சென்னை சென்ட்ரல், சேலம், ஈரோடு உட்பட அதிக குற்றம் நடைபெறும் 10 ரயில் நிலையங்கள்

By செய்திப்பிரிவு

சென்னை: தெற்கு ரயில்வேயில் சென்னை, மதுரை, திருச்சி, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய 6 ரயில்வே கோட்டங்களில் 725 ரயில் நிலையங்கள் உள்ளன. இதில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலி, திருவனந்தபுரம் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் பயணிகள் வருகை நாள்தோறும் அதிகரித்து வருகிறது.

அதேநேரம், பயணிகள் போர்வையில் வரும் சிலர், செல்போன், நகை திருட்டில் ஈடுபடுகின்றனர். சிலர், கஞ்சா, ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுகின்றனர். வெளி மாநிலங்களில் இருந்து சென்னைக்கு வரும் ரயில்களில், கணக்கில் காட்டாத பணத்தை எடுத்து வந்து பிடிபடும் நபர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இத்தகைய குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் விதமாக, பல்வேறு நிலையங்களில் பாதுகாப்பு, கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குற்றங்கள் அதிகம் நடைபெறும் இடங்களை அடையாளம் கண்டு, அங்கு கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தமிழக ரயில்வே காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகத்தில் அதிக குற்றச் செயல்கள் நடைபெறும் ரயில் நிலையங்களாக சென்னை சென்ட்ரல், எழும்பூர், கொருக்குப்பேட்டை, பெரம்பூர், தண்டையார்பேட்டை, தாம்பரம், அரக்கோணம், காட்பாடி, சேலம், ஈரோடு ஆகிய 10 நிலையங்களை போலீஸார் அடையாளம் கண்டுள்ளனர். இங்கு வெளி மாநில ரயில்கள் அதிகம் வந்து செல்வதால் குற்றச் செயல்கள் அதிகரிக்கின்றன. இந்த ரயில் நிலையங்களில் கூடுதல் போலீஸார் நியமிக்கப்பட்டு, கண்காணிப்பு பணி மேம்படுத்தப்படும்.

மாதம்தோறும் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படும். இப்போது உள்ளதைவிட கூடுதல் இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த ரயில்வேக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களில் தேவையற்ற நுழைவுவாயில்கள் மூடப்படும். சுற்றுச்சுவர் அமைத்து கூடுதல் மின்விளக்கு வசதி ஏற்படுத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE