ஓசூர் அருகே 100 மீ. சாலை பணிக்காக 15 ஏக்கர் ஏரி நீர் முழுவதும் வெளியேற்றம்; 700 மரங்கள் வெட்டி சாய்ப்பு

By கி.ஜெயகாந்தன்

ஓசூர் அருகே 100 மீட்டர் சாலைப் பணிக்காக 15 ஏக்கர் பரப்பளவில் நிரம்பியிருந்த ஏரி நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டது. மேலும், இப்பணிக்காகச் சாலையோரம் உள்ள 700 மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. இதனால், அப்பகுதி பாசன விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

ஓசூர் அருகே கெலமங்கலத்திலிருந்து ராயக்கோட்டை, அத்திப்பள்ளி வரை சாலை விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக இச்சாலையிலிருந்த புங்கன் மற்றும் புளியமரங்கள் வெட்டப்பட்டன. இதனிடையே, கெலமங்கலம் அருகே போடுச்சிப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஜெக்கேரியில் சாலையோரம் 15 ஏக்கர் பரப்பளவில் தல்லுசெட்டி ஏரி உள்ளது.

சாலை விரிவாக்கப் பணிக்காக ஏரியின் நிலப்பரப்பில் 100 மீட்டர் தூரம் 10 மீட்டர் அகலத்துக்கு நிலம் தேவைப்படுகிறது. இதற்காக ஏரியிலிருந்த தண்ணீரை கடந்த 15 நாட்களாக மோட்டார் மூலம் வெளியேற்றும் பணி நடைபெற்ற நிலையில், நேற்று தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டது. இதனால், ஏரியில் தண்ணீரின்றி மீன்கள் துள்ளிக் குதித்தன. அப்பகுதி மக்கள் மீன்களை தங்கள் தேவைக்குப் பிடித்துச் சென்றனர். அப்பகுதி மக்களின் நிலத்தடி நீருக்கும், விவசாயத்துக்கும் பயனாக இருந்த ஏரி நீர் முற்றிலும் வெளியேற்றப்பட்டதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

இதுதொடர்பாக ஏரி பாசன விவசாயிகள் கூறியதாவது: கடந்த 10 ஆண்டுகளுக்குப் பின்னர் கடந்தாண்டு நிரம்பிய தல்லுசெட்டி ஏரி மூலம் சுமார் 50 ஏக்கர் விளை நிலங்கள் பயன் அடைந்து வந்தன. இந்நிலையில், சாலை விரிவாக்கப் பணிக்காக ஏரியிலிருந்த மொத்த தண்ணீரையும் வெளியேற்றி, வீணாக்கி விட்டனர்.

இதனால், நிலத்தடி நீர் மற்றும் இதனை நம்பியிருந்த விளை நிலங்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், ஏரியிலிருந்த மீன் உள்ளிட்ட நீர் வாழ் உயிரினங்களும் உயிரிழந்துள்ளன. தற்போது, எவ்வளவோ நவீன வசதிகள் உள்ள நிலையில் அதைப் பயன்படுத்தி ஏரியில் தடுப்பு அமைத்து சாலைப் பணிக்குத் தேவையான இடத்தில் உள்ள தண்ணீரை மட்டும் வெளியேற்றி இருக்கலாம். ஆனால், தண்ணீரை முற்றிலும் வெளியேற்றி இருப்பது வேதனையாக உள்ளது.

மேலும், இப்பணிக்காக கெலமங்கலத்திலிருந்து அத்திப்பள்ளி வரை சாலையோரம் இருந்த 700 மரங்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளன. இப்பணியைத் தடுக்க முயற்சி செய்தோம் ஆனால், அதிகாரிகளுக்கும் எங்களின் குரல் கேட்காமல் போனது. மீண்டும் மழை பெய்து ஏரி எப்போது நிரம்பும் என்பது தெரியவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

கடந்த 10 ஆண்டுகளுக்குப் பின்னர் கடந்தாண்டு நிரம்பிய தல்லுசெட்டி ஏரி மூலம் சுமார் 50 ஏக்கர் விளை நிலங்கள் பயன் அடைந்து வந்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE