சென்னை அரசு மருத்துவமனையில் கை அகற்றப்பட்ட ஒன்றரை வயது ஆண் குழந்தை உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை அரசு மருத்துவமனையில் கை அகற்றப்பட்ட ஒன்றரை வயது ஆண் குழந்தை உயிரிழந்தது.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தஸ்தகீர் - அஜிஸா தம்பதியரின் ஒன்றரை வயது மகன் முகமது மகிர். சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கடந்த ஜூன் மாதம் குழந்தைக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையால் வலது கை கறுப்பாக மாறியதுடன் செயலிழந்து, அழுகியது.

பின்னர், எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட குழந்தையின் வலது கை தோள் பட்டை வரை அகற்றப்பட்டது. குழந்தையின் கை அகற்றப்பட்டதால் வேதனை அடைந்த பெற்றோர், குழந்தைக்குத் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாகக் குற்றம்சாட்டினர். சம்பந்தப்பட்ட மருத்துவர், செவிலியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுத்தனர்.

சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவின்படி, குழந்தைக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரணை நடத்த மருத்துவமனையின் 3 மருத்துவர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு குழந்தையின் பெற்றோர், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டவர்களிடம் விசாரணை நடத்தி இறுதி அறிக்கையை சுகாதாரத் துறையிடம் சமர்ப்பித்தது.

அந்த விசாரணை அறிக்கையில், “குழந்தை முகமது மகர் குறைப் பிரசவத்தில், குறைந்த எடையுடன் பிறந்துள்ளார். குழந்தையின் இதயத்தில் ஓட்டை, தலையில் ஏற்பட்ட ரத்தக்கசிவால் மூளை மண்டலத்தில் உள்ள நீர் வெளியேறும் பாதையில் அடைப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் இருந்தன. ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் தவறில்லை. குழந்தையின் உயிரைக் காப்பாற்றவே கை அகற்றப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தைக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், நேற்று குழந்தை முகமது மகிர் உயிரிழந்தது.

மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், “குழந்தை முகமது மகிர், குறைப் பிரசவத்தில் 1.5 கிலோ எடையுடன் 32 வாரத்தில் பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு மூளையில் நீர்க்கசிவு பிரச்சினை இருந்தது. இந்த நீர்க்கசிவை உறிஞ்சி எடுப்பதற்காக சிகிச்சை அளிக்கப்பட்டது. வைட்டமின் டி, ஊட்டச்சத்து, வளர்திறன் குறைபாடு கொண்ட குழந்தையின் உடல்நிலை தொடர்ந்து பாதிக்கப்பட்டு வந்தது. இதனால் ஏற்பட்ட பாக்டீரியா தொற்றால், குழந்தையின் ரத்தத்தில் நச்சுக்கள் கலந்ததால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன.

குழந்தைக்கான சில மருத்துவ சிகிச்சைகளுக்கு பெற்றோர் ஒப்புதல் அளிக்கவில்லை. மருத்துவர்கள் சிறந்த முறையில் சிகிச்சை அளித்து வந்த நிலையில், ஆகஸ்ட் 6-ம் தேதி (நேற்று) அதிகாலை 5.42 மணிக்கு குழந்தை உயிரிழந்துவிட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தையின் தயார் அஜிஸா கூறுகையில், “என் குழந்தையைக் கொன்றுவிட்டார்கள். என் குழந்தைக்கு நீதி கிடைக்கப் போராடுவேன். அரசு மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கு பாதுகாப்பு வேண்டும். அரசு அல்லது தனியார் மருத்துவமனையில் குழந்தையை சேர்த்த பிறகு, குழந்தைக்கு என்ன மருந்து கொடுக்கப்படுகிறது. என்ன ஊசி போடுகிறார்கள் என்பதைப் பெற்றோர் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE