நிறைவடையும் நிலையில் மின்மயமாக்கல் பணி - தென்காசி மக்களின் ரயில் தேவை நிறைவேறுமா?

By செய்திப்பிரிவு

தென்காசி: கொல்லம் - தென்காசி - அம்பாசமுத்திரம் - திருநெல்வேலி ரயில்வே வழித் தடம் 1904-ம் ஆண்டு மீட்டர் கேஜ் பாதையாக அமைக்கப்பட்டு ரயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் 2012-ம் ஆண்டு அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டது.

தென்காசி - ராஜபாளையம் - விருதுநகர் வழித் தடமானது 1927-ம் ஆண்டு மீட்டர் கேஜ் பாதையாக அமைக்கப்பட்டு, பின்னர் 2004-ல் அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டது. விருதுநகர் - செங்கோட்டை - கொல்லம், தென்காசி - திருநெல்வேலி ஆகிய வழித் தடங்களில் ரயில்வே மின்மயமாக்கல் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது.

இந்த பணி நிறைவடைந்தால் கூடுதல் ரயில்களை இயக்குவதற்கு சாதகமாக அமையும். தென்காசி மாவட்ட மக்கள் எளிதான பயணத்துக்காக பல்வேறு ரயில்களை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஞாயிற்றுக் கிழமை தோறும் திருநெல்வேலியில் இருந்து அம்பா சமுத்திரம், பாவூர்சத்திரம், தென்காசி, ராஜபாளையம் வழியாக மேட்டுப் பாளையம் வரை செல்லும் சிறப்பு ரயிலை நிரந்தர ரயிலாக இயக்க வேண்டும்.

திருநெல்வேலியில் நிறுத்தி வைக்கப்படும் பிலாஸ்பூர் ரயிலின் காலி பெட்டிகளைக் கொண்டு திருநெல்வேலியில் இருந்து வியாழக் கிழமை தோறும் தென்காசி வழியாக சென்னைக்கு நிரந்தர ரயில் இயக்க வேண்டும். பாவூர்சத்திரம் வழியாக செல்லும் செங்கோட்டை- தாம்பரம் வாரம் மும்முறை ரயிலின் வேகத்தை அதிகரித்து தினசரி ரயிலாக இயக்க வேண்டும்.

திருநெல்வேலியில் இருந்து பாவூர்சத்திரம், தென்காசி, சங்கரன்கோவில் வழியாக பெங்களூருவுக்கு தினசரி ரயில் இயக்க வேண்டும். திருநெல்வேலியில் இருந்து பாவூர்சத்திரம், தென்காசி, கொல்லம் வழியாக கர்நாடக மாநிலம் மங்களூருவுக்கு ரயில் இயக்க வேண்டும். குருவாயூரில் இருந்து புனலூர் வரை இயக்கப்படும் ரயிலை தென்காசி, ராஜபாளையம் வழியாக மதுரைக்கு நீட்டிக்க வேண்டும்.

எர்ணாகுளத்தில் இருந்து கொல்லம், தென்காசி, ராஜபாளையம் வழியாக வேளாங்கண்ணிக்கு வாரம் இருமுறை ரயில் இயக்க வேண்டும். பாலக்காடு - திருநெல்வேலி இடையேயான பாலருவி விரைவு ரயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும். புதுடெல்லி - மதுரை சம்பர்க்கிராந்தி ரயிலை ராஜபாளை யம், தென்காசி, பாவூர்சத்திரம் வழியாக திருநெல்வேலி வரை நீட்டிக்க வேண்டும்.

ஈரோடு - திருநெல்வேலி ரயிலை பாவூர்சத்திரம் வழியாக செங்கோட்டை வரை நீட்டிக்க வேண்டும். திருநெல்வேலி- கொல்லம் இடையே நேரடி ரயில்கள் இயக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றினால் தென்காசி மாவட்ட மக்கள் மட்டுமின்றி பல்வேறு மாவட்ட மக்களும் பயனடைவார்கள்.

ரயில்வே வாரியத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் அனைத்து ரயில்களையும் விரைவில் ஒப்புதல் அளித்து இயங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களவைத் தேர்தல் நெருங்குவதை கருத்தில் கொண்டாவது மக்களின் தேவைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்.

மேலும், செங்கோட்டை- தென்காசி இடையே இரட்டை அகல ரயில் பாதை அமைத்தல், தென்காசி ரயில் நிலையத்தில் ரயில் பெட்டிகளை பராமரிக்கும் வசதிகளை ஏற்படுத்தி டெர்மினல் ரயில் நிலையமாக மாற்றுதல், திருநெல்வேலியில் இருந்து அம்பாசமுத்திரம், ராஜபாளையம் வழியாக செல்லும் ரயில்களுக்கு இன்ஜின் மாற்றாமலேயே பைபாஸில் செல்லும் வகையில் தென்காசி ரயில் நிலையத்தில் பைபாஸ் லைன் அமைத்தல்,

பாவூர்சத்திரம், கடையம், அம்பாசமுத்திரம், சேரன்மகா தேவி ரயில் நிலைய நடைமேடைகளின் நீளத்தை 24 பெட்டிகள் நிறுத்தும் அளவுக்கு நீட்டித்தல் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். இப்பணிகள் நிறைவுற்றால் தென்காசி மாவட்ட மக்களின் ரயில் தேவை பெரிதும் பூர்த்தியாகும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்