‘தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப் படத்தின்  தயாரிப்பாளர், இயக்குநருக்கு பாகன் தம்பதி நோட்டீஸ்

By செய்திப்பிரிவு

முதுமலை: ‘தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப் படத்தின் தயாரிப்பாளர், இயக்குநருக்கு, அந்த படத்தில் நடித்து புகழ்பெற்ற பாகன் தம்பதி நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
முதுமலை புலிகள் காப்பகத்தில் 20-க்கும் மேற்பட்ட வளர்ப்பு யானைகளை வனத்துறையினர் பராமரித்து வருகின்றனர். இங்கு தாயை பிரிந்து வந்த ரகு, பொம்மி ஆகிய குட்டி யானைகளை, பொம்மன் - பெள்ளி தம்பதி வளர்த்து வந்தனர்.

இதையறிந்த கார்த்திகி கொன்சால்வேஸ் என்ற இயக்குநர், 2 குட்டி யானைகளை வளர்த்த விதம் உள்ளிட்ட அனைத்தையும், 2 ஆண்டுகளாக வனப் பகுதியில் தங்கி, ‘தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்’ என்ற பெயரில் ஆவணப்படமாக எடுத்தார். இதன் காட்சிகள் சிறப்பாக இருந்ததால், ஆஸ்கர் விருதுக்கு அனுப்பிவைத்தார். இதில் சிறந்த ஆவணப் படமாக தேர்வு பெற்றது. இதனால், முதுமலை புலிகள் காப்பகம் உலகப்புகழ் பெற்றது.

இதையடுத்து பொம்மன் - பெள்ளி தம்பதியை தமிழக முதல்வர் ஸ்டாலின் அழைத்து ஒரு லட்சம் பணம் கொடுத்து பாராட்டினார். அதேபோல், பிரதமர் மோடி, குடியரசு தலைவர் முர்மு ஆகியோரும் முதுமலை வந்து தம்பதியை பாராட்டிச் சென்றனர். இந்நிலையில், ஆவணப்படம் எடுத்த தயாரிப்பாளர், இயக்குநர் ஆகியோர் தங்களுக்கு வீடு, நிலம்,
பணம் தருவதாக கூறி ஏமாற்றிவிட்டனர் என்று இயக்குநர் கார்த்திகி மீது பொம்மன் - பெள்ளி தம்பதி புகார் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் கூறும்போது, "இரவு, பகல் பாராமல் வனப்பகுதிக்குள் சென்று அவர்கள் கூறியபடி நடித்துக் கொடுத்தோம். வயதான காலத்தில் எங்களுக்கு நடக்கக்கூட முடியாத நிலையிலும், கஷ்டத்தை பொறுத்துக் கொண்டு காடு, மேடு என அலைந்து அவர்கள் கூறியபடி செய்தோம். ஆவணப்படம் முடிந்ததும், எங்களுக்கு வீடு, நிலம், பணம், பேரக் குழந்தைகளுக்கு நல்ல படிப்பு கொடுப்பதாக கூறினார்கள். ஆனால், எதுவும் தரவில்லை. அவரை தொடர்புகொண்டால் ‘நான் கொஞ்சம் பிஸியாக இருக்கிறேன்’ என்று கூறுகிறார். ‘உங்கள் அக்கவுண்ட்டில் பணம் போட்டிருக்கிறேன்’ என்கிறார். ஆனால், ஒன்றுமில்லை. ஏமாற்றுகிறார்கள், எல்லாம் கடவுள் பார்த்துக்கொள்வார்" என்றனர்.

இதற்கிடையே சென்னையை சேர்ந்த சமூக ஆர்வலர் பிரவீன் ராஜ் என்பவர் பொம்மன் - பெள்ளி தம்பதியை அழைத்துச் சென்று, அவர்களின் பிரச்சினை குறித்து முகமது மன்சூர் என்ற வழக்கறிஞருடன் பேசியுள்ளார். இதைத்தொடர்ந்து, பட தயாரிப்பாளர், இயக்குநர் ஆகியோருக்கு வழக்கறிஞர் முகமது மன்சூர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதுதொடர்பாக பிரவீன் ராஜ் கூறும்போது, "இந்த ஆவணப் படம் எடுக்க பொம்மன்- பெள்ளி தம்பதி பல்வேறு கஷ்டங்களை சந்தித்துள்ளனர். படப்பிடிப்பு முடிவில் வீடு, பணம், பேரன்களுக்கு படிப்பு கொடுப்பதாக வாய்மொழி உத்தரவாதம் அளித்துள்ளனர்.

ஆஸ்கர் விருது என்பது அதில் நடித்த யானை, பூனை என எல்லோருக்கும் சொந்தமானதுதான். அந்த ஆஸ்கர் விருதை 2 நாட்கள் பொம்மன் வீட்டில் வைத்திருக்கலாமே, அப்படி என்ன தீண்டத்தகாதவர்களா அவர்கள்? ஆஸ்கர் விருது கிடைத்ததன் மூலமாக தயாரிப்பாளர், இயக்குநருக்கு ரூ.7 கோடி வரை பணம் கிடைத்துள்ளதாக தெரிகிறது.

ஆவணப்படத்தின் மூலமாக கிடைக்கும் பணத்தில் ஒரு பகுதியை பொம்மன் - பெள்ளிக்கு கொடுப்பதாக உறுதி அளித்தனர். ஆனால், அதை செய்யவில்லை. வீடு கட்டி தருவதாகவும் கூறியுள்ளனர். இப்போது தொடர்பு கொண்டால் செல்போனை எடுப்பதில்லை. இதையடுத்து, நோட்டீஸ் அனுப்பிஉள்ளோம்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

25 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்