கிருஷ்ணகிரி பட்டாசு கிடங்கு விபத்து - தீவிரவாத சதியா என விசாரிக்க தம்பிதுரை எம்.பி. வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பட்டாசு கிடங்கு விபத்து, தீவிரவாதிகளின் சதித் திட்டமா என விசாரிக்க வேண்டும் என்று தம்பிதுரை எம்.பி. வலியுறுத்தினார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே குட்டூரில் கலையரங்கம் மற்றும் பயணியர் நிழற்கூடம் கட்டும் பணியை அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

அமித் ஷாவிடம் கடிதம்: கிருஷ்ணகிரியில் நடந்த பட்டாசு கிடங்கு வெடி விபத்தில் சிலிண்டர் வெடிக்கவில்லை. மக்களை ஏமாற்ற மாநில அரசு பொய்யான தகவலைப் பரப்பி வருகிறது. இதுதொடர்பாக என்ஐஏ விசாரிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் அமித்ஷாவிடம் கடிதம் அளித்துள்ளேன். பட்டாசுக் கடையில் இவ்வளவு பெரிய வெடி விபத்து நடக்க வாய்ப்பில்லை. தீவிரவாதிகள் சதி திட்டம் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து மாநில அரசு விசாரிக்க வேண்டும்.

காவிரி, தமிழகத்தின் ஜீவாதார உரிமை. பெங்களூருக்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், கர்நாடகா நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமாரிடம் காவிரி நீர் குறித்து பேசி இருக்கலாம். அதை தவிர்த்து பிரதமருக்கு ஏன் கடிதம் எழுத வேண்டும்.

மேட்டூர் அணையிலிருந்து சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களின் குடிநீர் தேவைக்காக நீர் எடுத்துக் கொள்வதுபோல, பெங்களூரு மக்களின் குடிநீர்த் தேவைக்கு 18 டிஎம்சி நீரைக் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். அப்படி எடுத்துக் கொண்டால் மேகேதாட்டுவில் அணை கட்ட வேண்டிய அவசியமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE