புதுச்சேரி: “நாட்டிலுள்ள அனைத்து மொழிகளும் என் மொழிதான்” என்று புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பேசினார். புதுவையின் வளர்ச்சியில் மத்திய அரசு அக்கறை கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு முதல்முறையாக புதுவைக்கு 2 நாள் அரசு முறை பயணமாக இன்று வந்தார். சென்னையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுவை லாஸ்பேட்டை விமான நிலையத்திற்கு வந்த அவரை, துணைநிலை ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அரசியல் கட்சி தலைவர்கள் பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் வரவேற்றனர். தொடர்ந்து அவர் அங்கிருந்து சாலை மார்க்கமாக காரில் ஜிப்மர் வளாகத்துக்கு வந்தார். ஜிப்மர் புற்றுநோய் சிகிச்சை மையத்தில் புதிதாக ரூ.17 கோடியில் நிறுவப்பட்டுள்ள புற்றுநோயாளிகளுக்கான கதிரியக்க சிகிச்சை கருவியை இயக்கி, அதனை மக்களுக்கு அர்ப்பணித்தார்.
அதைத் தொடர்ந்து ஜிப்மர் அப்துல் கலாம் கலையரங்கத்துக்கு வந்தார். அங்கு விழா தொடங்கியது. முதல்வர் ரங்கசாமி வரவேற்றார். துணைநிலை ஆளுநர் தமிழிசை சிறப்புரையாற்றினார். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு புதுவை வில்லியனூர் ஒதியம்பட்டு சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆயுஷ் மருத்துவமனையை காணொலி மூலம் திறந்து வைத்தார்.
அதையடுத்து, புதுவை ஜிப்மரில் நடந்த விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பேசியது: ''புதுவைக்கு வந்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட அரசியல் தலைவர்களில் ஒருவரான அரவிந்தரின் 150-வது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நடைபெறும்போது இங்கு வந்திருப்பது மகிழ்ச்சி தருகிறது. நாட்டுக்கு முழு சுதந்திரம் தேவை என்ற விருப்பத்தை வந்தே மாதரம் பத்திரிகையில் வெளிப்படுத்திய இந்தியாவின் முதல் அரசியல் தலைவர்களில் அரவிந்தரும் ஒருவர்.
» பிடிஆர் ஆடியோ விவகாரம்: சிபிஐ விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
» ஆவடி சாலைகளில் பயணம் அசந்தால் குட்டிக் கரணம்: மோசமான சாலைகளால் திணறும் வாகன ஓட்டிகள்
ஒடிய மொழியில் என்னை வரவேற்றாலும், இப்பொறுப்பேற்ற பிறகு அனைத்து மொழிகளும் என் மொழிதான். புதுச்சேரி வரலாற்றின் வெவ்வேறு கட்டங்களில் வெவ்வேறு காரணங்களுக்காக வெவ்வேறு மக்களை ஈர்த்துள்ளது என்பது மிகவும் சுவாரஸ்யமானது. 350 ஆண்டுகளுக்கு முன்பு புதுச்சேரியில் பிரெஞ்சுக்காரர்கள் தங்கள் வர்த்தக நிலையங்களை நிறுவினர். இந்தியாவில் பிரெஞ்சுப் பகுதிகளின் கவர்னர் ஜெனரலாக இருந்த டுப்ளே, புதுச்சேரியை பிரெஞ்சுக்காரர்களின் பெரும் கோட்டையாக மாற்ற விரும்பினார். பிரெஞ்சுக்காரர்களின் காலனித்துவ விருப்பத்துக்கு முற்றிலும் மாறாக, அரவிந்தரோ 20-ஆம் நூற்றாண்டில் இந்த இடத்தை ஆன்மிக ஆறுதலுக்கான சிறந்த உறைவிடமாகத் தேர்ந்தெடுத்தார். புதுச்சேரியின் ஒவ்வொரு பகுதியிலும் வழிபாட்டுத் தலங்கள் காணப்படுகின்றன.
புதுவையில் மணக்குள விநாயகர், திருக்காஞ்சி கோவில்களில் தரிசனம் செய்து கடவுள்களின் ஆசிர்வாதம் பெற திட்டமிட்டுள்ளேன். புதுவையின் ஆன்மிக அம்சங்களில் யோகாவும் முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது. சர்வதேச யோகா விழா நடத்தி யோகாவை புதுவை ஊக்குவிக்கிறது. புதுவையில் வசித்தவர்கள் சுதந்திர போராட்டத்தின்போது இந்திய மக்களோடு சமமாக செயல்பட்டனர். புதுவை சிறந்த எழுத்தாளர்கள், சுதந்திர போராட்ட வீரர்களின் தாயகமாக திகழ்ந்துள்து. பாரதிதாசன் இங்கு பிறந்தவர். மகாகவி பாரதியார் இங்கே வசித்து சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தார். வி.வி.எஸ்.ஐயர் சிறந்த தமிழ் அறிஞர், சுதந்திர போராட்டத்தில் புதுவையில் தங்கி பங்கேற்றார். புதுவையின் அரசியல், சமூகவியல் அசாதாரணமானது. புதுவை, காரைக்கால், மாகி, ஏனாம் என 4 பிராந்தியங்களையும், மொழி வேற்றுமையில் ஒற்றுமை என கலாசாரம், பாராம்பரியத்தை முனனெடுத்துச் செல்கிறது.
இங்கு பலதரப்பட்ட கலாசார நீரோட்டங்களின் கலவையைக் காண்கிறோம். புதுவையின் கட்டிடக்கலை, திருவிழாக்கள், வாழ்க்கை முறை பல்வேறு தாக்கங்களை பிரதிபலிக்கிறது. பிரான்ஸ், இந்தியா இடையிலான நட்புறவின் வாழும் பாலமாக புதுவை விளங்குகிறது. அளவில் சிறியதாக இருக்கும் இந்த யூனியன் பிரதேசம் மிகவும் அழகானது. இது "சிறியது அழகாக இருக்கிறது" என்ற வெளிப்பாட்டை உறுதிப்படுத்துகிறது.
சர்வதேச அளவில் புதுவை சமூக முன்னேற்றத்தில் முதலிடத்தில் உள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. கல்வியறிவில் புதுவை முதலிடத்தில் உள்ளது பாராட்டுக்குரியது. புதுவையில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் கல்வி கற்க மேல்படிப்புக்காக வந்து செல்கினற்னர். ஜிப்மர் அப்துல் கலாம் அரங்கில் நாம் உள்ளோம். அவரின் பங்களிப்புகளை நாம் நினைவில் கொள்ள வேண்டும். மருத்துவ நோக்கங்களுக்காக பாதுகாப்பு ஆராய்ச்சியை பயன்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
ஜிப்மில் திறந்து வைக்கப்பட்டுள்ள கதிரியக்க சிகிச்சை மூலம் மேம்பட்ட சேவையை புற்றுநோயாளிகளுக்கு அளிக்க முடியும். ஆயுஷ் மருத்துவமனை புதுவை மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். புதுவை ஆன்மிக சுற்றுலாவுக்கு அற்புதமான இடம். உலகளவில் ஆன்மிக சுற்றுலா வேகமாக பரவி வருகிறது. இது சமூக பொருளாதாரத்துக்கு வலுவான ஊக்கத்தை அளிக்கும்.
புதுவையின் வளர்ச்சியில் மத்திய அரசு அக்கறை கொண்டுள்ளது. புதுவையின் சுற்றுலாவை மேம்படுத்த சுதேஷ் திட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து சுற்றுலா திட்டங்களை மேம்படுத்தி வருகிறது. புதுவை தேசியளவில் தனித்துவமான அடையாளத்தை பெற்றுள்ளது. புதுச்சேரியை இன்னும் அதிக வளர்ச்சி மற்றும் சிறப்பான நிலைக்கு மக்கள் கொண்டு செல்வார்கள். புதுவை மக்கள் அனைவருக்கும் பிரகாசமான, வளமான எதிர்காலம் அமைய என் வாழ்த்துகள்'' என்று குறிப்பிட்டார்.
பதவியேற்புக்கு பின்னர் முதல்முறையாக புதுவை வந்துள்ள குடியரசுத் தலைவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. அதை குடியரசுத் தலைவர் மேடைக்கு கீழே அமர்ந்து ரசித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
41 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago