சேலம்: “எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க, கேஜ்ரிவால் நிபந்தனை விதித்தது போல, காவிரி நீர் தேவை குறித்து காங்கிரஸ் கட்சியிடம் திமுக நிபந்தனை விதித்திருந்தால், தமிழகத்துக்கு உரிய காவிரி நீர் கிடைத்திருக்கும்” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக பொன்விழா மாநாடு குறித்து, அதிமுக சேலம் புறநகர் மாவட்டம் சார்பில் சேலத்தை அடுத்த ஓமலூரில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கூட்டத்தில் பங்கேற்று, அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “நாங்குநேரியில் பள்ளி மாணவர் தாக்கப்பட்டது மிகவும் வருந்தத்தக்கது, வேதனையளிக்கிறது. மாணவர்களுக்கு நல்லொழுக்கம் ஏற்படுத்துகின்ற கல்விக்கூடத்தில் இந்த நிலை ஏற்பட்டிருப்பது, வருந்தத்தக்கது. இதற்காக, திமுக அரசை கண்டிக்கிறேன்.
காவிரி நீர்ப் பிரச்சினையில், அதிமுக அரசு உச்ச நீதிமன்றத்தில் நிரந்தர தீர்ப்பை பெற்றுத்தந்தது. அதன்படி, தமிழகத்துக்கு உரிய நீரை, கர்நாடகா அரசு மாதந்தோறும் திறந்து விட வேண்டும். ஆனால், உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல், தமிழகத்தை கர்நாடகா அரசு வஞ்சிக்கிறது. மேட்டூர் அணையில் இருந்து, ஜூன் 12-ம் தேதி குறுவை சாகுபடிக்கு நீர் திறக்கப்பட்டது. அப்போது இருந்தே, தடையின்றி நீர் திறப்பதற்கு, அரசு உரிய கவனம் செலுத்தவில்லை.
நாடாளுமன்றத் தேர்தலுக்காக, எதிர்க்கட்சி இணைந்து கூட்டணி அமைக்கின்றன. இதற்கான கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றபோது, டெல்லி உயரதிகாரிகள் குறித்த மசோதா விவகாரத்தில், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்களுக்கு ஆதரவளித்தால்தான், கூட்டத்தில் பங்கேற்பேன் என்று கேஜ்ரிவால் நிபந்தனை விதித்தார். அதனை காங்கிரஸ் உள்ளிட்டவை ஏற்று கொண்ட பின்னரே, கூட்டத்தில் கேஜ்ரிவால் கலந்து கொண்டார். இதே கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அதில் காங்கிரஸ் தலைவர்கள், கர்நாடகா முதல்வர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முதல்வர் ஸ்டாலினை, கர்நாடகா நீர்ப்பாசனத் துறை அமைச்சர் சிவகுமார் வரவேற்றார். அந்தக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டுமென்றால், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி காவிரியில் தமிழகத்துக்கு நீர் திறக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் நிபந்தனை விதித்திருக்க வேண்டும். அப்போதே பிரச்சினையை எளிதாக தீர்த்திருக்க முடியும். கேஜ்ரிவால் போல ஸ்டாலின் செயல்படாதது ஏன்?
ஸ்டாலினுக்கு தமிழக மக்கள், விவசாயிகள் மீது கவலை கிடையாது. ஆனால், கூட்டணிக் கட்சியிடம் கேட்காமல், இப்போது, பிரதமருக்கும், மத்திய நீர்வளத்துறை அமைச்சருக்கும் ஸ்டாலின் கடிதம் எழுதுவது ஏன்? மேட்டூர் அணையில், இன்னமும் 10 நாட்களுக்கு மட்டுமே நீர் இருப்பு இருக்கிறது. இந்நிலையில், டெல்டாவுக்கு திறக்கப்பட்டு வரும் நீரின் அளவை குறைத்துவிட்டனர். ஏற்கனவே, கடைமடைக்கு நீர் கிடைக்கவில்லை. விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டால் தான், கடைமடை வரை பாசனத்துக்கு நீர் கிடைக்கும். போதிய நீர் கிடைக்காமல் குறுவை சாகுபடி பயிர்கள் காய்ந்துவிட்டன. விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளுக்கு தமிழக அரசு இழப்பீடு தர வேண்டும்.
எதிர்க்கட்சி கூட்டணிகள், நாட்டு மக்களை எப்படி காப்பாற்ற முடியும். மக்களுக்கு என்ன நன்மை செய்துவிட முடியும். எதிர்க்கட்சிகளின் கூட்டணியால் மக்களுக்கு எந்த நன்மையும் கிடையாது. ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து முதல் கையெழுத்து போடுவேன் என்றார் ஸ்டாலின். அவரது மகனும் இதையே கூறினார். இவரது கையெழுத்தால் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று தெரிந்திருந்தும், தேர்தலுக்காக மக்களிடம் பொய்யான வாக்குறுதி அளித்தார்.
காவிரி பிரச்சினையில், அதிமுக அரசு நாடாளுமன்றத்தை 22 நாட்களுக்கு முடக்கியது. தமிழக மக்களின், விவசாயிகளின் உரிமையைக் காக்கும் வகையில், அதிமுக-வின் செயல்பாடுகள் இருந்தன. நீட் தேர்வு ரத்துக்காக, திமுக ஒரே ஒரு நாளாவது, நாடாளுமன்றத்தை முடக்க முடிந்ததா? டிடிவி தினகரனை ஒரு கட்சிக்காரராகவே நினைக்கவில்லை. அவர் ஊடகத்திலும் பத்திரிக்கையிலும் தான் கட்சி நடத்தி வருகிறார்” என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
15 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago