தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு 16 ஆயிரம் கிலோ போதைப்பொருட்கள் அழிப்பு: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

By செய்திப்பிரிவு

சென்னை: "தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு 16 ஆயிரம் கிலோ கைப்பற்றப்பட்ட போதைப் பொருள்கள் அழிக்கப்பட்டிருக்கிறது" என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கில் வெள்ளிக்கிழமை, காவல்துறை சார்பில் 'போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு விழா; நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசியது:"போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு,என்ற அக்கறை மிகுந்த நோக்கத்தோடு கடந்த ஆண்டு இந்தத் திட்டம் தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டது.போதைப் பொருள்கள் புழக்கத்தை தடுக்க வேண்டும். போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடுகிறவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும். போதைப்பொருள் புழக்கத்தால் ஏற்படுகின்ற தீமைகளை பற்றி இளம் தலைமுறையினர் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதுதான் இந்தத் திட்டத்தினுடைய நோக்கங்கள்.

அதன் காரணமாக, தமிழகத்தில் இத்தகைய குற்றச்சம்பவங்கள் வெகுவாக குறைந்து கொண்டு வருகிறது. அதற்காக, முழுவதுமாக தடுத்துவிட்டோம் என்று சொல்ல வரவில்லை. குறைந்து கொண்டு வருகிறது என்று தான் நான் சொல்கிறேன். இந்தளவுக்கு குறைய, அக்கறையுடனும், பொறுப்புடனும் செயல்பட்டு வருகின்ற காவல்துறை அதிகாரிகள் எல்லோருக்கும் என்னுடைய நன்றியை முதலில் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இந்த ஆர்வமும், அக்கறையும் குறையாமல் செயல்பட்டு, முற்றிலுமாக போதைப் பொருட்கள் நடமாட்டத்தை தடுக்கவேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

இந்தத் திட்டத்தை கடந்த ஆண்டு தொடங்கியபோது, இது சமுதாய நலனுக்கான ஒரு சிறந்த திட்டம் என்று மருத்துவர்களும், பொதுமக்களும் வரவேற்றார்கள். போதைப் பழக்கத்தால், சீரழிந்து இருக்கின்ற மாணவர்களையும், இளைஞர்களையும் மீட்டெடுக்க வேண்டிய பெரும்பணி தமிழக அரசுக்கு இருக்கிறது என்று சொன்னார்கள். அவர்கள் நம்பிக்கைக்கேற்ப இந்த விஷயத்தில், தமிழக அரசு தொடர்ந்து செயல்பட்டு வந்து கொண்டிருக்கிறது.

போதைப் பழக்கம் என்பது, அதை பயன்படுத்துகிறவர்கள் மட்டுமில்லாமல், அவர்கள் குடும்பத்தினருக்கும், சமூகத்துக்கும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துகின்ற ஒரு கொடிய நோய். தனி மனிதருடைய வாழ்க்கையில் மட்டுமில்லை, மாநிலத் வளர்ச்சியிலேயும் மிகப்பெரிய பாதிப்பை அது ஏற்படுத்தும். போதைப் பொருளைச் சார்ந்திருக்கக் கூடியவர்களுக்கும், போதைக்கு அடிமையானவர்களும் ஒட்டுமொத்த சமூகத்துக்கும் பெரும் சுமையாக இருக்கிறார்கள். அதனாலதான், ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை தடுக்கின்ற நடவடிக்கையில் நாங்கள் தீவிரமாக இறங்கி இருக்கிறோம்.

கடந்த ஆண்டு இந்தத் திட்டத்த தொடங்கி வைத்து நான் பேசும்போது, ‘போதைப்பொருள் விற்பனை சங்கிலியை உடைக்க வேண்டும்; பள்ளி, கல்லூரிகளின் அருகே போதைப்பொருள் விற்பனையைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்" என்று சொன்னேன்.“இந்த நடவடிக்கையில் நான் சர்வாதிகாரி போல செயல்படுவேன்” என்று கொஞ்சம் கடுமையாகவே பேசியிருந்தேன். அந்த அடிப்படையில் தான் அரசும் நடவடிக்கை எடுத்துக்கொண்டு வருகிறது. போதைப்பொருள் விற்பனையில் தொடர்ந்து ஈடுபடக்கூடிய யாராக இருந்தாலும், அவர்கள் மேல் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு வழங்கப்பட்டிருக்கிறது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், 10-ஆம் நாளன்று, முதன்முறையாக மாநில அளவிலான மாநாட்டை "போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு" என்ற கழக அமைப்பை ஏற்படுத்தி ஒரு கருப்பொருளில் நடத்தினோம். அந்த மாநாட்டில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு, போதைப் பொருள் மற்றும் போதைப்பொருள் விற்பனையாளர்களை ஒழிப்பதற்கான புதிய உத்திகள் வகுக்கப்பட்டது.

2022 ஆகஸ்ட் 11 அன்று, மாபெரும் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு, 70 இலட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள். இந்தத் திட்டம் மிகவும் வெற்றிகரமாக அமைந்ததோடு, போதைப்பொருளுக்கு எதிரான போருக்கு ஒரு புதிய உத்வேகத்தை அளிக்கிறதாக இருந்தது. நம்முடைய அரசினுடைய இந்த முயற்சிக்கு, ஊடகங்கள் மற்றும் பொதுமக்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

தென்மாவட்டங்கள் உள்பட பல மாவட்டங்களில், பள்ளி, கல்லூரிகள் மற்றும் முக்கிய இடங்களில் கஞ்சா விற்பனை நடந்தால், பொதுமக்கள் தகவல் தெரிவிக்க புகார் எண்களும் வெளியிடப்பட்டது. போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த, வழக்குகள் பதிதல், கைது, போதைப் பொருட்கள் பறிமுதல், சொத்துகள் முடக்கம் என்று பல்வேறு நடவடிக்கைகளை செய்து கொண்டு வருகிறோம்.போதைப் பொருள் மற்றும் உளவெறி ஊட்டும் பொருட்கள் சட்டத்தின் (NDPS) கீழ் பதியப்பட்டிருக்கின்ற வழக்குகளில் தொடர்புடைய முந்தைய குற்றவாளிகளின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக, 2019 முதல் இந்த வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டுபிடித்து, கண்காணித்து கைது செய்து கொண்டு வருகிறோம்.

அதோடு, நிதி தொடர்பான விசாரணை, சொத்துகள் மற்றும் வங்கிக் கணக்குகளை முடக்குதல் போன்ற நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு எதிராக நிதி தொடர்பான விசாரணை நடத்தப்பட்டு, உரிய சட்டத்தின்கீழ் அவர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துகள் முடக்கப்படுகிறது.ஆகஸ்ட் 11, 2022 முதல், 154 குற்றவாளிகளுக்கு எதிராக நிதி தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட்டு, அவர்களிடமிருந்து 18 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 45 அசையும் அசையா சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

இதுவரை தமிழக வரலாற்றில் இல்லாத அளவுக்கு 16 ஆயிரம் கிலோ கைப்பற்றப்பட்ட போதைப் பொருள்கள் அழிக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய நடவடிக்கை எடுத்த DGP மற்றும் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு ADGP மகேஷ்குமார் அகர்வால் உள்ளிட்ட கடைநிலை காவல்துறை அதிகாரிகள் வரை அனைவரையும் நான் பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன். உங்களுக்கு என்னுடைய வணக்கங்கள்.

இந்த ஓராண்டில், NDPS சட்டவழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் 5,184 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டிருக்கிறது. கஞ்சா சாகுபடி இல்லாத தமிழகம் என்ற நிலையை தமிழ்நாடு இப்போது தொடர்ந்து பராமரித்து கொண்டு வருகிறது. ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, தெலங்கானா மற்றும் இந்தியாவோட வடகிழக்கு மாநிலங்களிலிருந்து கஞ்சா கடத்தப்படுவதுதான், தமிழகத்துக்கு கஞ்சா நுழைய முக்கிய ஆதாரமாக இருக்கிறது.இதையெல்லாம் கவனத்தில் வைத்து, அதை தடுக்குற வகையில் பல்வேறு நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டு வருகிறோம். ஒரு சில மாநிலங்களில் இருப்பதுபோல மோசமான நிலைமை தமிழகத்தில் இல்லையென்றாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போதைப் பொருள் தடுப்பு, விழிப்புணர்வு ஆகிய நடவடிக்கைகள நாம் முடுக்கி விட்டிருக்கிறோம்.

நான் பல ஆய்வுக் கூட்டங்களில் தெரிவித்த ஒரு கருத்தை, மீண்டும் மீண்டும் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.ஒவ்வொரு காவலரும் தனது காவல் நிலைய எல்லையில் போதை மருந்து விற்பனைய முற்றிலுமாக தடை செய்ய உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். கஞ்சா விளைவிப்பதை முற்றிலுமாக தடுத்தாக வேண்டும்.மலையடிவாரங்களில் கண்காணிக்க வேண்டும். அண்டை மாநிலங்களிலிருந்து கடத்தி வருவதை தடுத்தாக வேண்டும்.

எல்லை மாவட்டங்களினுடைய சோதனைச் சாவடிகளை அதிகப்படுத்த வேண்டும். கடலோர மாவட்டங்களில் கண்காணிப்பை அதிகப்படுத்த வேண்டும்.காவல்துறையினருடைய ரோந்து அதிகரிக்க வேண்டும்.அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும்.போதைப் பொருள்கள் அதிகம் விற்பனையாகின்ற இடங்களில் நிரந்தரமாக கண்காணிக்க வேண்டும்.பள்ளி, கல்வி நிறுவனங்களுக்கு அருகில் போதைப் பொருள் விற்கப்படுவதை தடுக்க வேண்டும்.

ஒவ்வொரு பள்ளி மற்றும் கல்லூரிகளில் 'போதைப்பொருள் எதிர்ப்பு மன்றம்' அமைத்து, அந்தக் கல்வி நிறுவனத்தை போதைப்பொருள் இல்லாத வளாகமாக அறிவிக்க ஆணையிடப்பட்டிருக்கிறது. மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போதைப்பொருள் தடுப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. இது ஆரோக்கியமான மற்றும் பொறுப்புள்ள அடுத்த தலைமுறையை உருவாக்கும் என்று நான் நம்புகிறேன்.

போதைப் பொருள் நடமாட்டத்தைத் தடுத்து நிறுத்த, என்னோட தலைமையில் அடிக்கடி ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. சிறப்பாக செயல்படுகிற காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களை ஊக்குவிக்கின்ற வகையில், போதைப்பொருள் உற்பத்தி மற்றும் சட்டவிரோத கடத்தலை ஒழிப்பதில், சிறப்பாக செயல்படுகிறவர்களுக்கு ‘தமிழ்நாடு முதலமைச்சரின் காவல் பதக்கம்’ என்ற சிறப்புப் பதக்கம் வழங்கப்படும் என்று அறிவித்தேன்.

அதனடிப்படையில், இந்த ஆண்டு, ஜூன் 26-ஆம் தேதி, "சர்வதேச போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான நாள்” அன்று ஆறு காவல்துறை அதிகாரிகள், காவலர்களுக்கு இந்த பதக்கம் வழங்கப்பட்டிருக்கிறது.அரசினுடைய போதை ஒழிப்பு செயல்பாடுகளைப் பரவலாக எடுத்துக் கொண்டு செல்வதற்காக, இன்று எல்லா கல்வி நிறுவனங்களிலும், மாபெரும் போதைப் பொருள் எதிர்ப்பு உறுதிமொழிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அரசு அலுவலர்கள், கல்வி நிறுவனங்கள், மாணவர்கள் என்று நம் எல்லாரும் போதைப்பொருள் இல்லாத தமிழகத்துக்காக அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும்.

பள்ளி மாணவர்கள் நிறைய பேர் இங்கு வந்திருக்கிறீர்கள். உங்களுக்கு பள்ளியில் Health is Wealth என்று சொல்லிக் கொடுத்திருப்பார்கள். இதை நீங்கள் எப்போதும் ஞாபகத்தில் வைத்துக் கொண்டிருக்க வேண்டும். ஆசிரியர்களும் இதை எப்போதும் ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கவேண்டும். நீங்கள் என்ன தான் பணம் சம்பாதித்தாலும் நல்ல உடல்நிலை இருந்தால்தான் உங்களால் தொடர்ந்து உழைக்கவும் முடியும், சம்பாதித்த பணத்தை வைத்து சந்தோஷமாக இருக்கவும் முடியும். இதுதான் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அறிவுரையாக வழங்கவேண்டும் என்று நான் இந்த தருணத்தில் நான் கேட்டுக் கொள்கிறேன்.

போதை ஒழிப்பைப் பொறுத்தவரை, தடுப்பு நடவடிக்கைகளும், விழிப்புணர்வு பிரச்சாரமும் ஒரு சேர நடக்க வேண்டும். காவல் துறையும், பொதுமக்களும் ஒரே நோக்கத்துடன் செயல்பட வேண்டும். இந்த நான்கும் நேர்கோட்டில் இணைந்தால் போதை இல்லாத தமிழ்நாட்டை நிச்சயம் உருவாக்கலாம், உருவாக்குவோம்" எனறு அவர் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்