முட்டை விலை வரலாறு காணாத அளவில் விலையேற்றம் கண்டுள்ளதால், சத்துணவு திட்டத்துக்கு கோழிப் பண்ணையாளர்களிடம் இருந்து முட்டை கொள்முதல் செய்து வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணவ, மாணவியருக்கு வாரத்துக்கு 5 நாட்கள் சத்துணவுடன் முட்டை வழங்கப்படுகிறது. முட்டை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தினர் பெற்றுள்ளனர். இந்த நிறுவனத்தினர் 45 முதல் 52 கிராம் எடையுள்ள முட்டையை கோழிப்பண்ணையாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்து பள்ளிகளுக்கு வழங்க வேண்டும்.
இதன்படி வாரத்துக்கு 2.50 கோடி முட்டைகள் வீதம் சத்துணவு திட்டத்துக்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில் முட்டை விலை வரலாறு காணாத அளவில் விலையேற்றம் கண்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை ரூ.5.16 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், சத்துணவு திட்டத்துக்கு ஒரு முட்டை ரூ.4.43 காசுக்கு வழங்குவதாக சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தினர் அரசிடம் ஒப்பந்தம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில் கூடுதல் விலை கொடுத்து முட்டையை கொள்முதல் செய்ய வேண்டிய நிலை நிறுவனத்துக்கு ஏற்பட்டுள்ளது.
முட்டையை கொள்முதல் செய்ய வியாபாரிகள் தயாராக உள்ளனர். கூடுதல் லாபம் கிடைப்பதால், சத்துணவு திட்டத்துக்கு குறைந்த விலைக்கு முட்டையை வழங்க கோழிப் பண்ணையாளர்கள் முன்வராததால் சத்துணவு திட்டத்துக்கு தொடர்ந்து முட்டை விநியோகிக்க முடியுமா என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர் சங்கத் தலைவர் ஏ.கே.பி.சின்ராஜ் கூறியதாவது: வறட்சி காலத்தில் கோழிக் குஞ்சு உற்பத்தி குறைந்ததால் முட்டை உற்பத்தியும் குறைந்துள்ளது. இந்நிலையில், வட மாநிலங்களில் குளிர் சீஸன் காரணமாக முட்டை நுகர்வு அதிகரிக்கும். இதுபோல், தமிழகம், கேரளாவிலும் முட்டை நுகர்வு அதிகரித்துள்ளது. உற்பத்தி குறைவு, நுகர்வு அதிகரிப்பால் முட்டை விலையேற்றம் கண்டுள்ளது.
சத்துணவு திட்டத்துக்கு முட்டை தொடர்ந்து வழங்கப்படுகிறது. தற்போது நிர்ணயம் செய்யப்பட்ட மார்க்கெட் விலைக்கு முட்டை வழங்கப்படுகிறது என்றார்.
இதுகுறித்து சத்துணவுக்கு முட்டை சப்ளை செய்யும் தனியார் நிறுவன நிர்வாகி சஞ்சய் கூறும்போது, ‘சத்துணவு திட்டத்துக்கு தமிழகம் முழுவதும் முட்டை தட்டுப்பாடின்றி வழங்கப்படுகிறது. என்இசிசி என்ன விலை நிர்ணயம் செய்கிறதோ அந்த விலையை பண்ணையாளர்களுக்கு வழங்கி முட்டையை கொள்முதல் செய்கிறோம். முட்டை விலை உயர்வதால் எங்களுக்கு இழப்பு ஏற்படுகிறது. அரசிடம் கூடுதல் விலை கேட்பது தொடர்பாக ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்’ என்றார்.
இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) எம்.மாரிமுத்துராஜ் கூறும்போது, ‘நாமக்கல் மாவட்டத்தைப் பொறுத்தவரை பள்ளிகளுக்கு முட்டை வழங்குவதில் எந்த சிக்கலும் இல்லை. பள்ளிகளுக்குத் தேவையான முட்டை முன்கூட்டியே வழங்கப்படுகிறது. பிற மாவட்டங்களிலும் சத்துணவுக்கு முட்டை வழங்குவதில் எந்த பிரச்சினையும் இல்லை’ என்றார்.
ஸ்டாலின் வலியுறுத்தல்
இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழகத்தில் 2 வயது குழந்தைகள் முதல் 69 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் சத்துணவுத் திட்டத்தில் பயன்பெறுகின்றனர். விலை உயர்வு காரணமாக சத்துணவு மையங்களுக்கு முட்டைகள் வழங்கப்படவில்லை என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
உடனடியாத முட்டைகளை கொள்முதல் செய்து பள்ளிகளில் முட்டைகள் வழங்க வேண்டும். சத்துணவுத் திட்டத்தை முழுமையாக செயல்படுத்துவதிலும், மாணவர் உடல்நலம், கல்வி முன்னேற்றத்திலும் சமூக நலத் துறை செயலரும், தலைமைச் செயலாளரும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியும் சத்துணவு திட்டத்தில் முட்டை வழங்குவதை எக்காரணத்தைக் கொண்டும் நிறுத்தக் கூடாது என வலியுறுத்தியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
7 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago