சென்னை: அமலாக்கத் துறையினரின் விசாரணை முடிந்து நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக 120 பக்க குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அவரை வரும் 25-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்குமாறு நீதிபதி எஸ்.அல்லி உத்தரவிட்டுள்ளார்.
கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பொறுப்பு வகித்தார். அப்போது, அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் லட்சக்கணக்கில் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் உள்ளிட்டோர் மீது சென்னை மத்தியக் குற்றப் பிரிவு போலீஸார் 3 மோசடி வழக்குகளைப் பதிவு செய்தனர்.
இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டிய அமலாக்கத் துறை, கடந்த ஜூன் 14-ம் தேதி சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை தடைச் சட்டத்தின் கீழ் அவரைக் கைது செய்தது. அப்போது அவர் தனக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாகக் கூறியதால், ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் அவர் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, அங்கு அவருக்கு இதய பைபாஸ் அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், தனது கணவரை அமலாக்கத் துறையினர் சட்ட விரோதமாக கைது செய்துள்ளதாகக் கூறி, அவரது மனைவி மேகலா தாக்கல் செய்திருந்த ஆட்கொணர்வு மனுவைத் தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம், அவரை அமலாக்கத் துறை கைது செய்தது சட்டப்பூர்வமானது என்று தீர்ப்பளித்தது.
» ‘நீட்’ விலக்கு மசோதாவில் கையெழுத்திட மாட்டேன் - மாணவர்கள் கலந்துரையாடலில் தமிழக ஆளுநர் உறுதி
» சென்னையில் விரைவில் கலைஞர் கன்வென்ஷன் சென்டர் - ஏ.ஆர்.ரஹ்மான் பதிவுக்கு முதல்வர் ஸ்டாலின் பதில்
இந்த தீர்ப்பை எதிர்த்து செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை உறுதி செய்து, செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை ஆக. 12-ம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்கலாம் என கடந்த 7-ம் தேதி உத்தரவிட்டது.
அன்றைய தினமே அமலாக்கத் துறை அதிகாரிகள், புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து, கடந்த 5 நாட்களாக தீவிர விசாரணை மேற்கொண்டனர். நேற்று மதியம் விசாரணையை முடித்துக் கொண்ட அமலாக்கத் துறையினர், பிற்பகல் 2.45 மணிக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு, சிஐஎஸ்எஃப் போலீஸார் பாதுகாப்புடன் செந்தில் பாலாஜியை அழைத்து வந்தனர்.
மெலிந்த தேகத்துடன், தாடியுடன் இருந்த செந்தில் பாலாஜி காரில் இருந்து இறங்கி சிறிது தூரம் நடந்து, முதல் மாடியில் உள்ள நீதிமன்றத்துக்கு லிஃப்ட் மூலமாகச் சென்றார். நேற்று மக்கள் நீதிமன்றம் நடைபெற்றதால், அமலாக்கத் துறை தரப்பு சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.ரமேஷ் மற்றும் அதிகாரிகள், முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லியின் சேம்பரில் செந்தில் பாலாஜியை ஆஜர்படுத்தினர். அப்போது, செந்தில் பாலாஜி தரப்பு மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, வழக்கறிஞர் என்.பரணி குமார் உடனிருந்தனர்.
செந்தில் பாலாஜியிடம் நீதிபதி, "விசாரணையின்போது அமலாக்கத் துறையினர் உங்களை எப்படி நடத்தினார்கள், அவர்களுக்கு எதிராக ஏதேனும் குற்றச்சாட்டு இருக்கிறதா?" என்று கேட்டார். அதற்கு அவர், விசாரணையின்போது அமலாக்கத் துறை அதிகாரிகள் தன்னை துன்புறுத்தவில்லை என்றும், நன்றாக நடத்தினார்கள் என்றும், அவர்கள் மீது குறைகூற ஏதுமில்லை என்றும் தெரிவித்தார்.
அப்போது, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக 120 பக்க குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்த அமலாக்கத் துறை அதிகாரிகள், வழக்கு தொடர்பான சுமார் 3,000 பக்கங்கள் கொண்ட ஆவணங்களை ஓர் இரும்புப் பெட்டியில் வைத்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
அதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி எஸ்.அல்லி, வரும் 25-ம் தேதி வரை செந்தில் பாலாஜியை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்குமாறு உத்தரவிட்டார். இதையடுத்து அவர் மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில் அமலாக்கத் துறையினர் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளதால், அடுத்த வாரம் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்படும் என்று அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக சென்னை மத்தியக் குற்றப் பிரிவு போலீஸார் பதிவு செய்துள்ள வழக்குகள் மீதான விசாரணையை வரும் செப். 30-ம் தேதிக்குள் முடித்து, அறிக்கை தாக்கல் செய்யுமாறு அண்மையில் உச்ச நீதிமன்றம், மாநில போலீஸாருக்கு அறி வுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
11 mins ago
தமிழகம்
20 mins ago
தமிழகம்
53 mins ago
தமிழகம்
55 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
6 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago