அதானி துறைமுக விரிவாக்கத் திட்டத்தை முழுமையாக கைவிடுக: சிபிஎம் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

செங்கல்பட்டு: “சுற்றுச்சூழலையும், கடல் வளத்தையும் அழிக்கும் அதானி துறைமுக விரிவாக்கத் திட்டத்தை முழுமையாக கைவிடுக” என சிபிஐ(எம்) மாநிலக்குழு கூட்டத்தில் வலியுறுத்தபட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடபட்டுள்ள அறிக்கையில், “இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் மாநில செயற்குழு உறுப்பினர் ஜி. சுகுமாறன் தலைமையில் செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவிலில் 2023 ஆகஸ்ட் 11, 12 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

தீர்மானம் - 1: அரசுப் பணிகளில் பதவி உயர்வில் இடஒதுக்கீட்டினை செயல்படுத்தும் வகையில் தனிச்சட்டம் இயற்றிடுக: “அண்மையில் உச்ச நீதிமன்றம், அரசு பணிகளில் பதவி உயர்வின் போது தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள இடஒதுக்கீடு கொள்கையை பின்பற்றக் கூடாது என கூறியுள்ளது. இது இந்திய அரசியல் சாசன சட்ட சரத்து 16(4)படி பதவி உயர்வில், பட்டியலின மற்றும் பழங்குடி மக்களுக்கு முன்னுரிமை வழங்க வழிவகை செய்துள்ளதை நிராகரிப்பதாகும். மேற்படி அரசியல் சாசன சட்டம் (16 4-ஏ)-ன்படி தற்போது ஒன்றிய அரசு பணிகளிலும் பதவி உயர்வின் போது, பட்டியலின மற்றும் பழங்குடியின பணியாளர்களுக்கு முன்னுரிமை கிடைத்து வருகிறது.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழ்நாடு அரசுப் பணியில் உள்ளோருக்கான பதவி உயர்வு நேரங்களில் முன்னுரிமை வாய்ப்பை கைவிடும் போது, சமூக ரீதியில் பின்தங்கிய பிரிவினர் பெரும் பாதிப்பை சந்திக்கும் நிலை உருவாகும். பிரதிநிதித்துவம் குறையும், சமூக நீதி பறிபோகும். ஏற்கனவே பல்வேறு போட்டி தேர்வுகள் மூலம், ஒரு பகுதி உயர்நிலை பணியிடங்கள் நேரடி நியமனம் இல்லாமல் பதவி உயர்வு மூலம் நிரப்பப்படுகிறது.

இந்நிலையில் இட ஒதுக்கீடு கொள்கை மூலம் பட்டியலின மற்றும் பழங்குடி மட்டுமல்லாமல் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், உள்ஒதுக்கீடு மூலம் பயன்பெறும் ஆதரவற்ற விதவை, மாற்று திறனாளி, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் தமிழ்வழி பயின்றோர் ஆகியோர் தற்போது அனுபவித்து வரும் முன்னுரிமை வாய்ப்பினை இழக்கும் நிலை உருவாகும்.

எனவே, தமிழ்நாடு அரசு பதவி உயர்வுகளில் பின்பற்றப்படும் தற்போதைய நடைமுறை தொடருவதை உறுதி செய்ய வேண்டும். அதற்காக தமிழ்நாட்டின் சட்டமன்றத்தில் தனி சட்டம் இயற்றுவது அவசியம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டுகிறது. அதேபோல் மேற்படி பதவி உயர்வு மூலம் உருவாகும் காலிப் பணியிடங்கள் பூர்த்தி செய்யப்படுவது உள்ளிட்டு வேலை வாய்ப்பு மற்றும் இட ஒதுக்கீடு, சமூக நீதியை பாதுகாப்பதில் ஜனநாயக சக்திகளை போராட முன்வர வேண்டுமென அறைகூவி அழைக்கிறது.

தீர்மானம் - 2 சுற்றுச்சூழலையும், கடல் வளத்தையும் அழிக்கும் அதானி துறைமுக விரிவாக்கத் திட்டத்தை முழுமையாக கைவிடுக - சிபிஐ(எம்) வலியுறுத்தல்: திருவள்ளூர் மாவட்டம், காட்டுப்பள்ளியில் எல்.என்.டி. நிறுவனம் இயக்கி வந்த துறைமுகத்தை அதானி நிறுவனம் கைப்பற்றியது. அந்த துறைமுகத்தை சுமார் 6000 ஏக்கர் அளவில் விரிவாக்கம் செய்ய அதானி நிறுவனம் திட்டமிட்டு பணியை துவக்கி வருகிறது. இந்த திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என ஆரம்ப முதலே திமுக, சிபிஐஎம் உள்ளிட்ட கட்சிகளும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் குரல் கொடுத்து வருகின்றன. இந்த துறைமுக விரிவாக்க திட்டத்திற்காக மீனவர் மற்றும் கிராமப்புற மக்களுக்கு சொந்தமான 2291 ஏக்கர் நிலமும், 1515 ஏக்கர் டிட்கோவுக்கு (TIDCO) சொந்தமான நிலமும், கடலுக்கு உள்ளே 2000 ஏக்கர் நிலமும் எடுக்கப்படவுள்ளன. இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் கரைக்கடல் சேற்று பகுதிகளில் சுமார் ஆறு கிலோமீட்டர் நீளத்திற்கு 2000 ஏக்கர் பரப்பளவிற்கு கடலை ஆழப்படுத்தி மணல் மற்றும் 10 லட்சம் கன மீட்டர் கற்கள் கொட்டப்படும். இது அரசின் சுற்றுச்சூழல் மண்டல விதிகளுக்கு புறம்பானதாகும்.

அதானி துறைமுக விரிவாக்கத் திட்டம் கொண்டுவரும் காட்டுப்பள்ளி கடற்கரை பகுதி அபூர்வ மீன்கள் மீன்வளம் நிறைந்த பகுதி. 40 மீனவர் குப்பங்கள், மீன்பிடித் தொழிலை சார்ந்து ஒரு லட்சம் மீனவ மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் விரிவாக்க திட்டம் தொடங்கப்பட்டால் கடல் வளம், மீன் வளம், இயற்கை வளம் என அனைத்தும் பாழ்படும், கடற்கரை அழிக்கப்படுவதுடன் கொற்றளை ஆற்றின் போக்கு பாதிக்கப்படும், பழவேற்காடு ஏரி, பக்கிங்காம் கால்வாய் சீரழியும், எண்ணூர் பழவேற்காடு மக்களின் வாழ்வாதாரம் பறிபோகும். சென்னை பெருநகரமும், திருவள்ளூர் மாவட்டத்திலும் மிகக் கடுமையான சூழலில் பாதிப்புகளை இந்த திட்டம் ஏற்படுத்தும்.

அதானி துறைமுகத்திற்கு அருகிலேயே அரசுக்கு சொந்தமான காமராஜர் துறைமுகம் மற்றும் சென்னை துறைமுகமும் அமைந்துள்ளன. அரசுக்கு சொந்தமான இரண்டு பொதுத்துறை நிறுவனங்கள் உள்ள போது தனியார் அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு அனுமதி அளிக்க வேண்டிய அவசியம் ஏதுமில்லை. நாளடைவில் இந்த புகழ்பெற்ற அரசு துறைமுகங்களை மூடுவிழா நடத்தவும் வாய்ப்புள்ளது.

சமீபத்தில் கருத்து கேட்பு கூட்டம் செப்டம்பர் 5 அன்று நடத்துவதாக அறிவிக்கப்பட்டு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதானது வரவேற்கத்தக்கது. எனவே சூழலியலுக்கும், பொதுமக்களுக்கும், அரசுக்கும் இழப்பை ஏற்படுத்தும் அதானி துறைமுக விரிவாக்கத் திட்டத்தை முழுமையாக கைவிடப்பட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் மாநிலக்குழு வற்புறுத்துகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE