நாங்குநேரியில் நடந்ததுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்க உறுதியான நடவடிக்கை தேவை: ஓபிஎஸ்

By செய்திப்பிரிவு

சென்னை: "பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்களிடையே ஒற்றுமையை வளர்க்கவும், நாங்குநேரியில் நடந்ததுபோன்ற நிகழ்வுகள் இனி வருங்காலங்களில் நிகழாமல் இருக்கவும் தேவையான, உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று" தமிழக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "சாதி இரண்டொழிய வேறில்லை" என்றார் ஔவைபிராட்டியார். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றார் வள்ளுவப் பெருந்தகை. அதாவது மனிதர்களின் பிறப்பினால் உயர்வு தாழ்வு கிடையாது என்றார். "சாதிகள் இல்லையடி பாப்பா" என்றார் மகாகவி பாரதியார். "உயர்ந்த சாதி, கீழ்ச்சாதி என்னும் வேற்றுமைகள் தமிழ்க்கில்லை, தமிழர்க்கில்லை, பொய்க் கூற்றே சாதி எனல்" என்றார் கவிஞர் பாரதிதாசன் அவர்கள். இப்படிப்பட்ட தலைவர்கள் பிறந்த இந்த நாட்டில் சாதியினால் வன்முறைகள் நிகழ்வதும், குறிப்பாக எதிர்கால சந்ததியினர் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்வதும் தொடர்ந்து நிகழ்வது என்பது மிகவும் கவலை அளிக்கக்கூடிய ஒன்றாகும்.

2006-2011 திமுக ஆட்சியைப் போல, கடந்த 27 மாத கால தி.மு.க. ஆட்சியிலும் சாதிய மோதல்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. தற்போது நெல்லை மாவட்டம், நாங்குநேரியில் அரசு உதவி பெறும் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவரை சக மாணவர்கள் பல்வேறு மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாகவும், இதன் காரணமாக அந்த மாணவர் பள்ளிக்கு செல்லவில்லை என்றும், இதுகுறித்து பள்ளி ஆசிரியை மாணவரின் தாயிடம் பேசி பள்ளிக்கு வரச் சொன்னதாகவும், அந்த மாணவனுக்கு மன உளைச்சல் ஏற்படுத்திய சக மாணவர்களை ஆசிரியர்கள் கண்டித்ததாகவும், இதனால் பாதிக்கப்பட்ட மாணவரின் வீடு புகுந்து கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டதில் அவர் படுகாயமடைந்ததாகவும், இதைத் தடுக்க வந்த அவரது சகோதரியும் படுகாயமடைந்ததாகவும், இருவரும் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.

இதனைப் பார்த்த மாணவனின் தாத்தா கிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து இறந்துள்ளார். இந்தத் தாக்குதல் கடும் கண்டனத்திற்குரியது. மாணவர்களின் எதிர்காலத்திற்கு அச்சாரமாக விளங்கக்கூடிய பள்ளிகளில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது மிகவும் கவலை அளிக்கத்தக்கது.

படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இருவரும் பூரண குணமடைந்து விரைவில் இல்லம் திரும்ப வேண்டுமென்ற என் விருப்பத்தினைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களுக்குத் தேவையான உயரிய மருத்துவ சிகிக்சை அளிக்கப்பட வேண்டுமென்றும், அவர்களுக்குத் தேவையான நிதி உதவியை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் என்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றேன்.

பள்ளிகளில் ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்று நிலவிய நிலை மாறியுள்ளதுதான் இதுபோன்ற சம்பவங்களுக்கு காரணம். இதனைத் தவிர்க்க தேசப் பற்று, மனித நேயம், மனிதாபிமானம், நீதி போதனைகள் ஆகியவற்றை பள்ளிகளில் ஆசிரியர்கள் போதித்து, மாணவர்களிடையே ஒற்றுமை உணர்வினை ஏற்படுத்த வேண்டும். கல்வித் துறையை, கற்பித்தல் முறையை, ஆசிரியர்-மாணவர் உறவை பலப்படுத்தத் தேவையான, உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இதற்கான பொறுப்பு மாணவ, மாணவியர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், ஊர்ப் பொதுமக்கள் என அனைவருக்கும் உண்டு. ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற கொள்கையைப் பின்பற்றினால் எதிர்கால சந்ததியினரின் வாழ்வு வளம் பெறும்.

சட்டம்-ஒழுங்கை தன் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, படுகாயமடைந்தவர்களுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை அளிக்கவும், தாக்கியோர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்களிடையே ஒற்றுமையை வளர்க்கவும், இதுபோன்ற நிகழ்வுகள் இனி வருங்காலங்களில் நிகழாமல் இருக்கவும் தேவையான, உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என்று வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

28 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்