“நீட் தேர்வுக்குப் பின்னால் சதி” - ஆளுநர் ரவியிடம் கேள்வி எழுப்பிய மாணவியின் தந்தை ஆதங்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: "பள்ளிக்கூடங்களில் சொல்லித் தரப்படும் பாடங்களின் அடிப்படையில், நீட் தேர்வில் மாணவர்கள் தேர்ச்சிப் பெறவே இல்லை. அதன் பின்னணியில் ஒரு சதி இருக்கிறது. நீட் தேர்வுக்குப் பின்னால், ஒவ்வொரு பள்ளியும், தனியார் நிறுனங்களுடன் இணைந்துதான் நீட் தேர்வுக்கும் மாணவர்களை தயார் செய்து வருகின்றனர்" என்று ஆளுநர் ஆர்.என்.ரவி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சேலம் மாணவியின் தந்தை குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், எண்ணித் துணிக என்ற தலைப்பில் சனிக்கிழமை நடந்த நிகழ்ச்சிக்கு, நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்து வெற்றி பெற்ற மாணவர்கள் முதல்முறையாக அழைக்கப்பட்டிருந்தனர். குறிப்பாக, 2023-ம் ஆண்டில் நீட் தேர்வில் 600 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர். இந்நிகழ்வில் பங்கேற்ற மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோருடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார்.

அப்போது சேலத்தைச் சேர்ந்த மாணவரின் தந்தை ஒருவர், "தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெறுகின்றனர். நிறைய மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். இருப்பினும், தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம். எனவே, தமிழக அரசின் நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு எப்போது விலக்கு அளிப்பீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார். அதற்கு ஆளுநர், “நீட் தேர்வுக்கு தடை கோருவதை ஒருபோதும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து கையெழுத்திடமாட்டேன். இந்த விவகாரம் பொதுப் பட்டியலில் இருப்பதால், குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வைப் பொறுத்தவரை, பயிற்சி மையங்களுக்குச் சென்றுதான், அதில் வெற்றிபெற வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை” என்று பதிலளித்திருந்தார்.

இந்நிலையில், ஆளுநரிடம் கேள்வி எழுப்பிய மாணவியின் தந்தை அமாசியப்பன் ராமசாமி, ஆளுநர் மாளிகைக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "நான் சேலம் இரும்பாலையில் பணியாற்றுகிறேன். என்னுடைய மகள் மாநில அளவில் நீட் தேர்வில் 878-வது இடத்தில் உள்ளார். முதல்முறை தேர்வெழுதி 623 மதிப்பெண் பெற்றுள்ளார். செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் எனது மகள் நேற்று சேர்க்கைப் பெற்றுள்ளார்.

கடந்த ஐந்தாறு ஆண்டுகளாக, தமிழகத்தில் நீட் தேர்வு தேவையில்லை என்று கூறி வருகிறோம். ஆனால், அந்த தேர்வை எப்படி அணுகுவது என்று தெரியாமல்தான், தமிழக மாணவர்கள் திணறிக் கொண்டிருந்தனர். இன்றைக்கும் பள்ளிக்கூடங்களில் சொல்லித் தரப்படும் பாடங்களின் அடிப்படையில், நீட் தேர்வில் மாணவர்கள் தேர்ச்சிப் பெறவே இல்லை. அதன் பின்னணியில் ஒரு சதி இருக்கிறது.

நீட் தேர்வுக்குப் பின்னால், ஒவ்வொரு பள்ளியும், தனியார் நிறுனங்களுடன் இணைந்துதான், நீட் தேர்வுக்கும் மாணவர்களை தயார் செய்து வருகின்றனர். இப்படி நடப்பதால், மாணவர்கள் சிரமத்துக்கு உள்ளாகினர். காரணம், இந்த தேர்வில் எந்தப் பாடத்தில் இருந்து என்ன கேள்வி கேட்கப்படும் என்பது தெரியாமல், குழந்தைகள் சிரமத்தை சந்தித்தனர். நீட் தேர்வால், தமிழகத்தில் இதுவரை 15 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

இந்த ஆண்டு நீட் தேர்வில் அதிக மதிப்பெண் என்று பார்த்தால், 723 மதிப்பெண் தமிழக மாணவர் பிரபஞ்சன்தான் பெற்றுள்ளார். 715 மதிப்பெண் எனது மகள் படித்த பள்ளியைச் சேர்ந்த மாணவி பெற்றுள்ளார். எனது மகள் சைதன்யா பள்ளியில்தான் படித்தார். அந்தப் பள்ளியில் இருந்து 35 மாணவர்கள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். பள்ளியில் நிறைய உதவிகள் செய்தனர். ஆனால், இவ்வளவு கஷ்டப்பட்டு படிக்க வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஒரு மாணவர் தான் நீட் தேர்வுக்காக 15 மணி நேரமாக படித்ததாக கூறினார். 12-ம் வகுப்பு படித்தாலும் அவன் குழந்தைதான். 15 மணி நேரம் படித்துதான் இந்த நீட் தேர்வில் தேர்ச்சிப் பெற வேண்டுமா? கடந்த 1965-ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி, அத்தனை உள்கட்டமைப்பு வசதிகள் அங்கு உள்ளது. இன்று அந்தக் கல்லூரி தரமாக பராமரிக்கப்படுகிறது. இந்திய அளவில் முதல் 5 இடங்களில் இருக்கிறது. இதையெல்லாம் உருவாக்கியவர்கள், அவர்களுக்கு கற்று தந்தவர்கள் எல்லாம் எந்த நீட் தேர்வை படித்தனர்.

என் மகள் ஜெயித்துவிட்டார். அதேபோல் ஜெயித்த நூறு பேரை அழைத்து இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஒவ்வொரு வருடமும் ஒவ்வொர் பெற்றோர் எவ்வளவு செலவு செய்துள்ளனர் என்று கேளுங்கள். அந்தச் செலவு யாருக்கு செய்யப்பட்டது என்று கேளுங்கள். அரசுப் பள்ளி மாணவர்கள் 652 பேர் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துவிட்டதாக ஆளுநர் கூறுகிறார். அவர்கள் எப்படி சேர்க்கைப் பெற்றனர். 7.5 சதவீத இடஒதுக்கீட்டால்தான் சேர்ந்தார்களே தவிர நீட் தேர்வால் சேர்க்கை பெறவில்லை.

இந்த ஆதங்கம் அனைத்து பெற்றோருக்கு உண்டு. என் மகள் நீட் தேர்வில் அதிகமான மதிப்பெண் பெற்றதால், நான் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்து. அந்த வாய்ப்பை பயன்படுத்தி, ஆளுநரிடம் தமிழகத்தில் எப்போது நீட் தேர்வை ரத்து செய்து உத்தரவிடுவீர்கள் என்று கேள்வி எழுப்பினேன். அதற்கு ஆளுநர் முடியவே முடியாது என்று கூறிவிட்டார். எங்களுக்கு அரசின் மீது நம்பிக்கை உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் வேண்டாம் என்று கூறும் நீட் தேர்வை ரத்து செய்ய மாட்டேன் என்று ஆளுநர் கூறுகிறார்" என்று அவர் கூறினார். | தொடர்புடைய செய்தி > நீட் விலக்கு மசோதாவில் ஒருபோதும் கையெழுத்திட மாட்டேன்: ஆளுநர் ஆர்.என்.ரவி திட்டவட்டம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE