ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக கருப்புக் கொடி - திருவண்ணாமலையில் 91 பேர் கைது

By இரா.தினேஷ்குமார்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை ரமணாசிரமம் அருகே ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக நேற்று (ஆகஸ்ட் 10-ம் தேதி) மாலை கருப்பு கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்ட 91 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, திருவண்ணாமலைக்கு 2 நாள் பயணமாக நேற்று வருகை தந்தார். திருவண்ணாமலை கிரிவல பாதையில் குபேர லிங்கம் அருகே உள்ள திருமண மகாலில் சாதுக்களுடனும் மற்றும் மூக்குபொடி சித்தர் ஜீவ சமாதி அருகே உள்ள விவசாய நிலத்தில் இயற்கை விவசாயிகளுடன் நடைபெற்ற சந்திப்பு நிகழ்வுகளில் பங்கேற்றார். பின்னர் அவர், கிரிவல பாதையில் (செங்கம் சாலை) ரமணாசிரமம் மற்றும் யோகி ராம் சுரத்குமார் ஆசிரமங்களுக்கு நேற்று மாலை சென்று தரிசனம் செய்தார்.

இந்நிலையில், சனாதனம் பேசி மதவெறியை தூண்டுவது, தமிழக மக்களின் ஒற்றுமையை சீர்குலைப்பது, தமிழக அரசின் திட்டங்களை செயல்படுத்த விடாமல் தடுப்பது எனக் கூறி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக திருவண்ணாமலை ரமணாசிரமம் அருகே நேற்று கருப்பு கொடி போராட்டம் நடைபெற்றது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சிவக்குமார் தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வீரபத்திரன், ஒன்றிய செயலாளர் ராமதாஸ், மதிமுக மாவட்ட செயலாளர் சீனி கார்த்திகேயன், மாநில மாணவரணி துணை செயலாளர் வழக்கறிஞர் பாசறை பாபு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளர் செல்வம், மாவட்டச் செயலாளர்கள் நியூட்டன், வளர்மதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் தங்கராஜ், மனித நேய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர் நாசர் உசேன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது அவர்கள், தமிழகத்தை விட்டு ஆளுநர் ரவி வெளியேற வேண்டும் என முழக்கமிட்டனர்.

ரமணாசிரமத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வருவதற்கு முன்பாகவே, கருப்பு கொடி காட்டும் போராட்டத்தில் பங்கேற்றவர்களை காவல்துறையினர் கைது செய்யும் பணியை தொடங்கினர். ஆசிரமம் உள்ளே ஆளுநர் ஆர்.என்.ரவி நுழையும்போது, குறைந்த எண்ணிக்கையில் இருந்தவர்கள், காவல்துறையின் கைது நடவடிக்கையும் மீறி கருப்பு கொடி காட்டினர். இப்போராட்டத்தில் ஈடுபட்ட 91 பேரை கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE