மின்வாரியத்துக்கு மானியத் தொகையாக தமிழக அரசு ரூ.227 கோடி வழங்க ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னை: மின்வாரியத்துக்கு ரூ.227 கோடி மானியத் தொகை வழங்குமாறு தமிழக அரசுக்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் குடிசை வீடுகள், விவசாயம் உள்ளிட்ட சில பிரிவுகளுக்கு இலவசம் மற்றும் மானிய விலையில் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. அதற்காக, மின்வாரியத்துக்கு நடப்பு நிதி ஆண்டில் ரூ.14,662 கோடி மானியத்தை விடுவிக்குமாறு தமிழக அரசுக்கு, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கடந்த ஏப்ரலில் உத்தரவிட்டது. காலாண்டுக்கு ஒரு முறை என்ற கணக்கில், முன்கூட்டியே இந்த மானியம் விடுவிக்க வேண்டும்.

இந்த நிலையில், கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் வீடு, கடை, தொழிற்சாலை உட்பட அனைத்து பிரிவுகளுக்கும் யூனிட்டுக்கு 15 காசு முதல் 25 காசு வரை மின்கட்டணம் உயர்த்தப்பட்டது. இதில், வீடுகளுக்கான கட்டண உயர்வை தமிழக அரசு ஏற்றது. குடிசை வீடுகள், விவசாயம், கைத்தறி போன்ற பிரிவுகளுக்கு ஏற்கெனவே வழங்குவதுபோல மானியம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதற்காக, மின்வாரியத்துக்கு இந்த நிதி ஆண்டுக்கு கூடுதலாக ரூ.399 கோடி மானியம் வழங்கப்பட வேண்டும். கடந்த நிதி ஆண்டுக்கான மானியத்தில் ரூ.167 கோடி கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. அந்த தொகை போக, வரும் மார்ச் வரையிலான காலத்துக்கு ரூ.227 கோடி மானியம் வழங்க தமிழக அரசுக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE