அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரணைக்காக காவலில் எடுத்தது அமலாக்கத் துறை

By செய்திப்பிரிவு

சென்னை: ஆகஸ்ட் 12-ம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அனுமதியளித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், புழல் சிறையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற உத்தரவு நகலை புழல் சிறை அதிகாரிகளிடம் வழங்கிய அமலாக்கத் துறை அதிகாரிகள், அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்தனர். மூன்று வாகனங்களில் வந்த அமலாக்கத் துறை அதிகாரிகள், துப்பாக்கி ஏந்திய சிஆர்பிஎஃப் காவலர்களின் உதவியோடு செந்தில் பாலாஜியை அழைத்துச் சென்றனர். பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு செந்தில் பாலாஜி அழைத்து வரப்படுகிறார். அங்கு வைத்து ஆகஸ்ட் 12-ம் தேதி வரை ஐந்து நாட்கள் விசாரணை நடைபெறவுள்ளது.

வழக்கின் பின்னணி: அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்த நிலையில், அவரை விடுவிக்கக் கோரி அவருடைய மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர். இதையடுத்து, இந்த வழக்கை விசாரித்த, 3-வது நீதிபதியான சி.வி.கார்த்திகேயன், நீதிபதி டி.பரத சக்கரவர்த்தியின் தீர்ப்பை உறுதி செய்தார். அவர் தனது தீர்ப்பில், செந்தில் பாலாஜியும் சட்டத்துக்கு உட்பட்டவர்தான் என்பதால் அவரை அமலாக்கத் துறை கைது செய்தது செல்லும் என்றும், அவர் பரிபூரணமாகக் குணமடைந்த பிறகு அவரை காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்றும் தீர்ப்பளித்தார்.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து திங்கள்கிழமை தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், செந்தில் பாலாஜியை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அனுமதியளித்தும் உத்தரவிட்டது. இதையடுத்து, செந்தில் பாலாஜியை காவலில் எடுக்க அனுமதி கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அமலாக்கத் துறை தரப்பு வழக்கறிஞர், உச்ச நீதிமன்ற உத்தரவின் நகலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அப்போது செந்தில் பாலாஜி தரப்பில், "அமலாக்கத் துறை காவலில் எடுத்து விசாரிக்கும் நாட்களில், தினமும் இருமுறை காவேரி மருத்துவமனையில் பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும்" என கோரிக்கை வைக்கப்பட்டது.

அப்போது அமலாக்கத் துறை தரப்பு வழக்கறிஞர், "உச்ச நீதிமன்றத்தில் இன்று காலை கூட செந்தில் பாலாஜியின் உடல் நிலை குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதற்கு உச்ச நீதிமன்றம், அமலாக்கத் துறை கவனித்துக் கொள்ளும் என கூறியது" என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், இது தொடர்பாக, எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. அமலாக்கத் துறையினர், செந்தில் பாலாஜி உடல் நிலையை கவனித்துக் கொள்ள வேண்டும் எனக் கூறி, ஆகஸ்ட் 12-ம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறை வசம் ஒப்படைத்து உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்