செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு: செப். 30-க்குள் விசாரணையை முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு விசாரணையை வரும் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் முடிக்க மத்திய குற்றப் புலனாய்வு காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ள உச்ச நீதிமன்றம், விசாரணையை முடிக்க தவறும் பட்சத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி, ஓட்டுநர் மற்றும் நடத்துநர் வேலை வாங்கித் தருவதாக கூறி லட்சக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டதாக, செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக போக்குவரத்துத் துறையில் வேலை வழங்க பணம் பெற்ற புகார் தொடர்பாக முழுமையாக தொடக்கத்தில் இருந்து விசாரணை நடத்த வேண்டும். தேவையெனில், சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரிக்கலாம். செந்தில் பாலாஜிக்கு எதிரான இந்த வழக்கில் இரண்டு மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

மேலும், செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத் துறை அனுப்பிய சம்மனை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர். செந்தில் பாலாஜிக்கு எதிராக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிய உத்தரவிட்டும், அதனை செயல்படுத்தாத சென்னை மத்திய குற்றப் பிரிவு காவல் துறை மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த மே மாதம் 16-ம் தேதி தீர்ப்பளித்திருந்தது.

இந்நிலையில், இந்த விசாரணையை முடிக்க 6 மாதம் கூடுதல் கால அவகாசம் வழங்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் சென்னை மத்திய குற்றப் புலனாய்வு போலீஸார் இடையீட்டு மனு தாக்கல் செய்தனர். அதில், முறைகேடு நடந்தததாக கூறப்படும் காலக்கட்டத்தில் பணிக்கு அமர்த்தப்பட்ட 2,974 பேரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அந்த நபர்களின் பணியாணை தொடர்பாக விரிவாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அதேபோல் இந்த காலகட்டத்தில் மாநகர போக்குவரத்து துறைக்கு 901 ஓட்டுநர்கள், 902 நடத்துனர்கள், 271 உதவிநிலை பணியாளர்கள் வேலையில் சேர்ந்துள்ளனர். அவர்களின் விவரங்களும் தீர ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இவை அத்தனையும் முடித்து, விசாரணையையும் முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்.எனவே, இந்த நடவடிக்கைகளை முடித்து அறிக்கையை தாக்கல் செய்ய கூடுதலாக 6 மாதம் கால அவகாசம் வழங்க வேண்டும் என மனுவில் கோரியிருந்தது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம்நாத், அஸ்ஸானுதீன் அமானுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வில், செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய குற்றப் புலனாய்வு போலீஸார் தரப்பில், "இந்த வழக்கில் தொடர்புடைய பலரும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருக்கின்றனர். எனவே, அவர்களிடமிருந்து வாக்குமூலங்களைப் பெறுவது கடினமானது. எனவேதான் 6 மாதம் கூடுதல் கால அவகாசம் கோருகிறோம்" என்று தெரிவிக்கப்பட்டது. அப்போது புகார்தாரர் தரப்பில், கால அவகாசம் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதனை ஏற்க நீதிபதிகள், 6 மாத கால அவகாசம் வழங்க முடியாது என்று மறுப்பு தெரிவித்தனர். அப்போது காவல்துறை தரப்பில், நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள், உங்களுக்கு பிரச்சினைகள் எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கும். நீங்கள் நினைத்தால், 24 மணி நேரமும் வேலை செய்ய முடியும். நீங்கள் நினைத்தால், 24 வருடங்கள் ஆனாலும்கூட ஒரு பணியை நிறைவு செய்ய முடியாது. இதுபோன்ற வழக்குகளில் அரசு எந்திரங்கள் எவ்வாறு செய்லபடும் என்பதை நாங்களும் அறிவோம், என்று அதிருப்தி தெரிவித்தனர்.

பின்னர், இந்த வழக்கில், தமிழக காவல் துறை டிஜிபி, உள்துறை செயலர் நேரில் ஆஜராக சம்மன் பிறப்பிக்கிறோம். அவர்கள் நேரில் ஆஜராகி கால அவகாசம் கேட்கட்டும் என்று தெரிவித்தனர். அப்போது தமிழக அரசுத் தரப்பில், வழக்கு விசாரணையை முடிப்பதற்கு எவ்வளவு கால அவகாசம் வேண்டும் என்பதை இறுதி செய்ய அரை மணி கால அவகாசம் கோரினர். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அரசுத் தரப்புக்கு நேரம் கொடுத்து, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

அரை மணி நேரத்துக்குப் பின்னர், தமிழக அரசுத் தரப்பில், வழக்கு விசாரணையை முடிக்க இரண்டு மாத கால அவகாசமும், இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய மேலும் ஒரு மாத காலம் என 3 மாத கால அவகாசம் கோரப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையை வரும் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று மத்திய குற்றப் புலனாய்வு காவல்துறைக்கு உத்தரவிட்டனர். அதற்கு மேல் கால அவகாசம் எதுவும் வழங்கப்படாது. அந்த காலக்கெடுவுக்குள் விசாரணையை முடிக்கவில்லை என்றால், வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்படும் என்று நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE