தமிழகத்தில் நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகளை மீண்டும் திறந்தது தொடர்பான வழக்கில் சண்டிகர் நகராட்சியில் மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்பட காரணமாக அமைந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு விபரத்தை அளிக்கும்படி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கேட்டுள்ளது.
இந்த வழக்கு மீதான தீர்ப்பு இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் சண்டிகர் நிலைமை தமிழகத்துக்கு பொருந்தாது என்று தெரிவித்துள்ளார் உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கை தொடுத்த வழக்கறிஞர் பாலு.
இதுகுறித்து ‘தி இந்து’-விடம் அவர் கூறும்போது, “கடந்த அக்டோபர் 1-ம் தேதி தேதி தமிழக அரசு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் டாஸ்மாக் மாவட்ட மேலாளர்களுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியது. அதில், ‘சண்டிகரில் மாநில நெடுஞ்சாலைகள் அனைத்தும் நகர சாலைகளாக மாற்றப்பட்டிருக்கின்றன. உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அந்தச் சாலைகளில் மூடப்பட்ட மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்டிருக்கின்றன. இதன் அடிப்படையில் தமிழகத்திலும் கடையை திறந்துகொள்ளலாம்’ என்று தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கடந்த அக்டோபர் 14-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் நான் பொது நல வழக்கு தொடர்ந்தேன்.
அதில், ‘சண்டிகரில் அந்த மாநில அரசு தேசிய, மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி அமைப்புகளின் சாலையாக முறைப்படி மாற்றியிருக்கிறது. எனவே அங்கு மீண்டும் மதுக்கடைகள் திறக்கப்பட்டிருக்கின்றன. தமிழகத்தில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி சாலைகளாக மாற்றப்படவில்லை. அவை தேசிய, மாநில நெடுஞ்சாலைகளாகவே தொடர்கின்றன. ஆனால், சண்டிகரில் மாற்றப்பட்டதை முன்னுதாரணமாக காட்டியே தமிழகத்தின் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் மூடப்பட்டிருந்த 1,700 மதுக்கடைகளை மீண்டும் திறந்திருக்கிறார்கள். இது ‘தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் இருந்த மதுக்கடைகளை மூடச் சொல்லி உத்தரவிட்ட உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதிக்கும் செயல்’ என்று குறிப்பிட்டுள்ளேன்.
இந்த வழக்கின் அடிப்படையில் உயர் நீதிமன்றம், சண்டிகர் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் என்ன சொல்லியுள்ளது என்கிற விளக்கத்தை உச்ச நீதிமன்றத்தில் வாங்கி வரும்படி தமிழக அரசிடம் கேட்டுள்ளது. அதற்கான விளக்கத்தைதான் உச்ச நீதிமன்றம் அளித்துள்ளது. மேலும், இதற்கான தீர்ப்பு இன்னும் அறிவிக்கப்படவில்லை” என்றார்.
மீண்டும் மூட நேரிடும்
“ஒருவேளை தமிழகத்தில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் முறைப்படி உள்ளாட்சி அமைப்புகள் வசம் மாற்றப்பட்டால் அப்போது என்ன செய்வீர்கள்?” என்று பாலுவிடம் கேட்டோம். “இப்போது மீண்டும் திறந்து செயல்பட்டுக்கொண்டிருக்கும் மதுக்கடைகளே சட்ட விரோதமானது. இதனை நாங்கள் சும்மா விடப்போவதில்லை. சாலைகள் உள்ளாட்சிகள் வசம் மாற்றப்பட்டாலும் அதுவும் செல்லாது என்று சட்ட ரீதியாக வழக்குகளை தொடுப்போம். நீதிமன்றத்தை அவமதிப்பு செய்ததற்கான தண்டனையை தமிழக அரசு நிச்சயம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஏன், சண்டிகரில் சாலைகள் மாற்றம் செய்ததை எதிர்த்து வழக்கு தொடர்ந்தாலும் கூட உச்ச நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பின் அடிப்படையில் அங்குமே கடைகளை மீண்டும் மூட வேண்டியிருக்கும்.
தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் கடைகளை உச்ச நீதிமன்றம் மூடச் சொன்னதன் அடிப்படை காரணமே மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் ஏற்படுத்தும் விபத்துகள்தான்.
சென்னையில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும் காரணத்தால் வாரம் இரு பெரிய விபத்துக்களாவது ஏற்படுகின்றன. டாஸ்மாக் கடைகள் நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படுகிறது என்பதுகூட கண் துடைப்புதான். தமிழகம் முழுவதுமே பெரும்பாலான கடைகளில் காலை ஆறு மணி தொடங்கி விடிய விடிய கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. நட்சத்திர விடுதிகளில் இரவு 12 மணிக்கு மேலேயும் மதுபான விருந்துகள் நடக்கின்றன. இவற்றை எல்லாம் கட்டுப்படுத்த வேண்டிய தமிழக அரசே மதுக்கடைகளை மீண்டும் காப்பாற்றுவதற்காக உச்ச நீதிமன்றத்தில் கேட்பது மக்கள் விரோத செயலாகும்” என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago