 குளங்களில் 60 குளங்களிலும், 4-வது, 5-வது நீரேற்று நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் 391 குளங்களில் 322 குளங்களிலும், 5-வது, 6-வது நீரேற்று நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் 349 குளங்களில் 333 குளங்களிலும், 6-வது நீரேற்று நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் உள்ள குளங்களில் 244 குளங்களில் 191 குளங்களிலும் சோதனை ஓட்டப்பணிகள் முடிந்துள்ளன.
மீதமுள்ள குளங்களுக்கும் தொடர்ச்சியாக சோதனை செய்யும் பணி நடக்கிறது. தற்போதைய சூழலில் 906 குளங்களில் சோதனை ஓட்டப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. மீதமுள்ள 139 குளங்களில் சோதனை ஓட்டப்பணிகள் இம்மாத இறுதிக்குள் முடிக்கப்படும், என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 mins ago
தமிழகம்
17 mins ago
தமிழகம்
43 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago