தமிழ்நாடு வனம் மற்றும் வன உயிரின குற்றங்கள் கட்டுப்பாட்டு பிரிவு - முதல்வர் தொடங்கிவைத்து இலச்சினையை வெளியிட்டார்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்நாடு வனம் மற்றும் வன உயிரினக் குற்றங்கள் கட்டுப்பாட்டு பிரிவை தொடங்கி வைத்து, இலச்சினையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வனத் துறையின் 2021-22-ம் ஆண்டு மானியக் கோரிக்கையில், மாநில அளவில் திட்டமிடப்பட்ட வன உயிரின குற்றங்களைக் கண்டறிந்து தடுக்க வனம் மற்றும் வன உயிரினக் குற்றங்கள் கட்டுப்பாட்டு பிரிவு ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழ்நாடு வனம் மற்றும் வனஉயிரின குற்றங்கள் கட்டுப்பாட்டுப்பிரிவு சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பனகல் மாளிகையில் நிறுவப்பட்டது. அப்பிரிவை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

திட்டமிட்ட வனம் மற்றும் வன உயிரின குற்றங்களைத் தடுக்கும் வகையில் பிரத்யேகமாக ஏற்படுத்தப்பட்டுள்ள இப்பிரிவு, வன உயிரினக் குற்றங்கள் குறித்த தகவல் மற்றும் நுண்ணறிவு விவரங்களை சேகரித்தல், சட்டவிரோதமாக வன உயிரினங்கள் மற்றும் வன உயிரினப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதைத் தடுத்தல், உலகளாவிய அமைப்புகளுடன் ஒன்றிணைந்து செயல்படுதல் ஆகியவற்றை முக்கிய குறிக்கோள்களாகக் கொண்டு செயல்படுகிறது.

வழிகாட்டு நெறிமுறைகள்: மேலும், வன உயிரின குற்றங்கள் தொடர்பான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை ஏற்படுத்துதல், வனங்களை ஒட்டிவாழும் பகுதிகளில் உள்ள மக்களிடையே தகவல் கட்டமைப்பை மேம்படுத்துதல், வன உயிரினக் குற்றங்கள் சார்ந்த தரவுகளை சேகரித்தல் மற்றும் வன உயிரினக் குற்றங்கள் அதிகமாக நிகழ்ந்துள்ள இடங்களை வரைபடமாக தயாரித்தல் ஆகியவை இப்பிரிவின் முக்கிய செயல்பாடுகள் ஆகும்.

118 முன்கள வனப்பணியாளர்கள்: இப்பிரிவின் தலைமையகம் சென்னை, சைதாப்பேட்டை, பனகல் மாளிகையில் அமைக்கப்பட்டு, இயக்குநரை தலைவராகவும், சென்னை, கோயம்புத்தூர், மதுரை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 4 மண்டலங்களில் துணை இயக்குநர்களின் தலைமையிலும் செயல்பட்டு வருகிறது. மேலும், இந்தப் பிரிவில் 118 முன்கள வனப்பணியாளர்கள் தற்போது பணியாற்றி வருகின்றனர்.

இப்பிரிவின் வாயிலாக 190-க்கும் அதிகமான வன உயிரினக் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் யானை தந்தங்கள் மற்றும் யானைத் தந்தத்தினாலான பொருட்களை விற்பனை செய்தல், புலித்தோல் மற்றும் அதன் பாகங்களை சட்டவிரோதமாக விற்பனை செய்தல், சட்டவிரோதமாக பாம்புகள், கிளிகள், கடல் சங்குகள், கடல் அட்டைகள் ஆகியவை வைத்திருந்த குற்றங்கள் என 50-க்கும் மேற்பட்ட வனக்குற்றங்களில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து வன உயிரினப் பொருட்களைப் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்யப்பட்டு மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் மதிவேந்தன், தலைமைச் செயலர்சிவ்தாஸ் மீனா, வனத்துறை செயலர்சுப்ரியா சாஹூ, முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் மற்றும் முதன்மை வன உயிரினக் காப்பாளர் னிவாச ஆர்.ரெட்டி, தமிழ்நாடு வனம் மற்றும் வன உயிரின குற்றக்கட்டுப்பாட்டுப் பிரிவு முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் ஆகாஷ் தீப் பருவா, புலிகள் திட்டம், வன உயிரின குற்றக்கட்டுப்பாட்டு பிரிவு இயக்குநர் காஞ்சனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE