ஸ்ரீரங்கம் கோயிலில் 21 கோபுரங்களின் ஸ்திரத்தன்மை ஆய்வு செய்யப்படும் - அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்

By செய்திப்பிரிவு

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் உள்ள 21 கோபுரங்களின் ஸ்திரத்தன்மை குறித்து தேசிய தொழில்நுட்ப நிறுவன வல்லுநர்கள் மூலம் ஆய்வு செய்யப்படும் என அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு தெரிவித்தார்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலின் கிழக்கு வாசல் கோபுரத்தின் (தாமோதர கிருஷ்ணன் கோபுரம்) முதல் நிலையில் உள்ள கொடுங்கை ஆக.5-ம் தேதி அதிகாலை இடிந்து விழுந்தது. கோபுரத்தில் இடிந்த பகுதியை அமைச்சர் பி.கே.சேகர் பாபு நேற்று பார்வையிட்டு, அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்தார்.

பின்னர் அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களிடம் கூறியது: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சேதமடைந்த கிழக்கு கோபுரத்தை என்ஐடி வல்லுநர்கள் ஆய்வு செய்துள்ளனர். ஓரிருநாளில் அறிக்கை அளிப்பார்கள். அறிக்கை கிடைத்தவுடன் உடனடியாக பணிகள் மேற்கொள்ளப்படும்.

2015-ம் ஆண்டு குடமுழுக்கு விழாவின்போது ரூ.34 லட்சம் செலவில் இந்தக் கோபுரத்தில் பழுதுபார்ப்புப் பணி நடைபெற்றுள்ளது. தற்போது இந்த கோபுரத்தை சீரமைக்க ரூ.94 லட்சம் மதிப்பில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, ஆணையரிடம் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது.

இந்தக் கோபுரத்தில் ஒன்று முதல் மூன்று வரையுள்ள நிலைகளில் உள்ள மரத்தால் ஆன உத்திரங்கள் சேதமடைந்துள்ளன. மேலும் ஒரு சில நிலைகளில் உள்ள மர உத்திரங்களும் சேதமடையும் நிலையில் உள்ளன. எனவே தான் இந்த கோபுரத்தை முழுமையாக சீரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ரூ.2 கோடி செலவாகும் என பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தப் பணியை கோயில் நிதியிலிருந்து மேற்கொள்ளலாம் என்றாலும், நன்கொடையாளர்களும் நிதி வழங்க விருப்பமாக உள்ளனர். எனவே, இந்த பணியை கோயில் நிதியில் செய்வதா அல்லது நன்கொடையாளர்கள் நிதியில் செய்வதா என்பது தொடர்பாக விரைவில் முடிவு செய்யப்படும். இப்பணியை முடிக்க ஓராண்டுக்கு மேலாகும் எனத் தெரிகிறது.

எந்தவொரு பணியை மேற்கொள்ள வேண்டும் என்றாலும் அதற்கு பல்வேறு நிர்வாக நடைமுறைகள் உள்ளன. தற்போது கோபுரம் சேதமடைந்துள்ளதை கருத்தில் கொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் உடனடியாக தொடங்கப்பட்டுஉள்ளன. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் உள்ள 21 கோபுரங்களின் ஸ்திரத் தன்மை குறித்து தேசிய தொழில்நுட்ப நிறுவன வல்லுநர்கள் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆய்வின்போது, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, அறநிலையத் துறை முதன்மைச் செயலாளர் க.மணிவாசன், மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார், அறநிலையத் துறை ஆணையர் க.வீ.முரளிதரன், கோயில் இணை ஆணையர் செ.சிவராம்குமார் உள் ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE