‘நான் முதல்வன்’ திட்டத்தில் இலக்கை தாண்டி 13 லட்சம் பேருக்கு உயர் தர திறன் பயிற்சி - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

By செய்திப்பிரிவு

சென்னை: ‘நான் முதல்வன்’ திட்டம் தொடங்கப்பட்டு முதல் ஆண்டிலேயே 13 லட்சம் மாணவர்களுக்கு, உயர் தரத்தில் திறன் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இதுதான் இத்திட்டத்தின் மிகப்பெரிய சாதனை என்று ஓராண்டு வெற்றி விழாவில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

‘நான் முதல்வன்’ திட்டத்தின் ஓராண்டு வெற்றி விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது. இதில், சாதனை திட்ட கண்காட்சியை திறந்துவைத்து பார்வையிட்ட முதல்வர், இத்திட்டத்தின் கூட்டாண்மை பொறுப்பில் சிறந்து விளங்கிய நிறுவனங்களுக்கு நினைவுப் பரிசு, சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். ஹேக்கத்தான் ‘நிரல் திருவிழா’ போட்டிக்கான இணையதளத்தை தொடங்கிவைத்தார், அண்ணா பல்கலைக்கழகம், 459 பாலிடெக்னிக், 432ஐடிஐகளில் தொழில்சார் படிப்புகளை தொடங்கி வைத்தார். ‘கலைஞர்100’ இணையதளத்தை தொடங்கி வைத்ததுடன், நான் முதல்வன் கீதத்தையும் (Anthem) அறிமுகம் செய்து வைத்தார்.

நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: ‘‘புதிய கம்பெனிகள் தொடங்கினாலும், அதில் வேலை செய்ய திறமையான இளைஞர்கள் கிடைப்பது கஷ்டமாக உள்ளது’’ என்று, தமிழகத்தில் தொழில் தொடங்க முன்வந்த தொழிலதிபர்கள் கூறினர். அதை கவனத்தில் வைத்து, என் மனதில் உருவானது தான் ‘நான் முதல்வன்’ திட்டம். இதை கடந்த 2022 மார்ச் 1-ம் தேதி என் பிறந்த நாளில் தொடங்கி வைத்தேன். இத்திட்டம் ஓராண்டை நிறைவு செய்கிறது. இதற்கு காரணமான அமைச்சர் உதயநிதியை பாராட்டுகிறேன்.

ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு திறன் பயிற்சி என்று தான் முதலில் இலக்கு நிர்ணயித்தோம். முதல் ஆண்டிலேயே 13 லட்சம் மாணவர்களுக்கு, உயர் தரத்தில் திறன் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இதுதான் இத்திட்டத்தின் மிகப்பெரிய சாதனை. இப்படி பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு மிகச்சிறந்த வேலைவாய்ப்பு கிடைத்திருப்பது அடுத்த சாதனை.

இத்திட்டத்தில் 445 பொறியியல் கல்லூரிகளில் திறன் பயிற்சி பெற்ற 85,053 பொறியியல் பட்டதாரிகளில், 65,034 பேரும், 861 கலைக்கல்லூரிகளில் பயிற்சி பெற்ற 99,230 மாணவர்களில் 83,223 பேரும்பணி நியமனம் பெற்றுள்ளனர்.

வேலைவாய்ப்பு முகாமில் 5,844 பொறியியல் மாணவர்கள், 20,082 கலை, அறிவியல் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. ‘கல்லூரி கனவு’ திட்டத்தில் 75 ஆயிரம் பேரும், ‘உயர்வுக்குப் படி’ திட்டத்தில், 2.50 லட்சம் பேரும், ‘நான் முதல்வன்’ இணையதளம் மூலம் 25 லட்சம் பேரும் பயனடைந்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் அடுத்த மாதம் நடத்தப்படும் தமிழ்நாடு திறன் போட்டிகளுக்கு இதுவரை 58 ஆயிரம் மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.

குடிமைப் பணித் தேர்வுகளில் தமிழக மாணவர்களின் தேர்ச்சி நாளுக்கு நாள் குறைந்து வருவதுவருந்த வைக்கிறது. அதற்காகவே, நான் முதல்வன் திட்டத்தின்ஒரு பகுதியாக மத்திய அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வு பயிற்சி பிரிவு உருவாக்கப்பட்டு. ஊக்கத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு உருவாக்கி தரும் வாய்ப்புகளை முழுவதுமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். இவ்வாறு முதல்வர் பேசினார்.

அமைச்சர்கள் பொன்முடி, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின், மு.பெ.சாமிநாதன், சி.வி.கணேசன், சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா, தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, சிறப்பு திட்ட செயலாக்கத் துறை செயலர் தாரேஸ் அகமது, திறன் மேம்பாட்டு கழக மேலாண் இயக்குநர் இன்னசன்ட் திவ்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE