சென்னை: “சீக்கியம், பௌத்தம் ஆகிய மதங்களைத் தழுவியவர்களுக்குக் காட்டப்படும் பரிவு, கிறிஸ்தவத்தைத் தழுவிய பட்டியலினத் தவர்களுக்கும் காட்டப்பட வேண்டும். இதில் ஓரவஞ்சனை செய்வது கூடாது” என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்து மதத்தைப் பின்பற்றும் பட்டியல் சமூகத்தினரை மட்டுமே அட்டவணை சாதிகளின் பட்டியலில் சேர்க்க வேண்டும் என 1950 ஆகஸ்டு 10-ம் நாள் குடியரசுத் தலைவரின் ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதனால் கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய மதங்களைத் தழுவிய பட்டியலினத்தார் எஸ்.சி பட்டியலில் சேர்க்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டனர். எனவே, அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்க அந்நாளை தலித் கிறிஸ்தவர்கள் கறுப்பு நாளாகக் கடைபிடித்து வருகின்றனர். அவர்தம் நெடுநாளைய அறப் போராட்டம் வெற்றி பெற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மத்திய அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் அவர்களது நியாயமான கோரிக்கையை ஏற்று அவர்களை பட்டியலினத்தில் சேர்த்திட வேண்டும் என வலியுறுத்துகிறோம். இந்து மதத்தைப் பின்பற்றுவோரைத்தான் எஸ்.சி பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற குடியரசுத் தலைவரின் ஆணையில் 1956-ல் திருத்தம் கொண்டுவரப்பட்டு சீக்கிய மதத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டோரையும் எஸ்.சி பட்டியலில் சேர்ப்பதற்கு வகைசெய்யப்பட்டது.
அடுத்து 1990-ம் ஆண்டு செய்யப்பட்ட திருத்தத்தால் பௌத்த மதத்தைத் தழுவிய தாழ்த்தப்பட்டோரையும் எஸ்.சி பட்டியலில் சேர்த்துக் கொள்வதற்கு அனுமதியளிக்கப்பட்டது. ஆனால், கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய மதங்களைத் தழுவிய மக்களை மட்டும் அப்பட்டியலில் சேர்க்கப்படாமல் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்.
» தாம்பரம் - நெல்லை இடையே சிறப்பு ரயில்
» தமிழகத்தில் இன்றும், நாளையும் 11 மாவட்டங்களில் மழை வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
இந்திய மத்திய அரசால் நியமிக்கப்பட்ட 'ரங்கநாத் மிஸ்ரா கமிஷன்' தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி பட்டியலில் சேர்த்து இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என அறிக்கை அளித்து 16 ஆண்டுகள் ஆன பின்னரும் கூட இந்திய ஒன்றிய அரசாங்கம் அதன்மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது வேதனைக்குரியதாகும். பின்னர், 2022-ல் மேலும் இது குறித்து ஆய்வு செய்ய கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையில் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணிகளுக்காக அலுவலக இடம் கொடுக்கப்பட்டதை தவிர வேறெந்த வசதிகளும் இன்னும் செய்துதரப்படவில்லை. தேவையான வசதிகள் செய்து தரப்பட்டால் இக்குழுவின் அறிக்கை அடுத்த ஆண்டு 2024-ல் சமர்ப்பிக்கப்படலாம் என அவர் தெரிவித்திருக்கிறார். தமிழக சட்டமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் முதல்வர் ‘கிறிஸ்தவ மதத்தை பின்பற்றும் ஆதி திராவிட மக்களை எஸ்சி பட்டியலில் சேர்த்து அவர்களுக்கான உரிமைகளை வழங்கிட வேண்டும்’ என தனித் தீர்மானத்தை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் மீதான நடவடிக்கைகளும் இன்னும் மத்திய அரசால் எடுக்கப்படவில்லை.
ஒருவர் எந்த மதத்தை வேண்டுமானாலும் பின்பற்றுவதற்கு நமது அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்பு எண்-25இல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அது அடிப்படை உரிமைகளில் ஒன்றாகும். கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய மதங்களைத் தழுவிய தாழ்த்தப்பட்டோரை மட்டும் எஸ்.சி பட்டியலில் சேர்க்காமல் வஞ்சிப்பது அரசியலமைப்புச் சட்டத்தால் உறுதி செய்யப்பட்ட அடிப்படை உரிமையை மறுப்பதாகும். இந்த அநீதியை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு கடந்த 13 ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
பிறப்பின் அடிப்படையில் பாகுபாடு காட்டும் இந்து மதத்தின் சாதி கோட்பாடு எல்லா மதங்களையும் தொற்றிப் பாழாக்கிவிட்டதால் எந்த மதத்தைத் தழுவினாலும் தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுகின்றனர். இந்த உண்மை ஆட்சியாளர்களுக்குத் தெரிந்திருந்தும் கூட தலித் கிறிஸ்தவர்களை எஸ்சி பட்டியலில் சேர்க்காமல் பாரபட்சம் காட்டுகின்றனர். இந்தப் போக்கு மாறவேண்டும்.
சீக்கியம், பௌத்தம் ஆகிய மதங்களைத் தழுவியவர்களுக்குக் காட்டப்படும் பரிவு கிறிஸ்தவத்தைத் தழுவிய பட்டியலினத்தவர்களுக்கும் காட்டப்படவேண்டும். இதில் ஓரவஞ்சனை செய்வது கூடாது என இந்திய அரசுக்கு சுட்டிக் காட்டுகிறோம்" என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
10 mins ago
தமிழகம்
16 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago