தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் நாட்டின் 2-வது ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான பணி விரைவில் தொடங்கவுள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, சொந்த நாட்டு செயற்கைகோள்களை மட்டுமின்றி, பல்வேறு வெளிநாடுகளைச் சேர்ந்த செயற்கைகோள்களையும் குறைந்த கட்டணத்தில் விண்ணில் செலுத்தி வருகிறது. இதனால் பல நாடுகள் தொடர்ந்து தங்கள் செயற்கைகோள்களை ஏவ இந்தியாவை நாடி வருகின்றன.
தற்போது ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து ராக்கெட்டுகளை இஸ்ரோ ஏவி வருகிறது. தேவை அதிகரித்துள்ளதால் கூடுதல் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான வேறொரு ஏற்ற இடத்தை இஸ்ரோ தேடியது.
பொதுவாக ராக்கெட் ஏவுதளம் அமையும் பகுதியானது, கடற்கரையாகவும், காற்றின் வேகம் மணிக்கு 30 கி.மீ.க்கு குறைவாகவும், குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகாத பகுதியாகவும், புயல், மின்னல் மற்றும் மழையின் தாக்கம் குறைவாக உள்ள பகுதியாகவும் இருக்க வேண்டும்.
நிலையான காலநிலையும், நல்ல வெளிச்சம், குறைந்த பனி மற்றும் மேகமூட்டம் உள்ள பகுதியாக இருப்பதும் அவசியம். மேலும், நிலநடுக்கோட்டுக்கு அருகேயும், கிழக்கு கடற்கரையை ஒட்டியும் இருக்கும் வகையில் இஸ்ரோ விஞ்ஞானிகள் இடத்தை தேடினர்.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் கடற்கரை பகுதி இந்த அம்சங்கள் அனைத்தும் நிறைந்த பகுதியாக கண்டறியப்பட்டது. கிழக்கு கடற்கரையை ஒட்டியுள்ள குலசேகரன்பட்டினம் பகுதியில் நாட்டின் 2-வது ராக்கெட் ஏவுதளத்தை அமைக்க இஸ்ரோ முடிவு செய்து, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது. இங்கு சுமார் 2,300 ஏக்கர் நிலம் தமிழக அரசு சார்பில் கையகப்படுத்தப்பட்டு இஸ்ரோவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக சுற்றுச்சுவர் கட்டப்பட்டு வருகிறது. மிக விரைவில் கட்டுமானப் பணி தொடங்குகிறது. இந்திய அளவில் தசரா விழாவுக்கு புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம், மிக விரைவில் உலக விண்வெளி அறிவியல் வரைபடத்தில் முக்கிய இடம்பிடிக்கப் போகிறது.
இதுகுறித்து மூத்த விண்வெளி விஞ்ஞானி நெல்லை சு.முத்து ‘இந்து தமிழ் திசை' நாளிதழிடம் கூறியதாவது: நிலநடுக்கோட்டுக்கு வடக்கே 8.364 டிகிரி தொலைவில் குலசேகரன்பட்டினமும், 13.72 டிகிரி தொலைவில் ஸ்ரீஹரிகோட்டாவும் உள்ளன. எனவே, குலசேகரன்பட்டினத்தில் இருந்து ராக்கெட் ஏவும்போது அதிகளவில் எரிபொருள் மிச்சமாகும். மேலும், ராக்கெட்டின் வேகத்தை நொடிக்கு அரை கிலோ மீட்டர் வீதம் அதிகரிக்க முடியும். எரிபொருள் செலவு குறையும் போது, ராக்கெட் சுமந்து செல்லும் செயற்கோள்களின் எடையையும் அதிகரிக்க முடியும்.
தகவல் தொடர்பு செயற்கைகோள்களை ஏவுவதற்கு மிகவும் உகந்த இடமாக குலசேகரன்பட்டினம் இருக்கும். அதுபோல தொலை உணர்வு செயற்கைகோள்களை ஹரிகோட்டாவில் இருந்து ஏவும்போது இலங்கை குறுக்கிடுவதால், முதலில் கிழக்கு நோக்கி செலுத்தப்பட்டு, பின்பு தெற்கு நோக்கி செயற்கைகோள் திசை திருப்பப்படுவது வழக்கம். இதனால் கூடுதல் எரிபொருள் செலவாகி வந்தது. குலசேகரன்பட்டினத்தில் இருந்து தொலை உணர்வு செயற்கைகோள்களை ஏவும்போது நேரடியாக தெற்கு நோக்கி செலுத்த முடியும். இதனால் எரிபொருள் மேலும் மிச்சமாகும்.
வர்த்தக ரீதியாக லாபம்: ராக்கெட்டுக்கான எரிபொருள், பாகங்கள் ஆகியவை திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரியிலும், கேரள மாநிலம் தும்பாவிலும் தயாரிக்கப்படுகின்றன. இவற்றை நீண்ட தொலைவில் உள்ள ஹரிகோட்டாவுக்கு கொண்டு செல்வதில் காலதாமதம், பாதுகாப்பு பிரச்சினை, கூடுதல் செலவு, சேதம் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது. ஆனால், மகேந்திரகிரி மற்றும் தும்பாவுக்கு 100 கி.மீ. தொலைவுக்குள் குலசேகரன்பட்டினம் இருப்பதால் இந்த பிரச்சினைகள் இல்லை.
குலசேகரன்பட்டினம் ஏவுதளத்தில் இருந்து சிறிய ரக ராக்கெட்டுகளை ஏவுவதற்கே இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் பெரிய ராக்கெட் தயாரிப்புக்கு நீண்ட காலம் காத்திருக்காமல் தேவைக்கு ஏற்ப உடனுக்குடன் சிறிய ராக்கெட்டுகள் மூலம் செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த முடியும். இது வர்த்தக ரீதியாக லாபம் தரக்கூடியது. இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 min ago
தமிழகம்
30 mins ago
தமிழகம்
50 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
8 hours ago