பொது பாடத்திட்டம் அமலாக்கம் | தன்னாட்சி கலை, அறிவியல் கல்லூரிகள் சுயமாக முடிவெடுக்க உயர்கல்வித் துறை அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு ஒரே மாதிரியான பொதுப் பாடத்திட்டத்தை உயர்கல்வித் துறை அமல்படுத்தியுள்ளது. இதற்கு தன்னாட்சி கல்லூரிகள் பரவலாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இதற்கிடையே தன்னாட்சி கல்லூரிகளின் பிரதிநிதிகளுடன் உயர் கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி சென்னையில் கடந்த 2-ம் தேதி ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் பொது பாடத்திட்டத்தை அமல்படுத்தும் விவகாரத்தில் தன்னாட்சி கல்லூரிகள் சுயமாக முடிவு செய்து கொள்ளலாம் என்று உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது. இதுபற்றி உயர்கல்வித் துறை செயலர் கார்த்திக் வெளியிட்ட அறிவிப்பு: எதிர்காலத் தேவை கருதி உருவாக்கப்பட்டுள்ள பொது பாடத் திட்டத்தை 90 சதவீத அரசு உயர்கல்வி நிறுவனங்கள் தங்கள் கல்லூரியின் தன்மைக்கேற்ப சில மாற்றங்களுடன் நடைமுறைப்படுத்தியுள்ளன.

அதேபோல், இந்த பாடத்திட்டம் 70% தன்னாட்சி கல்லூரிகளில் அமல்படுத்தப்பட்டு உள்ளன. சில தன்னாட்சிக் கல்லூரிகள் மட்டும் தற்போது கற்பிக்கப்படும் பாடத் திட்டம் சிறப்பாக இருப்பதாகவும், பொது பாடத்திட்டத்தை பின்பற்றினால் கல்லூரியின் சிறப்புஅங்கீகாரம் பாதிக்கப்படும் எனவும் தெரிவித்தன. அதையேற்று பொது பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்திக் கொள்வது குறித்து தன்னாட்சி கல்லூரிகள் தங்கள் விருப்பத்துக் ஏற்ப முடிவு செய்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE