புதுடெல்லி: அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்தது செல்லும் என்று தீர்ப்பளித்துள்ள உச்ச நீதிமன்றம், அவரை வரும் ஆக.12 வரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது.
செந்தில் பாலாஜியை சட்டவிரோத பண பரிவர்த்தனை தடை சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் 14-ம் தேதி கைது செய்தனர். பின்னர் அவருக்கு பைபாஸ் இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், அவரை அமலாக்கத் துறை கைது செய்திருப்பது சட்டவிரோதம் என்று கூறி அவரது மனைவி மேகலா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, டி.பரத சக்ரவர்த்தி அமர்வு ஜூலை 4-ம் தேதி, செந்தில் பாலாஜியை கைது செய்தது செல்லாது என்றும், செல்லும் என்றும் மாறுபட்ட தீர்ப்பை அளித்தது. இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த 3-வது நீதிபதி சி.வி.கார்த்திகேயன், ‘‘செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்தது சட்டப்பூர்வமான நடவடிக்கைதான்’’ என்று கூறி, நீதிபதி டி.பரத சக்ரவர்த்தியின் தீர்ப்பை உறுதிசெய்தார். செந்தில் பாலாஜி குணமடைந்ததும் அவரை அமலாக்கத் துறை காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்றும், தனியார் மருத்துவமனையில் உள்ள செந்தில் பாலாஜியை புழல் சிறைக்கு மாற்ற வேண்டும், என்றும் கடந்த ஜூலை 14-ம் தேதி தீர்ப்பளித்தார். அதன்படி, செந்தில் பாலாஜி தனியார் மருத்துவமனையில் இருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். அவரை ஆக.8 (இன்று) வரை நீதிமன்ற காவலில் வைக்க முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து செந்தில் பாலாஜியும், அவரது மனைவியும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, எம்.எம்.சுந்தரேஷ் அமர்வில் இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்தது. செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில்சிபல். முகுல் ரோஹ்தகி ஆகியோரும், அமலாக்கத் துறை தரப்பில் மத்திய அரசின் சொலிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவும் ஆஜராகி வாதிட்டனர்.
» நாகப்பட்டினம் மீனவர்கள் 10 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை - மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதிகள் நேற்று தீர்ப்பளித்தனர். அவர்கள் கூறியதாவது: அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்தது சட்டப்பூர்வமானது என்பதால், இந்த கைது நடவடிக்கை செல்லும். ஒரு நபர் சட்டவிரோத பண பரிவர்த்தனை தடை சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்ட பிறகு, அதை எதிர்த்து சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில்தான் முறையிட முடியுமே தவிர, ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய முடியாது. எனவே, மேல்முறையீட்டு மனுக்கள்தள்ளுபடி செய்யப்படுகின்றன.
அதேபோல, குற்றவியல் நடைமுறை சட்டத்தின் 167(2) பிரிவு, ஒருவரை கைது செய்யும்போது, முதல் 15 நாட்களுக்குள் அவரை காவலில் எடுத்து விசாரிக்கலாம் என கூறுகிறது. ஆனால், ‘செந்தில் பாலாஜி இந்த வழக்கில் விசாரணை நடத்த விடாமல் அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு இடையூறுஏற்படுத்தினார். அமர்வு நீதிமன்றம்8 நாட்கள் காவலில் எடுத்துவிசாரிக்க அனுமதி அளித்தும், அவர் நெஞ்சுவலி காரணமாக மருத் துவமனையில் சேர்க்கப்பட்டதால் அவரை சுதந்திரமாக காவலில்எடுத்து விசாரிக்க முடியவில்லை. எனவே, அவர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த காலகட்டத்தை நீதிமன்ற காவலின் முதல் 15 நாட்களாக கருத கூடாது’ என்ற அமலாக்கத் துறையின் வாதம் ஏற்புடையது. எனவே, அமர்வு நீதிமன்றம் ஏற்கெனவே 8 நாட்கள் அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்துள்ள நிலையில், வரும் ஆக.12-ம் தேதி வரை செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை தங்கள் காவலில் எடுத்து விசாரிக்கலாம்.
இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், ‘‘அமலாக்கத் துறையினர் ஒருவரை கைது செய்யும்போது முதல் 15 நாட்கள் கழிந்த பிறகு காவலில் எடுத்து விசாரிப்பது தொடர்பான விவகாரத்தில் ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் அனுபம் ஜே குல்கர்னி வழக்கில் வழங்கியுள்ள தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டி இருப்பதால், அதை முழுஅமர்வின் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்’’ என்று தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்து உத்தரவிட்டுள்ளனர். இதனால், இந்த வழக்கு தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
காவலில் எடுத்து விசாரணையை தொடங்கியது அமலாக்கத் துறை: உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கக்கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தரப்பு சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.ரமேஷ் நேற்று மாலையே மனுதாக்கல் செய்தார். நீதிபதி எஸ்.அல்லி முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தது. செந்தில் பாலாஜியின் உடல்நிலையை தாங்கள் கவனித்துக் கொள்வதாக அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் அமலாக்கத் துறை வசம் செந்தில் பாலாஜியை ஒப்படைக்க புழல் சிறை நிர்வாகத்துக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணை முடிந்து ஆக.12-ம் தேதி செந்தில் பாலாஜியை ஒப்படைக்க வேண்டும் என்று அமலாக்கத் துறைக்கும் உத்தரவிட்டார்.
இதையடுத்து, சென்னை நுங்கம்பாக்கத் தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத் தில் இருந்து 5 அதிகாரிகள் கொண்ட குழுவினர் 10-க்கும் மேற்பட்ட மத்திய தொழில் பாதுகாப்பு படையினருடன் புழல் சிறைக்கு சென்று, நீதிமன்ற உத்தரவை சிறைத்துறை அதிகாரிகளிடம் காண்பித்தனர். ஆனால், மாலை 6 மணிக்கு மேல் எந்த ஒரு கைதியையும் சிறையில் இருந்து வெளியே அனுப்புவது நடைமுறையில் இல்லை என்று கூறி அதிகாரிகள் மறுத்தனர்.
நீண்டநேர பேச்சுவார்த்தைக்கு பிறகு, சிறை மருத்துவமனையில் செந்தில் பாலாஜிக்கு முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அமலாக்கத் துறை அதிகாரிகளிடம் இரவு 8.30 மணி அளவில் ஒப்படைக்கப்பட்டார். இதையடுத்து, பலத்த பாதுகாப்புடன் நுங்கம்பாக்கம் சாஸ்திரிபவனில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்ட செந்தில் பாலாஜியிடம் உடனடியாக விசாரணை தொடங்கியது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago