மேய்ச்சல் நிலம், காடழிப்பு பிரச்சினைகள் மிகத் தீவிரமானவை: விவசாயிகள் மத்தியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, திருவண்ணாமலையில் இயற்கை விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்கங்களின் உறுப்பினர்களுடன் இன்று கலந்துரையாடினார்.

அவரது உரையின் முழு விவரம்: நமக்கெல்லாம் உணவளிப்பவர்கள் உழவர்களே. ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே விவசாயிகள் உயர்நிலையில் இருந்தனர். அவர்கள் எப்போதும் சமுதாயத்தில் ஒரு உன்னதமான தொழிலைச் செய்கிறார்கள்.

பழங்காலத்திலிருந்தே மிகவும் விலையுயர்ந்த செல்வம் 'உணவு' என்றும், மோசமான எதிரி 'பசி' என்றும் கூறப்பட்டுள்ளது. மக்களின் பசியை போக்க உணவு வழங்கும் உன்னதமான தொழிலை செய்பவர்கள் நீங்கள். ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன், குறிப்பாக இந்த மெட்ராஸ் மாகாணம் விவசாயத்தில் உலகிலேயே சிறந்து விளங்கியது என சொல்வார்கள்.

ஆங்கிலேயர் ஆளுகையின் துவக்கத்தில், தமிழ்நாட்டில் நெல் சாகுபடி செய்யும் பகுதிகளில் உற்பத்தி செய்ததாக பதிவேடு காப்பகங்களில் உள்ள தகவல்கள் கூறுகின்றன. அப்போது ஒவ்வொரு ஹெக்டேருக்கும் சுமார் 7 மெட்ரிக் டன் நெல் என்ற வகையில் உற்பத்தி நடந்தது. இது, இன்று மிகவும் முன்னேறிய நாடாக விளங்கும் ஜப்பான் செய்யும் உற்பத்தி அளவை விட அதிகம்.

ஆனால், இன்று நான் நமது டெல்டா பகுதிகளில் உற்பத்தியாகும் நெற்பயிர் பதிவுகளை சரிபார்த்தபோது, ஹெக்டேருக்கு 5.5 மில்லியன் டன் முதல் 6 மெட்ரிக் டன் வரையே உற்பத்தி செய்வதாக அறிந்தேன். நம் முன்னோர்கள் இயற்கை விவசாயம் செய்து இயற்கை முறையில் உணவு உற்பத்தி செய்து வந்தனர். விவசாயத்தை எப்படி செய்வது என அவர்கள் நன்கு அறிந்து வைத்திருந்தனர்.

ஆங்கிலேயர் காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட கொள்கையால் நமது விவசாயம் அழிந்தது. முதலில் விவசாயிகள் மீது ஆங்கிலேயர்கள் அதிக வரி விதிக்க ஆரம்பித்தனர். இரண்டாவதாக, வெளியில் ஏற்றுமதி செய்ய பயன்படும் உணவு அல்லாத பயிர்களை பயிரிடுமாறு மக்களை நிர்பந்தித்தனர். அதன் விளைவாக நமது உணவு தானிய உற்பத்தி பாதிக்கப்பட்டு, நம் நாட்டில் பஞ்சம் மற்றும் உணவுப் பற்றாக்குறையை அனுபவித்தோம்.

அந்த நேரத்தில் ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்த ஆரம்பித்தோம், அது தொடக்கத்தில் அதிக உற்பத்தியைக் கொடுத்தது. ஆனால் சில தசாப்தங்களுக்குப் பிறகு அது கீழே வந்து எங்கள் நிலத்தை அழித்து மலட்டுத்தன்மையடையச் செய்தது.

நம் நாட்டில் சுமார் 30, 35 ஆண்டுகளுக்கு முன்பு வரை, பஞ்சாப் ஒரு முற்போக்கான விவசாய மாநிலமாக விளங்கியது. அதிக அளவு கோதுமையை உற்பத்தி செய்து வந்த வளமான மாநிலமாக அது இருந்தது. ஆனால், அதிக அளவில் ரசாயன உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்துவதால், பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக இருந்த பஞ்சாப் இப்போது உற்பத்தி வரிசையில் கீழறங்கி விட்டது. ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள், நமது நிலத்தின் வளத்தை அழிக்கும், அது நிலையானது கிடையாது. இப்படியே தொடர்ந்தால் உலகமே உணவுப் பற்றாக்குறையால் தவிக்கும் நிலை வரும்.

இன்று நாம் உணவு உற்பத்தியில் தன்னிறைவாக இருக்கிறோம். அத்துடன் பட்டினியால் வாடும் மக்கள் வாழும் நாடுகளுக்கும் உணவளிக்கும் நிலைக்கு வளர்ந்துள்ளோம். ஆனால், இப்போது ரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்து போன்ற பழக்கங்களிலிருந்து விலகி இயற்கை வேளாண்மைக்கு நாம் சென்றாக வேண்டும்.

ஒரு விவசாய நண்பரிடம் நான் பேசிக் கொண்டிருந்தபோது, முந்தைய காலங்களில் நாம் எப்படி போதுமான விவசாயம் செய்தோம் என விளக்கினார். அந்த காலத்தில் போதுமான கால்நடைகள் இருந்ததாக அவர் குறிப்பிட்டார். கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலங்கள் இருப்பதால் விவசாயிகள் நெருக்கடிக்கு ஆளாகவில்லை. தங்களுக்கு தேவையான பால் அவர்களுக்கு கிடைத்தது. கால்நடைகள் மேய்ச்சல் மூலம் உரம் அவர்களுக்குக் கிடைத்தது. இவற்றின் விளைவாக விவசாய நிலம் ஆரோக்கியமாக இருந்தது. இதைத்தான் ‘ஒருங்கிணைந்த பண்ணைய முறை’ என அழைக்கிறோம்.

மேய்ச்சல் நிலத்தை நாம் இழப்பது சகஜமான ஒன்றாகிவிட்டது. நம் நாட்டில் விவசாயிகள் மகிழ்ச்சியாக இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். தங்கள் வாழ்க்கையில் அனைத்து அடிப்படை வசதிகளையும் அவர்கள் பெற வேண்டும். வாழ்க்கையில் சிறந்தவை அவர்களுக்கு கிடைக்க வேண்டும். அத்தகைய வசதிகளை அணுகக் கூடியவர்களாக அவர்களின் வாழ்க்கை நிலை உயர வேண்டும்.

விவசாயிகளின் நலன்களை காக்க, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மிகவும் கடினமாக உழைத்து வருகிறது. விவசாயிகளின் வருமானம் பெருகவும், அவர்கள் நவீன இயற்கை விவசாயத்திற்குச் செல்லவும், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவும், அவர்கள் செழிப்பாக வாழ வேண்டும் என்பதிலும் அரசு மிகவும் தீவிரமாக உள்ளது. இயற்கை விவசாயம் என்பதால், எந்த தொழில்நுட்பத்தை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்று அர்த்தமல்ல. இன்று தொழில்நுட்பம் அவசியம். விவசாய துறையில் பயன்படுத்துவதற்கு பல தொழில்நுட்பங்கள் உள்ளன. அவை ஒரு விவசாயிக்கு அதே நிலத்தில் இருந்து அதிக உற்பத்தி செய்ய உதவும்.

நம் நாட்டில் பண்ணை உற்பத்தி அமைப்புகள், அரசு சாரா அமைப்புகள் போன்றவை இப்போது இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அவற்றின் மூலம் விவசாயிகள் ஒழுங்கமைக்கப்படுகிறார்கள். ஏனென்றால் முன்பெல்லாம் விவசாயிகள் பிரச்சனைகளை எதிர்கொள்ள முக்கிய காரணம் அவர்கள் சரியாக ஒழுங்கமைக்கப்படாமல் இருந்ததுதான். உங்களுக்குள் அமைப்பு ரீதியாக ஒழுங்கமைக்கப்படாதவரை உங்கள் குரலை செவி கொடுத்து யாரும் முழுமையாக கேட்க மாட்டார்கள்.

இந்த விவசாயிகள் சிறிய அல்லது பெரிய குழுக்களாக விவசாயிகள் உற்பத்தி அமைப்பு (எஃப்.டி.ஓ), கூட்டுறவுகள் என ஒழுங்கமைப்பது அவர்கள் உரத்த குரலை கொடுப்பதற்கும் அரசாங்கத்துடன் முழுத் திறனுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் தேவையான பலத்தை தரும்.

ஐந்தாயிரம் பேர் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தால், அவர்கள் ஒழுங்கமைக்கப்படாத ஐந்து லட்சம் பேரை விட பலம் வாய்ந்தவர்கள். இந்த கருத்தை வழங்கியவர் நோபல் பரிசு பெற்ற அமெரிக்காவைச் சேர்ந்த பொருளாதார நிபுணர். ஒரு காலத்தில் விவசாயிகள் ஒழுங்கமைக்கப்படவில்லை, ஆனால் இப்போது அவர்கள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் பல விவசாய பண்ணைகளுக்குச் சென்றுள்ளேன். அதில் பல விவசாயிகள் நன்கு படித்தவர்கள், ஐஐடி பின்னணியில் உள்ளவர்கள், இளைஞர்கள், பெண்கள் விவசாயம் செய்ய வருவதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தேன். அதே நிலத்தில் இருந்து இயற்கை விவசாயம், பலவகையான உணவு தானியங்கள், பால் மற்றும் பால் பொருட்களை அதிக அளவில் உற்பத்தி செய்கிறார்கள். பலருக்கும் அவர்களால் வேலை வாய்ப்பை கொடுக்க முடிகிறது.

நமது விவசாயிகள் எண்ணிக்கையில் அதிகமானவர்களாக சுமார் 60 முதல் 70 சதவீதம் பேர் விவசாயத்தை நம்பி இருப்பவர்களாக உள்ளபோதும் அவர்களுக்கு தேவையான வசதிகள் கிடைக்காமல் இருப்பது வேதனையான விஷயம். அரசாங்கத்தின் போதிய கவனம் அவர்களுக்குக் கிடைக்க வேண்டும்.

விவசாயிகள் முழுமையாக வளர்ச்சி அடையவில்லை என்றால் நம் நாடால் முழுவதுமாக வளர்ந்து முன்னேற முடியாது. இன்று நாம் அமிர்தகாலத்தில் இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். 2047ம் ஆண்டுக்குள் நாம் எட்ட வேண்டிய இலக்கு உள்ளது. அதுவே முழு வளர்ச்சியடைந்த பாரதம், முழு வளர்ச்சியடைந்த இந்தியா ஆகும். அந்த இலக்கை எட்டும்போது ஒவ்வோர் இந்தியரும் சிறந்த வாழ்க்கையைக் கொண்டிருக்க வேண்டும்.

அடுத்த 24 வருட பயணத்தில் விவசாயிகளுக்கு ஒரு முக்கிய பொறுப்பு உள்ளது. இன்று மொத்த உலகமும் இந்தியாவின் தலைமைத்துவத்தையும் பல உலகளாவிய பிரச்சனைகளையும் தீர்க்கும் என்ற எதிர்பார்ப்புடன் பார்க்கிறது. அதில் ஒன்று முக்கிய பிரச்சனை காலநிலை மாற்றம். அதிகப்படியான ரசாயன உரங்கள், அதிகப்படியான காடழிப்பு, அதிகப்படியான சுரங்கங்கள், பூமியின் அதிகப்படியான இயற்கை வள சுரண்டல்கள் அதற்குக் காரணம். இந்த வகையில் உலகம் மிக மிக கடுமையான காலநிலை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.

இந்த உலகில் போதிய உணவு கிடைக்காதவர்கள் அதிகம். இன்று உலகில், உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு மக்கள் வறுமையில் வாழ்கின்றனர். உணவைப் பெறவும், மரியாதையைப் பெறவும், வளர்ந்த நாடுகளுக்கு இணையாக தங்களுக்கு உதவும் நாடாக அந்த மக்கள் இந்தியாவை பார்க்கிறார்கள்.

இந்த விஷயங்களில் எல்லாம் உலகம் பின்பற்றும் வழிமுறை நிலையானது அல்ல. அதனால் நமது இந்திய மாதிரியை நாம் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். இந்திய மாதிரியில் தான், இயற்கை விவசாயம், காடுகள் பாதுகாத்தல், மேய்ச்சல் நிலங்களை பராமரித்தல், கால்நடைகள் போன்றவற்றைப் பேணி வளர்த்து அதிக அளவில் உற்பத்தி செய்து, நிலையான உலகை பராமரிக்க இயலும். அதற்கு இயற்கை வேளாண்மை உதவும். நிலையான வாழ்வை எட்ட இதுவே வழி என்பதை நம்மால் உலகுக்குக் காட்ட முடியும்.

நமது நாடு பரப்பில் பெரியது மற்றும் பன்முகத்தன்மை கொண்டது. இங்கே தமிழ்நாடும் தமிழ்நாட்டு மக்களும் மிகவும் நல்லவர்கள், சிறந்தவர்கள். தங்களால் எதையம் சாதிக்க முடியும் என்பதை உலகுக்குக் காண்பிக்கும் திறன் கொண்டவர்கள். அந்த திறமையை வெளிப்படுத்தி இதுவே வழி என இந்த தேசத்துக்கு சொல்லி வழிகாட்டக் கூடியவர்கள் அவர்கள்.

மேய்ச்சல் நிலம் மற்றும் காடுகளை அழித்தல் பற்றி நீங்கள் குறிப்பிட்டுள்ள பிரச்சனைகள் மிகவும் தீவிரமானவை. கூட்டு முயற்சியால் நீங்கள் பல ஏரிகளை தூர்வாரியிருக்கிறீர்கள் என்றும் கேள்விப்பட்டேன். அதுவே உங்களின் பலம். இவ்வாறு பேசினார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE