தண்ணீரின்றி காய்ந்த குறுவை பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணம் - விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: தண்ணீரின்றி காய்ந்த குறுவை பயிர்களுக்கு, ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணமாக வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சாமி.நடராஜன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக நடப்பாண்டு மேட்டூர் அணையில் கடந்த ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது நீர்மட்டம் 58 அடிக்கும் கீழ் குறைந்துவிட்டது. இதனால் நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களின் கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீர் முழுமையாக சென்றடையவில்லை.

குறுவை சாகுபடி செய்த நேரடிவிதைப்பும், நடவு செய்த நெற்பயிர்களும் தண்ணீரின்றி காய்ந்து கருகி வருகின்றன. குறிப்பாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் தலைஞாயிறு, கீழ்வேளூர், கீழையூர், வேதாரண்யம் ஒன்றிய பகுதிகளில் நேரடி விதைப்பு மூலம் நடைபெற்ற குறுவை பயிர்கள் முற்றிலும் காய்ந்து கருகிவிட்டது. அதேபோல, திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, கோட்டூர் ஆகிய பகுதிகளிலும் நெற்பயிர்கள் கருகிவிட்டது. இனிமேல் தண்ணீர் சென்றாலும் பயிர்களை பாதுகாக்க முடியாது.

எனவே, பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக அரசு ஆய்வு செய்து, முற்றிலும் காய்ந்து கருகிய நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணமாக வழங்க வேண்டும். எஞ்சியிருக்கும் குறுவை பயிர்களை பாதுகாக்க உச்ச நீதிமன்ற உத்தரவுபடி காவிரியில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கான தண்ணீரை கர்நாடக அரசு திறந்துவிட காவிரி நதிநீர் ஆணையம் உத்தரவிட வேண்டும். தமிழகத்துக்கான தண்ணீரை பெறுவதற்கு மாநில அரசு சட்ட நடவடிக்கைகளை உடனடியாக மேற் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE