திருவண்ணாமலை கிரிவலப் பாதை அசைவ உணவக சர்ச்சை: அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்

By இரா.தினேஷ்குமார்

திருவண்ணாமலை: “உணவு பழக்கம் என்பது தனிப்பட்ட மனிதனின் உரிமை என்பதால், திருவண்ணாமலை கிரிவல பாதையில் அசைவ உணவுக் கடைகளை மூடுவது தொடர்பாக, அரசாங்கம் தனது அதிகாரத்தை பயன்படுத்த முடியாது” என பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மாட வீதியில் நடைபெற்று வரும் சிமென்ட் சாலை அமைக்கும் பணி மற்றும் ஐயங்குளம் தூர் வாரும் பணியை பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று பார்வையிட்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “அண்ணாமலையார் கோயில் கார்த்திகைத் தீபத் திருவிழாவுக்கு ஐயங்குளத்தில் 3 நாட்கள் தெப்பல் உற்சவம் நடைபெறும். ஐயங்குளமானது 320 அடி அகலம், 320 அடி நீளம் என 3 ஏக்கர் பரப்பளவில் சதுரமாகவும், 32 படிகளை கொண்டதாக உள்ளது. 5 மீட்டர் ஆழத்துக்கு சகதி உள்ளது. இந்த சேற்றில் மூழ்கி 3 ஆண்டுகளுக்கு முன்பு ஆன்மிக தொண்டு செய்ய வந்த 4 பேர் உயிரிழந்தனர். எனவே, ஐயங்குளத்தை தூர்வாரும் பணியை, இந்து சமய அறநிலையத் துறையின் அனுமதி பெற்று தூய்மை அருணை சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அங்கு நந்தி சிலை அமைத்து தரப்படும்” என்றார்.

பின்னர் அவரிடம் சில கேள்விகள் முன்வைக்கப்பட்டன. அதற்கு அமைச்சர் அளித்த பதில் பின்வருமாறு:

கேள்வி: திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அசைவ உணவுக் கடைகளை மூட வேண்டும் என ஆளுநரிடம் ஆன்மிகவாதிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அமைச்சர் எ.வ.வேலு: உணவு என்பது அவரவர் விருப்பத்துக்குரியது. இந்த உணவுதான் சாப்பிட வேண்டும் என யாரையும் கட்டுப்படுத்த முடியாது. ஆன்மிக மக்கள் அதிகம் வருகிறார்கள் என்பதை உணர்ந்து, அவர்களாக அசைவ உணவுக் கடைகளை மூடலாம். அரசாங்கத்தின் அதிகாரத்தை பயன்படுத்தியும், நேரடியாக சென்று, அசைவ உணவை சமைக்கக்கூடாது எனச் சொல்வது என்பது கால பொருத்தமாக இருக்காது.

பவுர்ணமி நாளில், கிரிவலப் பாதையில் அசைவ உணவு கடைகளை யாரும் வைப்பது கிடையாது. பிற நாட்களில், கடைகள் வைக்கப்படுகின்றன. மக்கள் விரும்புவதால் வியாபாரம் நடைபெறுகிறது. யாரும் விரும்பவில்லை என்றால், நஷ்டத்தில் கடை வைத்திருக்க மாட்டார்கள். யாரோ விரும்புவதால், அசைவ உணவு கடை வைக்கின்றனர். உணவுப் பழக்கம் என்பது தனிப்பட்ட மனிதனின் உரிமை. இதில் தலையிட முடியாது. இந்த உணவுதான் சாப்பிட வேண்டும் என நான் கூறினால் விமர்சனம் எழும்.

கேள்வி: நீட் தேர்வில் கையொப்பமிடமாட்டேன் என ஆளுநர் ஆர்.என்.ரவி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்:

அமைச்சர் எ.வ.வேலு: தமிழக அரசு, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் எங்களது கொள்கையை பொருத்தவரை நீட் தேர்வு என்பதை எடுத்தால்தான் கிராமப்புற மாணவர்கள் படித்து மருத்துவராக முடியும். இதனால்தான், நுழைவு தேர்வை முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி ரத்து செய்தார். பிளஸ் 2 வரை படித்து பெறாத மதிப்பெண்ணை, 3 மாதம் தனியார் பயிற்சி மையத்தில் படித்துப் பெறும் மதிப்பெண்ணை அடிப்படையாக கொண்டு, நீட் மதிப்பெண் எனக் கூறி தேர்வு செய்வது எந்த விதத்தில் நியாயமாக இருக்க முடியும். 3 மாத பயிற்சியை வசதி படைத்த மாணவர்கள் படித்துவிட்டு, மருத்துவராகச் செல்ல முடியும்.

தமிழகம் கிராமங்கள் நிறைந்தது. தனியார் பள்ளிகளை விட, அரசுப் பள்ளிகள் அதிகம். கிராமப்புற மாணவர்களுக்கு கல்வித்துறைக்கு, நிதி நிலை அறிக்கையில் அதிக நிதி ஒதுக்கப்படுகிறது. பிளஸ் 2 தேர்வில், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள், அதிக மதிப்பெண் பெறுகின்றனர். இந்த மதிப்பெண்ணை கணக்கில் கொள்ளமாட்டோம், 3 மாத தனியார் பயிற்சியில் பெறும் மதிப்பெண்ணை கணக்கில் கொள்வோம், அதுதான் நீட் தேர்வுக்கு உதவியாக இருக்கிறது எனக் கூறி மத்திய அரசு அனுமதித்து வருகிறது. மத்திய அரசின் கருத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். நீட் தேர்வை தடுத்தால்தான் கிராமப்புற மாணவர்களால் மருத்துவராக முடியும் என்பதில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சி உறுதியாக உள்ளது” என்றார்.

அப்போது சட்டப்பேரவைத் துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, ஆட்சியர் பா.முருகேஷ், திமுக மருத்துவரணி துணைத் தலைவர் கம்பன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன், நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, நகர திமுக செயலாளர் கார்த்தி வேல்மாறன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE