பாரதியார் கவிதை, திருக்குறளை மேற்கோள்காட்டி தமிழில் பேசிய குடியரசு தலைவர், ஆளுநர் - சென்னை பல்கலை. மாணவர்கள் உற்சாகம்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் தங்கள் உரையின் நடுவே பாரதியார் கவிதை, திருக்குறளை மேற்கோள் காட்டி தமிழில் பேசியது மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

சமீபகாலமாக முக்கிய தலைவர்கள் பலரும் திருக்குறள் மற்றும் பாரதியாரின் கவிதைகளை மேற்கோள் காட்டி பேசி, தமிழுக்கு புகழ் சேர்த்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி, தான் செல்லும் நாடுகளில் திருக்குறளை மேற்கோள் காட்டி, தமிழின் சிறப்புகளை கூறி வருகிறார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் தனது பட்ஜெட் உரைகளின்போது திருக்குறளை மேற்கோள் காட்டி பேசியுள்ளார்.

இந்த நிலையில், சென்னை பல்கலைக்கழகத்தின் 165-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, ‘வணக்கம்’ என்று தமிழில் கூறி தனது உரையை தொடங்கினார்.

சென்னை பல்கலைக்கழகத்துக்கு புகழாரம் சூட்டியும், மாணவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கியும் அவர் பேசினார். உரையை நிறைவு செய்யும்போது, ‘‘மந்திரம் கற்போம் வினைத் தந்திரங் கற்போம், வானை அளப்போம், கடல்மீனையளப்போம், சந்திர மண்டலத்தில் கண்டுதெளிவோம், சந்தி தெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்’’ என்று மகாகவி பாரதியாரின் கவிதை வரிகளை தமிழில் கூறி மாணவர்களின் கைதட்டலை பெற்றார். விழாவில் பங்கேற்ற அனைவரும், குடியரசுத் தலைவர் முர்முவின் தமிழ் உச்ச ரிப்பை வெகுவாக ரசித்தனர்.

கொள்கையில் உறுதி: சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றும்போது, நிகழ்ச்சியில் பங்கேற்ற குடியரசுத் தலைவர், முதல்வர் உள்ளிட்டோரை தமிழில்வரவேற்றார். இதை மாணவர்கள் கைதட்டி வரவேற்றனர். தொடர்ந்து, ‘‘எண்ணிய எண்ணியாங்கு எய்துப/ எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின்’’ என்ற 666-வது திருக்குறளை மேற்கோள் காட்டிய ஆளுநர் ரவி, மாணவர்கள் தாங்கள் கொண்ட கொள்கையில் நம்பிக்கையுடன் உறுதியாக இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார். மேலும், ‘‘மாணவர்களே, உங்கள் எதிர்காலம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்க தமிழ், வாழ்க பாரதம்’’ என்று தமிழில் பேசி, உரையை நிறைவு செய்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE