பள்ளத்தில் விழுந்து இரண்டு இளைஞர்கள் பலியான சம்பவம்- டிடிவி தினகரன் கண்டனம்

By செய்திப்பிரிவு

சென்னை: "மக்கள் உயிரின் மீது அக்கறை இல்லாத அரசு இன்னும் இது போன்ற பல மரணங்களுக்குப் பின்னர்தான் நடவடிக்கை எடுக்குமா?" என்று பூந்தமல்லி, திருவாரூரில் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து இரண்டு இளைஞர்கள் பலியான சம்பவத்தைச் சுட்டிக்காட்டி அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக தனது சமூகவலைதளப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "சென்னை பூந்தமல்லி மற்றும் திருவாரூரில் கேபிள் பதிக்கும் பணிக்காகவும், சாலை விரிவாக்க பணிகளுக்காகவும் தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து இளைஞர்கள் இருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.

சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பூந்தமல்லி அருகே தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் இரவு பணிக்காக தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது கேபிள் பதிக்கும் பணிக்காகத் தோண்டப்பட்ட ராட்சத பள்ளத்தில் எதிர்பாராத விதமாக விழுந்து உயிரிழந்தாதகவும், அவருடன் வந்த நண்பர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. இதே போன்று திருவாரூரில் சாலை விரிவாக்க பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

விபத்து நிகழ்ந்த இடங்களில் போதிய அளவு முன்னெச்செரிக்கை பலகைகளோ, மின்விளக்குகளோ வைக்கப்படவில்லை என்றும் அரசுத்துறை அதிகாரிகளின் அலட்சியமே இவ்விபத்துகளுக்கு காரணம் எனவும் அப்பகுதியை சேர்ந்தோர் குற்றம் சாட்டுகின்றனர். அரசுத்துறைகள் அலட்சியமாக செயல்படுவது தொடர்கதையாகி வரும் சூழலில், மக்கள் உயிரின் மீது அக்கறை இல்லாத அரசு இன்னும் இது போன்ற பல மரணங்களுக்குப் பின்னர்தான் நடவடிக்கை எடுக்குமா?

ஏற்கனவே மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்களில் வைக்கப்பட்ட தடுப்புகள் பாதிப்படைந்துள்ளதும், பணிகள் முடிவடைந்த இடங்களில் பள்ளங்கள் சரிவர மூடப்படாத சூழலிலும் விபத்துகள் தொடர்ந்து நடைபெற்று வருவது வருத்தமளிக்கிறது. இளைஞர்கள் உயிரிழக்க காரணமான தனியார் நிறுவனம் மற்றும் உரிய பாதுகாப்பு நெறிமுறைகள் செய்யப்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்யாத அரசு அதிகாரிகளின் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகம் முழுவதும் பல்வேறு பணிகளுக்காக பள்ளங்கள் தோண்டுவதற்கு முறையான அனுமதி பெறவும், கண்காணிக்கவும், விபத்துகள் நேரிடா வண்ணம் பாதுகாப்பை உறுதி செய்யவும் கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகின்றேன்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE