‘மாணவனுக்கு நாளொன்றுக்கு ரூ.33, சிறைக் கைதிக்கோ ரூ.185’ - கவலைக்குரிய அரசு பள்ளி மாணவர் விடுதிகள்

By ந.முருகவேல் 


கள்ளக்குறிச்சி: ஒவ்வொரு மாவட்டத்திலும் இயங்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கான விடுதிகளில் மாணவர்களின் நிலையும், காப்பாளரின் நிலையும் கவலைக்குரியதாகவே காணப் படுகிறது. ஆதரவற்ற மாணவர்கள், புலம்பெயர் தொழிலாளர்களின் பிள்ளைகள், வறுமை நிலையில் உள்ள மாணவர்கள் ஏழ்மை காரணமாக பள்ளிப் படிப்பை கைவிட்டுவிடுவதை தடுக்கும் வகையில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்காக அரசு விடுதிகள் செயல்படுகின்றன.

இந்த விடுதிகளில் சேர்ந்து பயில பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். பள்ளியில் இருந்து 5 கி.மீட்டர் சுற்றளவுக்கு மேல் வசிக்கும் மாணவர்கள் இந்த விடுதியில் தங்கி படிக்கலாம். இந்த நிபந்தனைகள் மாணவிகளுக்கு பொருந்தாது.

அரசு விடுதியில் உள்ள மாணவர்க ளுக்கு காலை இட்லி, ரவா கிச்சடி, பொங்கல் மற்றும் எலுமிச்சை சாதம், மதியம் முட்டையுடன் கூடிய சாதம், சாம்பார், பொரியல், மாலை சுண்டல், சுக்குமல்லி காப்பி மற்றும் தேநீர், இரவு சாதம், காரக் குழம்பு, பொரியல் உள்ளிட்ட உணவு வகைகள் வழங்க வேண்டும்.

மாதத்தில் இரு நாட்கள் ஆட்டுக்கறி, கோழிக்கறி வழங்க வேண்டும். அந்த வகையில் ஒரு மாணவருக்கு ஒரு நாளுக்கு ரூ.33 வீதம் மாதத்துக்கு ரூ.1,000, இதுதவிர சோப்பு, சிகை அலங்கார செலவு என ரூ.100 மாதம் தோறும் மாணவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது.

அந்த வகையில் கடந்த 2022-23 நிதியாண்டில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறையின் கீழ் இயங்கும் 27 விடுதிகளில் 1,928 மாணவர்களும், ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் 40 விடுதிகளில் 2,311 மாணவர்களும் தங்கி பயின்றதாக பதிவேடு வாயிலாக தெரியவந்துள்ளது. இதன்மூலம் அந்த ஆண்டில் ஆதிதிராவிடர் நலத்துறை விடுதி மாணவர்களுக்கான மொத்த செலவினத் தொகையாக ரூ.2 கோடியே 66 லட்சத்து 5 ஆயிரத்து 71 என பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் செலவின கணக்குகள் ரூ.2 கோடியே 29 லட்சத்து 26 ஆயிரத்து 345 எனத் தகவல் தெரியவந்தது. இந்த தகவலின் உண்மைதன்மைக் குறித்து கேட்டபோது, அதை உறுதிசெய்ய அத்துறை கண்காணிப்பாளராக பணியாற்றிய விஜயன் மறுத்து விட்டார். இதேபோல் கடலூர் மாவட்டத்தில் 2022-23 நிதியாண்டில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் இயங்கும் 57 விடுதி களில் 4,361 மாணவர்கள், ஆதிதிராவிடர் நலத்துறை கீழ் இயங்கும் 61 விடுதிகளில் 4,978 மாணவர்கள் தங்கி பயின்றதாக பதிவேடு வாயிலாக தெரியவந்தது.

உளுந்தூர்பேட்டை அடுத்த பாலியில் உள்ள அரசு
ஆதி திராவிடர் நல மாணவர் விடுதியில் உணவு குறைந்த
எண்ணிக்கையில் உணவு உண்ணும் மாணவர்கள்

இதில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மாணவர்களுக்கு செலவினமாக ரூ.4 கோடியே 82 லட்சத்து 25 ஆயிரத்து 125-ம், ஆதி திராவிடர் நலத்துறை கீழ் இயங்கும் மாணவர்களுக்கான செலவினமாக ரூ.5 கோடியே 13 லட்சத்து 675 என பதிவேடு வாயிலாக தெரியவந்துள்ளது. இந்த அளவுக்கு நிதி ஒதுக்கி மாணவர் களுக்கு செலவிடப்பட்ட நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசு விடுதிகளில் மாணவர்களுக்கு ஒரு வேளை மட்டுமே உணவு வழங்கப்படுகிறது.

அரசு வழங்கக் கூடிய சீருடை, பாய், போர்வை உள்ளிட்டவை வழங்காமல் விடுதி காப்பாளர்கள் ஏமாற்றுவதாக புகார் எழுந்தது. குறிப்பாக உளுந்தூர்பேட்டை வட்டம் பாலியில் உள்ள ஆதி திராவிடர் மாணவர் விடுதியில் காலை உணவு வழங்குவதில்லை. மதியம் மட்டுமே உணவு வழங்கப்படுகிறது. குடிநீர் சுகாதாரமற்ற முறையில் உள்ளது. கை அலம்பும் பகுதி தூய்மைப் படுத்தப்படாமல் கழிவுநீர் தொட்டி போல் காட்சியளிப்பதாக மாணவர்கள் கவலை தெரிவித்தனர்.

55 மாணவர்கள் என பதிவேட்டில் இருந்தாலும், பாலி, எலவனாசூர்கோட்டை, தொட்டியம், சின்னசேலம், கூத்தக்குடி உள்ளிட்ட விடுதிகளில் பதிவேட்டில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையை விட மிகக் குறைந்த அளவிலேயே இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் கடந்த 2020-21, 2021-22 நிதியாண்டுகளில் கரோனா காரணமாக மாணவர்கள் தங்காத நிலையிலும் இத்துறையில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்துள்ளது.

கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் உள்ள அரசு விடுதிகளில் அனுமதிக்கப்பட்ட மாணவர்கள் எண்ணிக்கையில் 25 சதவீதமே தங்கி பயில்வதாகவும், இரவு நேரங்களில் மாணவர்கள் தங்குவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுதொடர்பாக சில விடுதிக் காப்பாளர்களிடம் பேசியபோது, "மாண வர்கள் விரும்பி விடுதிக்கு வருகின்றனர். விடுதியில் பராமரிப்பு குறைவு காரணமாக பெயரளவுக்கு தங்குகின்றனர்" எனத் தெரிவித்தனர். அதே நேரத்தில் மாணவர்களிடம் கேட்டபோது, "சரியான உணவு வழங்குவதில்லை. விடுதி முறையாக பராமரிக்கப் படுவதில்லை என்பதால் வீட்டுக்கு சென்று விடுகிறோம். மதியம் மட்டும் இங்கு உணவு சாப்பிட வருகிறோம்" என்றனர்.

உளுந்தூர்பேட்டை அடுத்த பாலியில் உள்ள அரசு ஆதி திராவிடர் நல மாணவர்
விடுதியில் மாணவர்கள் கை அலம்பும் தொட்டியில் உள்ள துடைப்பம், வாளி.

இதுதொடர்பாக அரசு பள்ளி பாதுகாப்பு இயக்கத் தலைவர் திருப்பதி கூறுகையில், "ஒரு மாணவருக்கு மாதம் ரூ.1,000 வீதம், 10 ஆயிரம் மாணவர்களுக்குக் கணக்கிட்டால் ரூ.1 கோடி வருகிறது. இதில் ரூ.25 லட்சம் மட்டுமே உண்மையான பயனாளிகளுக்குச் செல்கிறது. மீதமுள்ள ரூ.75 லட்சம் கபளீகரம் செய்யப்படு வதாகவே அறிகிறேன்.

கோழி இறைச்சி மட்டும் சாப்பிடக் கிடைக்கும். ஆனால் ஆட்டிறைச்சி கணக்கில் மட்டும் காட்டப்பட்டு இருக்கும். அரசு விடுதிகள் அதிகாரிகளின் ஏடிஎம்-ஆக மாறிவிட்டது என்பது தான் நிதர்சனமான உண்மை" என்றார். இதில் சில கடமை உணர்வுமிக்க மனிதநேயம் கொண்டவர்களும் இத்து றையில் உள்ளனர்.

இதுகுறித்து பெயர் சொல்ல விரும்பாத அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஆங்காங்கே சில தவறு கள் நடக்கின்றன. இன்றைய சூழலில் மாணவர்களை காப்பாளர்களால் கட்டுப்படுத்த முடியமா? உணவுக்காக ஒரு சிறைக்கைதிக்கு நாளொன்றுக்கு ரூ.185 ஒதுக்கீடு செய்யும் அரசு, ஒரு மாணவனுக்கு ரூ.33 வீதம் மாதத்துக்கு ரூ.1,000 ஒதுக்கீடு செய்வது எந்த விதத்தில் நியாயம்? " எனக்குறிப்பிட்டனர்.

இதுபோன்று நடைமுறையில் நிலவும் சிக்கலை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். அப்போது தான் அரசு விடுதியும் மாணவனுக்கான வீடாக மாறும். விளிம்பு நிலை மாணவர்களின் வாழ்விலும் கல்வி ஒளியேற்ற முடியும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

55 mins ago

தமிழகம்

26 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்