மாட்டுத்தொழுவதின் நடுவே இயங்கும் அரசு அங்கன்வாடி மையத்தை, பாதுகாப்பான கட்டிடத்துக்கு மாற்ற வேண்டுமென வழுக்கல் கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர்.
கோவை மாவட்டம் மதுக்கரை ஊராட்சிக்கு உட்பட்டது வழுக்கல் கிராமம். தமிழக - கேரள எல்லையை ஒட்டி அமைந்துள்ளதால், இரு மாநில மக்களும் வசிக்கின்றனர். விவசாய கூலித் தொழிலே பிரதானமாக உள்ளது.
மாவட்டத்துக்கு மட்டுமல்ல, மாநிலத்துக்கே எல்லையாக இருப்பதால்தான் என்னவோ, இங்கு அரசின் திட்டங்கள் எதுவும் அவ்வளவாக கிடைப்பதில்லை. அவ்வளவு ஏன், உள்ளூர் அதிகாரிகளின் கவனம்கூட இங்கு இல்லை. அதற்கு இங்குள்ள மக்கள் சுட்டிக்காட்டும் ஒரே உதாரணம் அங்கன்வாடி மையம்.
தினக்கூலி வேலைக்குச் செல்லும் தாய்மார்கள், தங்கள் குழந்தைகளை பாதுகாப்பாக பராமரிக்க விட்டுச்செல்ல, பல ஆண்டுகளாக அரசு அங்கன்வாடி மையம் உள்ளது.
அந்த மையத்தில் ஆசிரியர், சமையலர், தரமான உணவுப் பொருட்கள், 15 குழந்தைகள் என அதிகாரிகள் கொடுக்கும் தகவல்கள் அனைத்தும் நன்றாகவே இருக்கின்றன. நேரில் சென்று பார்த்த பின்புதான், அதன் உண்மை நிலை என்னவென்று தெரிகிறது.
மாட்டுத்தொழுவத்தின் நடுவே பிரிக்கப்பட்ட சிறிய பகுதிதான் இந்த அங்கன்வாடி மையம். இருபுறமும் கால்நடைகள் அடைக்கப்படுவதும், அதன் நடுவே மழலைச் செல்வங்கள் உண்டு, உறங்குவதும் தான் இங்கு நீடிக்கும் அவலநிலை.
சுகாதாரமற்ற சூழல், நோய் பாதிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளால் அங்கன்வாடி மையத்தை இடம் மாற்ற வேண்டுமென பெற்றோர் வலியுறுத்துகின்றனர். பாதுகாப்பற்ற சூழலைக் காட்டி ஊழியர்களும் பாதுகாப்பான இடம் கேட்கின்றனர்.
ஆனால், அதிகாரிகளோ இரண்டரை ஆண்டுகளாக கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமல் காலம் கடத்திக் கொண்டிருக்கின்றனர்.
அரசு கட்டுமானங்களே ஆட்டம் கண்டு விபத்துக்குள்ளாகி வரும்வேளையில், குறைந்தபட்ச பாதுகாப்புகூட இல்லாத அவலமான சூழல்கள் எப்படி தாக்குப்பிடிக்கும் என்பதே மக்களின் கேள்வியாக உள்ளது. தங்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பான அங்கன்வாடி மையத்தை உடனடியாக ஏற்படுத்த வேண்டும் என்கின்றனர் தாய்மார்கள்.
பாதுகாப்பான இடம் தேவை
‘கடந்த இரண்டரை ஆண்டுகளாக மாட்டுத்தொழுவமே கதி என்று இந்த மையம் உள்ளது. துர்நாற்றம், கொசுப் பெருக்கத்துக்கு மத்தியில் குழந்தைகள் படித்து, படுத்துறங்க வேண்டியுள்ளது. நாங்கள் வேலைக்குச் செல்ல வேண்டும் என்பது கட்டாயம். அதனால்தான் குழந்தைகளை அங்கன்வாடி மையத்துக்கு அனுப்புகிறோம்.
அரசுக் கட்டிடம் கட்டும் வரை நல்ல நிலையில் உள்ள வாடகை கட்டிடத்துக்காவது இந்த மையத்தை மாற்ற வேண்டும்’ என்கின்றனர் கிராமப் பெண்கள்.
‘வழுக்கல் அரசுப் பள்ளி வளாகத்தில் இருந்த அங்கன்வாடி மையம், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சேதமடைந்தது. புதிய கட்டிடம் கட்டிக் கொடுப்பதாகக் கூறி அதை இடித்தார்கள். இதுவரை புதிய கட்டிடத்துக்கு பணிகள்கூட தொடங்கப்படவில்லை. மேல் அதிகாரிகளிடம் வலியுறுத்தி கொண்டேதான் இருக்கிறோம்’ என புலம்புகின்றனர் அங்கன்வாடி அலுவலர்கள்.
கடைசியாக ‘ஃபோட்டோ, செய்தி எதையுமே வெளியிட்டுவிடாதீர்கள்’ என்ற கோரிக்கையை முன்வைக்கின்றனர் அலுவலர்கள். உயர் அதிகாரிகளோ விரைவில் நடவடிக்கை எடுக்கிறோம் என நம்பிக்கை வார்த்தைகளை உதிர்க்கின்றனர்.
அதே நம்பிக்கையில் மக்களும் காத்திருக்கிறார்கள் என்பதை அதிகாரிகள் புரிந்துகொள்ள வேண்டும்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago