சமீபத்தில் வெளிவந்த 'தீரன்’ திரைப்படம், பவாரியா கொள்ளையர்கள் கதையை அடிப்படையாகக் கொண்டது. 10 ஆண்டு கொள்ளைச் சரித்திரத்தை தீரமிக்க தமிழகப் போலீஸார் 2006-ம் ஆண்டு முடிவுக்குக் கொண்டு வந்தது குறித்த உண்மைச் சம்பவத்தை பார்ப்போம்.
சமீபத்தில் வெளிவந்த கார்த்தி நடித்த 'தீரன்’ திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதன் திரைக்கதைக் காட்சிகள் பவாரியா கொள்ளையர்கள் பற்றிய உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டது.
தமிழக போலீஸாரின் வீரத்தை வெளிப்படுத்திய பவாரியா கொள்ளையர்கள் விவகாரம் 2006-ம் ஆண்டு என்கவுண்டர் மூலம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
1995-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரை பத்தாண்டுகள் தென் மாநிலங்களில் கொடூரக் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை புரிந்து, சிக்காமல் திரிந்த பவாரியா கொள்ளையர்கள் வெறியாட்டம் போட்டனர். அவர்களின் அட்டூழியம் 2006-ம் ஆண்டு என்கவுண்டர் மற்றும் கைது மூலம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.
பவாரியா என்றால் உபி, அரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங்களில் உள்ள குறிப்பிட்ட பகுதிகளில் இயங்கும் கிரிமினல் குற்றவாளிகளை குறிக்கும் சொல். இவர்களை 'ஜட்டி பனியன் கேங்’, 'ஹபூடா கேங்’ என்றெல்லாம் அழைப்பார்கள். இவர்கள் 5 முதல் 10 பேர் கொண்ட குழுக்களாகத்தான் இயங்குவார்கள். பெரும்பாலும் கண்டெய்னர் லாரிகளில் நெடுஞ்சாலை ஓரங்களில்தான் தங்குவார்கள். மக்களை விட்டு விலகித்தான் வாழ்வார்கள்.
சாலையில் செல்லும் லாரிகளை திருடி அதை பயன்படுத்தித்தான் தங்குவார்கள். பின்னர் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபடுவார்கள். இவர்கள் கொள்ளையடிக்கப் போகும் போது மற்றவர்கள் இவர்களைப் பிடித்துவிடக் கூடாது, யாருக்கும் அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக தங்கள் உடல் மற்றும் முகத்தின் மீது களி மண் அல்லது கரிய நிற எண்ணெயைப் பூசிக்கொண்டுதான் செல்வார்கள்.
பவாரியா குடும்பத்துப் பெண்கள் பகல் நேரத்தில் பிச்சை எடுப்பது போல் தனியாக இருக்கும் வீடுகளை நோட்டமிடுவார்கள். பிறகு வீடுகள் குறித்து விவரங்களை குடும்பத்து ஆண்களுக்குச் சொல்ல, கொள்ளைக் கும்பல் இரவில் அந்த வீட்டைத் தாக்கும். அந்தத் தாக்குதல் கொடூரமாக இருக்கும். இரும்பு ராடு, கத்தி, நாட்டுத் துப்பாகி மூலம் தாக்குதல் நடத்துவார்கள்.
வீட்டில் உள்ளவர்கள் இவர்களுக்குப் பயுந்து பணிந்தாலும் அவர்களைக் கொடூரமாகத் தாக்கி அடித்தே கொல்வார்கள், இளம்பெண்களை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்குவார்கள். கொள்ளை அடித்த அடுத்த சில மணி நேரங்களில் அந்த நகரத்தை விட்டு, சுவடே தெரியாமல் மறைந்து விடுவார்கள்.
1995-ம் ஆண்டு தமிழகத்தில் கொள்ளையில் ஈடுபட்ட இவர்கள், தமிழக போலீஸாரின் கையில் சிக்காமல் போகவே அடுத்து வந்த 10 ஆண்டுகள் வெற்றிகரமாக தங்கள் கைவரிசையைக் காட்டி வந்தனர். அவர்கள் கொலை செய்து கொள்ளை அடிப்பது அனைத்தும் புறநகர் பகுதிகளில் தனியாக இருந்த வீடுகளில் தான்.
கொள்ளை அடிக்க முடிவு செய்தால் அந்த வீட்டின் எப்படிப்பட்ட கதவாக இருந்தாலும் 5 முதல் 10 பேர் கொண்ட கும்பல் கடப்பாரையால் தாக்கி திறந்துவிடும். வீட்டிற்குள் நுழைந்தவுடன் துவம்சம் செய்துவிடுவார்கள். இவர்களது கொடூரத்தின் வெளிப்பாடாக தமிழகத்தின் இரண்டு முக்கிய அரசியல்வாதிகள் அவர்கள் வீட்டில் வைத்து கொல்லப்பட்டனர்.
கும்மிடிப்பூண்டி அதிமுக எம்.எல்.ஏ. சுதர்சனம் கொள்ளையர்களின் தாக்குதலில் கொல்லப்பட்டார். அவர் வீட்டிலிருந்து நகை பணம் கொள்ளையடிக்கப்பட்டன. இதேபோல் சேலத்தைச் சேர்ந்த பிரபல காங்கிரஸ் தலைவர் தாளமுத்து நடராஜன், பவாரியா கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அவரது வீட்டிலிருந்த நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது வட மாநில கொள்ளையர்கள் என்று பொதுவாக பத்திரிகைகள் எழுதினாலும் அது 'பவாரியா கொள்ளையர்கள்’ என்பது பலருக்கும் தெரியாது.
இந்த விவகாரம் பெரிதானதை அடுத்து, பவாரியா கொள்ளையர்களைப் பிடிக்க அப்போதைய கூடுதல் ஆணையரும் தற்போது டிஜிபியாக இருக்கும் எஸ்.ஆர்.ஜாங்கிட் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இதையடுத்து கொள்ளையர்கள் பற்றியும் அவர்கள் பக்கத்து மாநிலத்தில் நடத்திய கொள்ளைச் சம்பவங்கள் பற்றியும் அவர்கள் செயல்படும் விதம் குறித்துமானத் தகவல்களைத் திரட்டினர்.
அப்போது தான் போலீஸாருக்கு பவாரியா கொள்ளையர் பற்றிய தகவல் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை அவர்களது மாநிலத்திற்கே சென்று பிடிக்க, போலீஸார் திட்டம் வகுத்தனர். ஜாங்கிட் வட மாநிலத்தவர் என்பதால் உடனடியாக உபி போலீஸாருடன் நிலைமையை விளக்கி நடவடிக்கை எடுக்க முடிந்தது.
2005-ம் ஆண்டு ஜாங்கிட் தலைமையில் தனிப்படை போலீஸார், வடமாநிலங்களில் முகாமிட்டு பல மாதங்கள் அங்கே தங்கி, மாறுவேடத்தில் கொள்ளையர்களைக் கண்காணித்தனர். டெல்லி, உபியில் இஸ்திரிக் கடை வண்டிக்காரராக, டீ விற்பவர்களாக, லாரி டிரைவர், கிளீனர்களாக, பழ வண்டிகாரர்களாக பல மாதங்களைச் செலவிட்டு கொள்ளையர்கள் பற்றிய தகவல்களைத் திரட்டினர்.
அது மார்ச் 2 2006 ஆம் ஆண்டு அதிகாலை, தாங்கள் திரட்டிய தகவலின் அடிப்படையில் ஜாங்கிட் தலைமையிலான போலீஸார் உபி அதிரடிப்படையின் உதவியுடன் தங்கள் ஆபரேஷனைத் தொடங்கினர். பவாரியா கொள்ளையர்களின் தலைவன் சத்யவீர்(எ) புரா, இவன் ஹரியானாவைச் சேர்ந்தவன். அவன் மீது 100க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை வழக்குகள் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, ஹரியானா, ராஜஸ்தான், குஜராத், மத்தியப் பிரதேச மாநிலங்களில் பதிவாகி இருந்தன.
தொடர் தேடுதலில் மீரட் அருகே உள்ள ஒரு வீட்டில், தனது கூட்டாளிகள் 3 பேருடன் புரா பதுங்கியிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு சென்றால் ஆயுதங்களுடன் அவர்கள் தாக்ககூடும் என்பதால், திட்டம் போட்டு அந்த வீட்டை அதிகாலையில் தமிழக போலீஸார் சூழ்ந்தனர். ஆனால் போலீஸார் வரும் தகவல் அறிந்து புராவும் கூட்டாளிகளும் அருகிலுள்ள பர்டாபூர் கிராமப் பகுதியை ஒட்டிய காட்டுப் பகுதியில் பதுங்கினார்கள்.
உடனடியாக தமிழக போலீஸார் அங்கு தேடுதல் வேட்டையை நடத்தியபோது, புராவும் அவனது கூட்டாளிகளும் போலீஸாரை நோக்கி சரமாரியாகச் சுட தமிழக போலீஸார் திருப்பிச்சுட்டதில் புராவும் அவனது கூட்டாளியும் என்கவுண்டரில் கொல்லப்பட்டனர். மற்றவர்கள் தப்பி விட்டனர். அந்த இடத்தில் இருந்து பல துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
பின்னர் தமிழக போலீஸார் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் பவாரியா கொள்ளையர்கள்13 பேர், கைது செய்யப்பட்டு சென்னை கொண்டு வரப்பட்டு நீதிமன்றம் மூலம் சிறைத் தண்டனை வாங்கித்தரப்பட்டது.
பவாரியா கொள்ளையர்களை அவர்களிருக்கும் இடத்திற்கே சென்று, என் கவுண்டரில் இரண்டு பேரைக் கொன்று 13 பேரைப் பிடித்ததால் வந்த அச்சம் காரணமாகவும் பவாரியா கொள்ளையர்கள் பற்றிய தமிழக போலீஸாரின் அடுத்தடுத்த நடவடிக்கை காரணமாக தமிழகம் மட்டுமல்ல தென் இந்தியா பக்கமே கடந்த 11 ஆண்டுகளாக பவாரியா கொள்ளையர்கள் தலைவைத்துக் கூட படுக்கவில்லை.
போலீஸாரின் தீரமான இந்தச் சம்பவத்தை, தீரன் படம் மூலம் காட்சியாக்கி உள்ளார் இயக்குநர் வினோத். இந்தச் சம்பவத்தில் நேரடித் தொடர்புடைய ஜாங்கிட் நேரில் படக்குழுவினரைப் பாராட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago