அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு: உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் போதுமான ஆதாரங்கள் இல்லாததால், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவியை விடுதலை செய்து வேலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. லஞ்ச ஒழிப்புத் துறை இதுவரை மேல்முறையீடு செய்யாத நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.

1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் இருந்தபோது, போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் பொன்முடி. இவர் வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 36 லட்ச ரூபாய்க்கும் மேலாக சொத்து சேர்த்ததாக அவர் மீதும், அவரது மனைவி விசாலாட்சி மீதும் லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் துணை காவல் கண்காணிப்பாளர் வழக்குப் பதிவு செய்தார். 1996 மே 13 முதல் 2002 மார்ச் 31 வரையிலான நாட்களை லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை காலமாக எடுத்துக்கொண்டு, 2002 மார்ச் 14-ம் தேதி வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், இந்த வழக்கு வேலூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இதில் 172 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு, வாதங்கள் நிறைவடைந்த நிலையில், கடந்த ஜூன் 28-ம் தேதி நீதிபதி வசந்த லீலா பிறப்பித்த உத்தரவில், பொன்முடி மற்றும் அவரது மனைவி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை. போதிய ஆதாரங்களும் இல்லை எனக் கூறி இருவரையும் வழக்கிலிருந்து விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில் இதுவரை சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படவில்லை. உயர் நீதிமன்றத்தில் எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை தற்போது நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்து வருகிறார். இந்த நிலையில், அமைச்சர் பொன்முடி மீதான லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கில் வேலூர் நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக இன்று பிற்பகல் விசாரணைக்கு வரவுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE