ஜன. 7, 8-ல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு இலச்சினையை வெளியிட்டார் முதல்வர்: பல லட்சம் கோடிக்கு முதலீடு வரும் என அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் அடுத்தாண்டு ஜன.7, 8-ம் தேதிகளில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல லட்சம் கோடிக்கான முதலீடுகள் ஈர்க்கப்படும் என்று மாநாட்டுக்கான இலச்சினை வெளியீட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் முதல்வர் பேசியதாவது: உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 ஜன. 7, 8 ஆகிய தேதிகளில் சென்னையில் நடத்தப்பட உள்ளது. இந்தமாநாட்டின் மூலம், பல லட்சம் கோடிக்கான முதலீடுகள் ஈர்க்கப்படும். மாநிலத்தின் இளைஞர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு வேலைவாய்ப்பு பன்மடங்கு அதிகரிக்கும்.நமது மாநிலத்தின் பொருளாதாரமும் பெருமளவு வளர்ச்சியடையும்.

இங்கே வந்திருக்கக்கூடிய தொழில்துறை கூட்டமைப்பினர் அனைவரும் தமிழகத்தின் பிராண்ட் அம்பாசிடர்களாக மாறி, முன்னணி நிறுவனங்களை தமிழகத்தில் முதலீடு செய்ய ஊக்குவிக்க வேண்டும்.

தொழில் நிறுவனங்களுக்கான நிலங்கள் கையிருப்பு அடிப்படையில், தமிழகம் முதலிடத்தில் உள்ளது. பன்னாட்டு நிறுவனங்கள் எதிர்ப்பார்புகளை பூர்த்தி செய்யும் விதமாக நம்பகமான உயர்தர குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் சூழலை தமிழகம் கொண்டுள்ளது. உங்கள் தொழில் வளர்ச்சிக்கான சிறந்த இடம் தமிழகம்தான். இவ்வாறு முதல்வர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தலைமைச்செயலர் சிவ்தாஸ் மீனா, தொழில்துறை செயலர் ச.கிருஷ்ணன், சிறப்பு பணி அலுவலர் அருண் ராய், வழிகாட்டி நிறுவன தலைமை செயல் அலுவலர் வே.விஷ்ணு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE