அ
கில இந்திய சமத்துவ மக்கள் கட்சிக்குப் புத்துணர்வு ஊட்டும் வகையில் சமீபத்தில் வாணியம்பாடியில் முக்கியத் தீர்மானங்களை அறிவித்துவிட்டு வந்திருக்கிறார் கட்சித் தலைவர் சரத்குமார். அண்மையில், திரைப்பட விழா ஒன்றில் பேசியவர், கமல்ஹாசனை கிண்டலடிக்கும் விதமாக,‘‘கருத்துகளை தைரியமாக களத்தில் சொல்ல வேண்டும். ட்விட்டரில் சொல்லக் கூடாது’ என்று கொளுத்திப்போட்டார். இந்த நிலையில் சமக கட்சி அலுவலகத்தில் அவருடன் ஒரு நேர்காணல்..
தற்போதைய தமிழக அரசியல் நிலவரம் பற்றி..
அதிமுக மாலுமி இல்லாத கப்பலாகிவிட்டது. அது ஏகப்பட்ட உட்கட்சிக் குழப்பங்களில் தத்தளிக்கிறது. இது தமிழக அரசின் செயல்பாடுகளிலும் பிரதிபலிக்கிறது. தமிழக அரசை இயக்குவது பாஜகதான் என்று சொல்லும் அளவுக்கு நிலைமை இருக்கிறது. ஆளுநரின் சமீபத்திய நடவடிக்கைகளும் அதை உறுதிசெய்கின்றன. ஜெயலலிதா இருந்தபோது இதை செய்திருக்க வேண்டியதுதானே. ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு அமைச்சர்களும் ஆதரவாகப் பேசுவது தான் அபத்தம். இதுபோன்ற நடவடிக்கைகள் மாநில அரசுக்கும் ஆளுநருக்கும் இருக்கும் நல்லுறவை பாதிக்கிறது. இன்னொரு பக்கம், அமைச்சர்கள் தப்பும் தவறுமாகப் பேசுகின்றனர். அதை மக்கள் ஏளனம் செய்கின்றனர். இதை எல்லாம் கட்டுப்படுத்த வேண்டிய முதல்வரும் கண்டுகொள்வதில்லை.
கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம் குறித்து..
கமல் மட்டுமல்ல; யாரும் அரசியலுக்கு வரலாம். அதுதான் உண்மையான ஜனநாயகம். அதேநேரம், பிரபலம் என்பதாலேயே அரசியலுக்கு வருவதை ஏற்க முடியாது. அது நாட்டுக்கு பேரழிவு என்று பிரகாஷ்ராஜ் சொன்னதை இந்தக் கோணத்தில்தான் பார்க்க வேண்டும். பிரபலமாக இருப்பதாலேயே திடீரென்று கருத்து சொல்லிவிட்டு ‘நான் முதல்வர் ஆகிவிடுவேன்’ என்று கமல் சொல்வது தவறு. அண்ணா, எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா எல்லாரும் பல காலம் மக்களோடு சேர்ந்து பணியாற்றிவிட்டு அரசியலில் இரண்டறக் கலந்து முதல்வரானவர்கள். மிக முக்கிய ஆளுமைகளுடன் போராடி எதிர்த்து அரசியல் செய்துதான் நானும் இந்த இடத்துக்கு வந்திருக்கிறேன். முதலில் உங்கள் கொள்கை என்ன? மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? என்பது முக்கியம். முதலில் மக்களுடன் களப்பணியாற்றிவிட்டு பின்பு அரசியலுக்கு வாருங்கள்.
உங்கள் அனுபவத்தில் ஒரு நடிகர் கட்சி தொடங்கி, வெற்றிகரமாக நடத்துவது எளிதான காரியமா?
நிச்சயமாக கடினம்தான். இன்றைக்கு பொருளாதார அடிப்படையில்தான் இயக்கங்கள் இயங்க வேண்டிய சூழல் உருவாகிவிட்டது. ஏற்கெனவே களத்தில் பல கட்சிகள் உள்ளன. இன்று ஓர் இயக்கம் தொடங்கினால் மாநில அளவில், மாவட்ட அளவில், கிராமங்களில் பகுதிச் செயலாளர் வரை நியமிக்க வேண்டும். தமிழகம் முழுவதும் தெருத் தெருவாக சுற்ற வேண்டும். கிராமத்தில் இருக்கும் கடைநிலை தொண்டன் வரை புரியும்படி தன் கருத்துகளை எடுத்துச் சொல்ல வேண்டும். இன்று அது சாத்தியமா என்றால் கேள்விக்குறிதான். ‘பாப்புலாரிட்டி’ ஒருபோதும் ஓட்டாக மாறாது என்பதை இவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
ஏன், ரசிகர்கள் தொண்டர்களாக மாற மாட்டார்களா?
அவர்களை முழுமையாக மாற்ற முடியாது. ரசிகர்கள் வேறு; தொண்டர்கள் வேறு. என் அனுபவத்திலேயே அதை உணர்ந்திருக்கிறேன். நான் திமுகவில் இணைந்தபோது, அதிமுகவைச் சேர்ந்த என் ரசிகர்கள் எத்தனை பேர் என் படத்தை பார்ப்பதையே தவிர்த்தார்கள் என்பது எனக்கு தெரியும். குறைந்தது 30 சதவீதம் ரசிகர்களாவது விலகிவிடுவார்கள்.
சாதி அரசியல் போன்ற நேரடி பின்புலம் இல்லாமல் அரசியலுக்கு வரும் கமல், ரஜினி போன்றோர் தாக்குபிடிக்க முடியுமா?
அரசியலில் தாக்குபிடிக்க சாதி பின்புலம் தேவை இல்லை. சாதிரீதியான அரசியலைத் தொடங்கிவைத்தது திராவிட இயக்கம்தான். என்னையும் அந்தக் கூட்டுக்குள் அடைக்க முயன்றனர். ஆனால், நான் பொதுவானவன். மேலும், நானும் முதல்வர் வேட்பாளர்தான். பொதுவான மனிதர்களால் மட்டுமே தமிழகத்தை ஆள முடியும். ரஜினி, கமலுக்கும் இது பொருந்தும்.
அரசியலுக்கு வந்தால் நேரம் காலம் பார்க்காமல் உழைக்க வேண்டும். சேற்றில் இறங்கி நடக்க நேரிடும். ‘ஏசி’ அறையிலேயே இருக்கிற நடிகர்களால் அது சாத்தியமா?
விஜயகாந்துக்கும், எனக்கும் சாத்தியமாகியுள்ளது. மற்றவர்களுக்கு சாத்தியமாகுமா என்று தெரியவில்லை. சொல்லப்போனால் மற்றவர்களால் எங்கள் அளவுக்கு செயலாற்ற முடியாது என்பதே உண்மை.
தமிழக அரசியலில் எம்ஜிஆர், ஜெயலலிதா அளவுக்கு நடிகர்கள் யாரும் காலூன்ற முடியவில்லையே, ஏன்?
அவர்கள் காலகட்டம் வேறு. எம்ஜிஆர், ஜெயலலிதா இருவரும் அரசியலில் இரண்டறக் கலந்துவிட்டார்கள். எம்ஜிஆர் முதலில் ஒரு காங்கிரஸ் அனுதாபியாக இருந்து திமுகவுக்கு வந்தார். அண்ணா அவரை அருகிலேயே வைத்திருந்தார். சினிமாவில்கூட கருப்பு, சிவப்பு பேன்ட் அணிந்தே நடித்தார். கட்சிக் கொடியைப் பறக்கவிட்டார். கட்சிக்காக கடுமையாக உழைத்தார். அவரது ‘ரீல் இமேஜ்’, ‘ரியல் இமேஜ்’ இரண்டும் பொருந்திப்போனது. மக்களும் அதை உணர்ந்தார்கள். பின்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் சொந்தமாக கட்சி ஆரம்பித்தார். தொடர்ந்து உழைத்தார். ஜெயலலிதாவும் அப்படித்தான். இந்த இடத்தை அடைய பட்ட துன்பங்கள் கொஞ்சநஞ்சம் அல்ல. சட்டப்பேரவையில் இழிவுபடுத்தப்பட்டார். நான் மறுபடியும் முதல்வராகத்தான் இந்த மன்றத்தின் படியை மிதிப்பேன் என்று சபதம் ஏற்று, அதை செய்தும்காட்டினார். அவர்கள் முழு மூச்சாக கட்சிப் பணி, மக்கள் பணி ஆற்றினார்கள். நான் முதலில் ஓர் இயக்கத்தில் சேர்ந்தேன். ஒருகட்டத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வெளியே வந்து தனியாக கட்சி தொடங்கினேன். அரசியல் பயணத்தில் அனைவருக்குமே ஓர் இலக்கு இருக்கிறது. இதுவரை இரு பெரும் கட்சிகள் களத்தில் தீவிரமாக இருந்ததால் எனது இருப்பு பெரிதாக வெளியே தெரியவில்லை. என்னால் அந்த இலக்கை அடையவும் முடியவில்லை. இனி எனது கட்சியின் ஆற்றல், அறிவு, உழைப்பு, வெற்றி அனைத்தையும் பார்ப்பீர்கள்.
60 ஆண்டுகாலம் அமைதியாக இருந்துவிட்டு, ரசிகர் மன்றம் மூலம் சிறு சிறு நற்பணிகளை மட்டும் செய்துவிட்டு, இப்போது திடீரென அரசியலுக்கு வருவது ஆரோக்கியமானதா?
ஆரோக்கியமானது இல்லை. கமலிடம் ஒன்று கேட்கிறேன். புதிதாகப் படித்து முடித்தவர் எந்த அனுபவமும் இல்லாமல், வேலைக்குச் சேரலாம். அரசியலுக்கு இது பொருந்துமா? உங்களுக்கு இங்கே என்ன அனுபவம் இருக்கிறது? 1996-ல் இருந்து நீங்களும் இருக்கிறீர்கள், நானும் இருக்கிறேன். ஆனால், இத்தனை காலம் எதற்காவது நீங்கள் கருத்து சொல்லியிருப்பீர்களா? துணிச்சலாகப் பேசியிருப்பீர்களா? அந்தக் காலகட்டங்களில் ஊழலே நடக்கவில்லையா? திமுகவிடம் நீங்கள் உறவாடியபோதுதானே 2ஜி ஊழல் நடந்தது. அதுகுறித்து ஏதேனும் சொல்லியிருக்கிறீர்களா? போபர்ஸ் ஊழல் குறித்து கருத்து சொன்னீர்களா?
ரஜினி, கமல் இருவரையுமே கேட்கிறேன். இத்தனை காலம் எதிலுமே தலையிடாமல், பொதுவெளியில், அரசியலில் எந்தக் கருத்தும் சொல்லாமல் பாதுகாப்பாக இருந்துவிட்டு இப்போது திடீரென அரசியல் பேசுவது ஏன்? 1996-ல் ஓர் இயக்கத்தின் ஊழலை எதிர்த்து கடுமையாகப் பிரச்சாரம் செய்தேன். துணிச்சலாகப் பேசினேன். அடுத்து அவர்கள் ஆட்சிக்கு வந்தால் என்னை என்ன வேண்டுமானாலும் செய்திருக்கலாம். ஆனால், நான் பயப்படவில்லை. ரஜினிகாந்த் என்ன செய்தார்.. ‘அவர்கள் ஆட்சிக்கு வந்தால் ஆண்டவனாலும் தமிழகத்தைக் காப்பாற்ற முடியாது’ என்று சொல்லிவிட்டு அமெரிக்காவுக்குப் போய்விட்டார். அவர் பிரச்சாரத்துக்கா வந்தார்? ஆனால், நான் பிரச்சாரத்துக்கு வந்தேன். அதே ரஜினி பின்னாட்களில் ‘ஆண்டவன் சொன்னால் அரசியலுக்கு வருவேன்’ என்று சொல்வது எல்லாம் ஏற்றுகொள்கிற விஷயமா? ‘என்னை வாழவைத்தது தமிழ்’ என்கிறார் ரஜினி. அப்படி வாழவைத்த தமிழ் மக்களுக்காக ஏதேனும் செய்ய வேண்டும் என்றால், ‘இப்போது வருவேன், இல்லை 10 ஆண்டுகள் கழித்து வருவேன்’ என்று ஏதோ ஒன்றை தெளிவாக சொல்லியிருக்கலாமே. இதுவரை சொல்ல முடியவில்லை. இப்போது கமல் முந்திக்கொண்டுவிட்டார். அரசியல் களம் என்பது இவர்கள் நினைப்பதுபோல் அல்ல. அரசியல் களம் வேறு. சுருக்கமாகச் சொல்வதானால், இவர்கள் ஒன்றும் எம்ஜிஆர் கிடையாது.
தற்போது பெரிய ரெய்டு நடந்து, கணக்கில் வராத சொத்துகள் ஏராளமாக கைப்பற்றப்பட்டுள்ளன. இவை எல்லாம் ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது சம்பாதித்தவை என்கின்றனர். ஊழலுக்கு எதிராகப் பேசியதாகக் கூறிய நீங்கள், இப்போது அதுபற்றி பேசுவீர்களா?
அளவுக்கு மீறி சொத்து சேர்ப்பவர்களைக் கண்காணிக்க வருமானவரித் துறைக்கு உரிமை இருக்கிறது. இந்த ரெய்டுகள் உண்மையாக இருந்தாலும் இதன் பின்னால் அரசியல் இருக்கிறது. இதை 5 ஆண்டுகளுக்கு முன்பே செய்திருக்கலாமே. பாஜக மறைமுகமாக தமிழகத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஒன்றுதான் இந்த ரெய்டு.
பின்னணியில் அரசியல் இருக்கிறது என்றாலும்கூட, அதிகார துஷ்பிரயோகமின்றி ஒருவரால் இத்தனை சொத்துகளை அடைய முடியுமா?
சந்தேகம் வருவது இயல்புதான். அவர்கள் இவ்வளவு சொத்து சேர்த்ததற்கு கணக்கு காட்டியாக வேண்டும். ஊழல் செய்திருந்தால் பதில் சொல்லியாக வேண்டும். யார் செய்தாலும் குற்றம் குற்றமே.
சில மாதங்களுக்கு முன்பு டிடிவி தினகரனை சந்தித்து ஆதரவு தெரிவித்தீர்கள். உங்கள் வீட்டிலும்கூட ரெய்டு நடந்தது. இப்போது ரெய்டு நடந்துள்ள நிலையில், உங்கள் நிலைப்பாடு என்ன?
யார் செய்தாலும் குற்றமே. யார் தவறு செய்தாலும் தட்டிக் கேட்பேன். அதுவே என் நிலைப்பாடு.
இவ்வாறு சரத்குமார் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago