ஆவின் பணி நியமனம் ரத்துக்கு எதிரான வழக்கில் தேர்வு நடத்திய பல்கலைக்கழகங்கள் சேர்ப்பு

By கி.மகாராஜன் 


மதுரை: ஆவின் பணி நியமனம் ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கில் தேர்வு நடத்திய பல்கலைக்கழகங்கள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விருதுநகரை சேர்ந்த ஸ்ரீலட்சுமி, சுமதி உட்பட 41 பேர் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவில், "விருதுநகர், திருச்சி, மதுரை ஆவினில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த 2019ல் வெளியானது. நாங்கள் அந்த பணிக்கு விண்ணப்பத்தோம். எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத்தேர்வில் வெற்றிப்பெற்று 2021ல் பணியில் சேர்ந்தோம்.

பின்னர் ஆவினில் நேரடி பணி நியமனங்கள் விதிகளை பின்பற்றாமல் நடைபெற்றதாக கூறி பணி நியமனங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. இதை எதிர்த்து நாங்கள் உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தேன். அதில் எங்களை மீண்டும் பணியில் சேர்த்து, பணித் தொடர்ச்சி வழங்குமாறு கூறியிருந்தோம். எங்கள் மனுக்களை தனி நீதிபதி தள்ளுபடி செய்தார். இதனை ரத்து செய்து எங்களை மீண்டும் பணியில் சேர்த்து பணித் தொடர்ச்சி வழங்க உத்தரவிட வேண்டும்" இவ்வாறு கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், டி.பரதசக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதிகள், ஆவின் பணி நியமனத் தேர்வு நடத்திய பல்கலைக்கழகங்கள் தாமாக முன்வந்து எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்படுகின்றன. பல்கலைக்கழகங்கள் தேர்வு நடத்திய முறை குறித்து பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது என உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE