அமைச்சர் எ.வ.வேலு குறித்த பிரதமர் மோடியின் பேச்சை நீக்கக் கோரி சபாநாயகருக்கு டி.ஆர்.பாலு கடிதம்

By செய்திப்பிரிவு

சென்னை: ஸ்மிருதி இரானி மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர், ஆகஸ்ட் 9 மற்றும் 10-ம் தேதிகளில் மக்களவையில் ஆற்றிய உரையின் போது, எ.வ. வேலு பேசியதாகத் தெரிவித்த கருத்துக்கள், மக்களவையின் நடைமுறை மற்றும் அலுவல் நடத்தை விதிகளுக்கு முரணானது. எனவே அதை அவைக் குறிப்பிலிருந்து நீக்கக் கோரி திமுக எம்பி டி.ஆர்.பாலு, மக்களவை சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு சென்னையில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் ஆற்றிய உரையை மக்களவையில் தவறாக மேற்கோள்காட்டி, கருத்துகளைப் பதிவு செய்துள்ளதை அவைக் குறிப்பிலிருந்து நீக்கக் கோரி மக்களவைத் தலைவர் ஓம்பிர்லாவுக்கு, நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர் பாலு கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், "9.8.2023 மற்றும் 10.8.2023 ஆகிய தேதிகளில் மக்களவையில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகிய இருவரும் பதிலளித்துப் பேசுகையில், 5.8.2023 அன்று சென்னை, அண்ணா சாலையில் உள்ள தேவநேயப் பாவாணர் மாவட்ட அரசு நூலகத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், தமிழக அரசின் பொதுப் பணித் துறை மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆற்றிய உரையை, மக்களவையில் தவறாக மேற்கோள்காட்டி, கருத்துகளைப் பதிவு செய்துள்ளனர்.

ஸ்மிருதி இரானி மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் மக்களவையில் ஆற்றிய உரைப் பகுதிகள், அவையைத் தவறாக வழிநடத்தும் வகையிலும், அவர்களது விருப்பு வெறுப்புகளை முன்னிறுத்துவது போன்று இருப்பதாலும், அவதூறு பரப்பக்கூடிய மற்றும் குற்றம் சாட்டக்கூடிய வகையில் இருப்பதாலும், அவை நடவடிக்கைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட வேண்டும்.

மேலும், அமைச்சர் எ.வ.வேலு மக்களவையில் உறுப்பினராக இல்லை. அவையில் உறுப்பினராக இல்லாத ஒருவர் குறித்து, சபாநாயகருக்கு போதிய முன்னறிவிப்பு எதுவும் கொடுக்காமல், அவர்கள் இருவரும் எந்தக் குற்றச்சாட்டும் எ.வ. வேலு குறித்துக் கூற முடியாது.

எனவே, ஸ்மிருதி இரானி மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர், 9.8.2023 மற்றும் 10.8.2023 ஆகிய தேதிகளில் மக்களவையில் ஆற்றிய உரையின் போது, எ.வ. வேலு பேசியதாகத் தெரிவித்த கருத்துக்கள், மக்களவையின் நடைமுறை மற்றும் அலுவல் நடத்தை விதிகளுக்கு முரணானது. எனவே, அவற்றை நீக்கவேண்டும்" என்று அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், 5.8.2023 அன்று பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு ஆற்றிய உரையின் காணொலிக் காட்சி இத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாக அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

முன்னதாக அமைச்சர் எ.வ.வேலு இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், அண்மையில் பேராசிரியர் சுப.வீ-யின் திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பிலான நிகழ்வில் நான் கலந்து கொண்டு பேசியதைத்தான் பிரதமரும் ஒன்றிய அமைச்சர்களும் திரித்துக் கூறிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு காலத்தில் இந்தியா என்ற வார்த்தையில்கூட நமக்கு பெரிய தாக்கம் இருந்தது கிடையாதே! நான் சொல்வது ஒரு காலத்தில். இந்தியான்னா ஏதோ வடக்கே இருக்கிற ஊரு. நம்ம ஊரு தமிழ்நாடுதான். முடிந்தால் இதைத் திராவிடநாடாக்க முடியுமா என்று யோசிப்போம்” என்று முன்பிருந்த பழைய நிலைமையினைச் சுட்டிக்காட்டினேன்" என்று அவர் தெரிவித்திருந்தார். | விரிவாக வாசிக்க > மணிப்பூரை மறந்துவிட்டு தமிழ்நாட்டைக் குறி வைப்பது ஏன்?- நம்பிக்கை இல்லா தீர்மான விவாதம்: மத்திய அரசுக்கு அமைச்சர் எ.வ.வேலு கேள்வி

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE